மெட்ராஸ்

PM
4 min readApr 3, 2021

மெட்ராஸ் ஏன் முக்கியமான படம்?

தலித் அரசியலை பற்றிய இதை விட சிறந்த படம் தமிழில் இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. இதன் பொருள் இந்தப்படம் தான் உச்சம் என்பதல்ல; பேச எவ்வளவோ இருக்கின்றது ஆனால் வேறு ஒரு படமும் இல்லை. பொதுவாக இந்தப் படம் நான்கு கதாப்பாத்திரங்களை வைத்து தலித் அரசியலை அலசியிருப்பதாக பதிவுகளை காணலாம். என்னைப்பொருத்தமட்டில் 6 தரப்புகள் இருப்பதாக பார்க்கின்றேன். அன்பு, முற்பாதியில் வரும் காளி, பிற்பகுதியில் வரும் காளி, மாரி, விஜி, இதுதவிர கலையரசி மற்றும் அவரது அப்பா. இவர்களில் முதலில் இருந்தே ஓரளவு தெளிவுடன் இருப்பவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் கலையரசி அவர்களுடைய அப்பா என்பதும் அது இடதுசாரி அரசியலின் பார்வையால் வந்தது என்பதும் ஏற்கனவே நான் பகிர்ந்த பதிவில் இருக்கும் ஒன்றே. ரஞ்சித் இடதுசாரி அரசியலை படத்தில் முன்வைத்தார் என்று தோன்றவில்லை. தலித்துகளில் இடதுசாரி அரசியலை கொஞ்சமேனும் தழுவியவர்களை பதிவிட்டிருக்கின்றார் என்று மட்டுமே தோன்றுகின்றது. தமது அடையாளத்தின் பெயரால் நிகழும் கொடுமைகளின் விளைவாக மிக இயல்பாக ஒருவர் தழுவக்கூடிய குறுகிய அடையாள அரசியலை புறக்கணித்து இடதுசாரி அரசியலின் மீது நம்பிக்கைகொண்ட பல இடதுசாரி தலித்துகள் நானறிந்தவரை பெரிதும் திரையில் காட்டப்படவே இல்லை. இதற்கு அவர்களிடமோ அல்லது அவர்கள் தழுவிய இடதுசாரி அரசியலிலோ குறையில்லை என்று பொருளல்ல. இந்த அரசியலைத் தழுவும் தலித்துகளிடமும் பல பிரச்சனைகள் இருந்தாலும் இவர்களை ஒரு தரப்பாகவே கருதாதது ஆச்சர்யமில்லை; இதை தலித்தல்லாதோருக்கும் பொருத்திப்பார்க்கமுடியும். நம் சூழல் அப்படி. இன்றைய முற்போக்கு படங்களில்கூட அவரவர் அரசியலுக்கு ஏற்பதான் கதைமாந்தர்கள் அமைகின்றனர். தலித் ஆண்-ஆதிக்க சாதி பெண் இவர்களுக்கிடையே ஏற்படும் காதல் என்பது உட்பட. இதற்கு முக்கியமான அரசியல் காரணங்கள் இருந்தாலும் தலித் பெண்களின் கதாப்பாத்திரங்களை ஒழுங்காக யாரும் இதுவரை படைத்திருப்பதாகத் தோன்றவில்லை (இதற்கும் வெற்று தலித் பெண்ணிய அடையாள அரசியலின் அடிப்படையில் அமைந்த கருத்துகளுக்கும் சம்பந்தமில்லை). Arranged marriage என்பதின் அவலங்களை, அதன் சாதியத்தை நுணுக்கமாக பதிவு செய்த படமும் இல்லை நானறிந்தவரை.

அடுத்ததாக அன்பு தன்னலமற்ற மக்களுக்கான அரசியலைப் பேசும் தலித் என்பதாகவும், காளி படித்து நல்ல வேலையில் இருக்கும் ஆனால் தமது மக்களை மறந்த தன்னலமிக்க தலித் என்பதாகவும் வாசிப்புகள் உள்ளன. ரஞ்சித் இதற்கு எங்காவது ஆமோதிப்பு தெரிவித்திருந்தாலும் கூட, இந்தப்படம் அமைந்த விதம் அப்படி சுருக்கக்கூடிய ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை. முற்பகுதியில் வரும் காளியின் அரசியல் ஈடுபாடல்லாத வாழ்க்கையின், படித்த, ஒரு நல்ல நிலையை அடைந்த இளைஞர்களின் apolitical நிலையின் மீதான விமர்சன பதிவாக நாம் எடுத்துக்கொள்ளலாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் முற்பகுதியில் வரும் காளி கூட அப்படி சுருக்கிவிடக்கூடிய ஒரு கதாப்பாத்திரமாக இல்லை. கோபக்கார இளைஞனான காளிக்கு இருக்கும் அரைகுறை அரசியல் புரிதல் என்பது இந்தப்படத்தில் காளிக்கு மட்டுமே உரித்தானது அல்ல. கிட்டத்தட்ட பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் அப்படியே, அன்பு உட்பட. சுத்தமாக அரசியல்வயப்படாதவன் காளி என்பது தவறான வாசிப்பு. உதாரணத்திற்கு சுவரைப்பற்றி அன்பு மற்றும் காளி பேசிக்கொள்ளும் காட்சி. இந்த கதாப்பாத்திரங்கள் இந்தக்காட்சியில் இப்படி பேசிக்கொள்வது கொஞ்சம் திணிப்பு போல இல்லையா என்று தோன்றும் எண்ணத்திற்கு பதிலாக இந்த உரையாடலும் காட்சியும் எத்தனை முக்கியமானது என்ற பதில் எண்ணம் தோன்றும் வகையில் இருக்கும் வசனங்கள். அந்த உரையாடலின் நுணுக்கங்களை விடுத்து ஒட்டுமொத்தமாக அன்புவின் பார்வையை அனைவரும் தழுவியதும், காளியை தன்னலமிக்கவனாகப் பார்த்ததும் வேடிக்கை. அன்புவின் தன்னலமற்ற குணம் பற்றியும், அத்தகைய ‘தொண்டர்கள்’ பலர் மடிவதையும், என்றுமே அரசியலில் மேலெழுந்து வரமுடியாத நிதர்சனத்தையும் நான் பகிர்ந்த பதிவில் ஒருவர் எழுதியிருப்பார். ஆனால் அத்தகைய தொண்டர்களிடம் இருக்கும் குருட்டு நம்பிக்கையையும், அரசியலையும் விமர்சிக்கும் ஒரு பதிவைக்கூட காணமுடியவில்லை. படத்தின் கடைசிப்பகுதியில் காளிக்கு வரும் புரிதலும், அந்த சுவர் காட்சியில் அது வெளிப்படும் விதமும் அற்புதம், முக்கியமாக மக்கள் அரசியலை பேசும் ஒரு வசனம். அன்புவுடையது உண்மையில் மக்கள் அரசியல் அல்லாத, ஆனால் மக்கள் அரசியலென பொதுவாக நம்பப்படும் ஒன்று. ஒரு ‘தலைவனின்’/கட்சியின் மீதான குருட்டு பக்தி எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் மக்கள் அரசியல் இல்லை என்று திட்டவட்டமாக சொல்லலாம். கடைசிப்பகுதியில் வரும் காளியின் அரசியல் அத்தகைய அரசியலின் மாற்று, என் பார்வையில் ரஞ்சித் படத்தில் முன்வைத்த அரசியலே காளி கடைசியில் முன்வைக்கும் பகுத்தறிவு அரசியல்தான். இது முழுமையான அரசியலா என்பது முக்கியம் இல்லை, கட்சி அரசியலின், தேர்தல் அரசியலின் அவலங்களை விமர்சித்து, மாற்றாக மக்களை ‘சிந்திக்க’ சொல்லும் அரசியலை முன்வைத்ததே பாராட்டப்பட வேண்டிய விடயம்.

அன்புவின் தீராத அன்பிற்கோ, தன்னலமற்ற இயல்பிற்கோ மேற்கூறிய விடயம் எந்தவித களங்கத்தையும் ஏற்படுத்திவிடாது எனும்பொழுது இதை சொல்லத் தயங்குவதற்கு என்னைப்பொருத்தமட்டில் ஒரே காரணமே. இந்தவித அரசியல் ஈடுபாட்டையும், அதில் உயிர்துறந்தோரையும் பீடத்தில் வைப்பதையும், மாண்டுபோவதை அரசியலின் உச்சமாகக் கருதி முன்வைப்பதையும் நாம் அடிக்கடி அரசியல் பேசுபவர்களிடத்தே காணமுடியும். அரசியலில் உச்சமாக இத்தகைய தியாகத்தை காணும் போக்கு என்னைப்பொருத்தமட்டில் மிக வசதியான, மிகவும் தன்னலமிக்க போக்கு. வசதி எதனால் என்றால் இத்தகைய தியாகத்தை தாம் செய்யாமல் அதேநேரத்தில் அதை உச்சமென வலியுறுத்திக்கொண்டே மற்றவருடைய எந்த ஒரு அரசியல் செயல்பாட்டையும் கேலி செய்யக்கூடிய, போதாதென சொல்லக்கூடிய வசதி. தன்னலம் ஏனென்றால் அரசியல் மாற்றத்திற்கு இதுபோல சிலர் செத்துமடிவது மட்டுமே வழி என்ற உருப்போடுதலின் மூலம் தொடர்ந்து இதுபோன்ற சிலர் இருக்குமாறு பார்த்துக்கொள்வது, அதற்கு தர்க்கத்தையும் அளிப்பது. இந்த மனப்பான்மையே அன்பு-காளி என்ற கதாப்பாத்திரங்களை அணுகிய விதத்திற்கு காரணம் என்பது எனது கருத்து. இது பொதுவாக ‘woke’ மனிதர்களிடத்தில், பல்வேறு இடதுசாரிகள் உட்பட நான் கண்ட போக்கின் மூலமாக நான் வந்தடைந்த படத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு கருத்தாகவும் இருக்கலாம்.

விஜி மற்றும் மாரி பற்றி மற்றைய பதிவுகளின் பார்வையில் உடன்பாடு உண்டு. மாரி ஒரு காலத்தில் அன்புவை போல இருந்திருக்கமுடியும் என்ற கருத்தைத் தவிர. அதிகாரம், அரசு போன்ற கட்டமைப்புகளையும் மனிதர்களின் மீதான அவற்றின் தாக்கத்தையும் விமர்சிப்பதே ‘structural analysis’, தனி மனிதர்களை அல்ல என்றும், இன்னொரு நேரத்தில் தனி மனிதன்தான் முக்கியம் என்றும் வாய்க்குவந்தபடி பினாத்துவதில் உடன்பாடு இல்லை. மனிதர்களிடம் இந்த கட்டமைப்புகளுக்கு இருக்கும் தாக்கத்தை, அது எவ்வகையிலானதாக இருந்தாலும் ஒரேமாதிரியாகத்தான் பார்ப்பேன் என்பதில் எந்தப்புரிதலும் இருப்பதாகத் தெரியவில்லை. உதாரணத்திற்கு இருத்தியல் காரணங்களுக்காக வன்முறை வாழ்க்கையை தழுவும் விளிம்புநிலை மனிதர்களையும், ஆளும் வர்க்க மனிதர்கள் கட்டவிழ்த்து விடும் வன்முறை அரசியலையும் நான் ‘structural analysis’ வழியாக அதிகார கட்டமைப்புகளின் வெளிப்பாடாகவே புரிந்துகொள்வேன் மற்றபடி இவர்களுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்பதில் ‘structural analysis’ என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த பினாத்தல்களை செய்யும் அரசின்மைவாதிகளுடன் நான் இந்தவிடயத்தில் உடன்படும் ஒரு விடயம் இந்த கட்டமைப்புகளுக்கு தம்மீது இருக்கும் தாக்கத்தை புரிந்து அதை எதிர்த்தவர்களின்மீது இருக்கும் மரியாதை. சுருக்கமாக அதிகார கட்டமைப்பு அன்புவையும் மாற்றியிருக்கும் என்பதை நம்பாமல் இருக்கவே நான் விரும்புகின்றேன்; அப்படியான அன்புவின் மாற்றம் நிகழுமெனில், சில விளிம்புநிலை மக்களின் வாழ்வு போலில்லாமல், அது வெறும் பேராசை மற்றும் சுயநலத்தின் விளைவாக மட்டுமே நிகழுமெனும்பொழுது அன்பு என்ற கதாப்பாத்திரத்தின் தன்மையே பொய் என்பதான நிலைப்பாட்டை நாம் எடுக்கின்றோம் என்று அர்த்தமாகும். அதில் உடன்பாடில்லை; வரலாறெங்கிலும் இப்படியான மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் இந்த மனிதர்களின் ஆரம்பகால வாழ்வையே, அதாவது அவர்களது தன்மையையே நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பது எனது கருத்து. சிலபல விஜிக்களுக்கு கூட அவர்களது அரசியல்களுக்கான அல்லது அரசியலற்ற வாழ்விற்கான காரணிகளைத் தேடலாம், மாரிக்களுக்கு அல்ல.

சுருக்கமாக திராவிட அரசியலில் இருந்து விசிக வின் தலித் அரசியல் வரையிலான அரசியல்கள் மீதான தீவிர விமர்சனமாகவே இந்த படத்தை நான் புரிந்துகொண்டேன். சந்தையூர் பிரச்சனைக்கும் முன்பிருந்தே விசிகவினருக்கு ரஞ்சித்தின் மீது இருக்கும் கோபம் அவர்களும் அப்படியே புரிந்துகொண்டார்கள் என்பதை உணர்த்தியது. இன்று இருவருமே கூட இதை மறுக்கக்கூடும்.

ஓரளவேனும் உருப்படியாக சிரத்தையுடன் ரஞ்சித் படைத்த முற்போக்கு பெண் பாத்திரம் மெட்ராஸ் படத்தின் கலையரசி என்பது எனது கருத்து. கார்த்தியும் சரி தெரேசாவும் சரி ஒழுங்காக நடிக்கவில்லை என்பது வேறு. காளி மட்டுமே முக்கியமென்பதாக இந்த கதாப்பாத்திரம் சில இடங்களில் பேசினாலும், சிலபல அசட்டு காதல்காட்சிகளும் இருந்தாலும் கூட, அதோடு சில மேலோட்டமான, செயற்கையான வசனங்களை பேசினாலும் கூட மற்றைய ரஞ்சித் படங்களில் வரும் கதாப்பாத்திரங்களைப் போல வெறும் நாயகனின் நாயகி போன்ற கதாப்பாத்திரம் அல்ல இது. காலாவில் பெரிதும் சிலாகிக்கப்பட்ட பெண் எந்த சிரத்தையுடனும் உருவாக்கப்பட்ட பாத்திரம் அல்ல என்பது எனது கருத்து. படத்திலேயே பிடிக்காத காட்சி இரண்டு அரசியல்வயப்பட்ட இளைஞர்களும், அப்பாவும் உட்கார்ந்திருக்க நிச்சயதார்த்தத்தில் நடக்கும் வரதட்சணை மற்றும் சீர் பற்றிய உரையாடலும், அந்த மொத்த காட்சியும். எந்தவித விமர்சனப்பார்வையும் இல்லாமல் அந்த காட்சி dowry as gift என்பதை நியாயப்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. எதார்த்தத்தை அப்படியே காட்டியதாக எந்த சப்பைக்கட்டும் கட்டமுடியாத விதத்திலேயே அந்த காட்சி அமைந்திருக்கும், அந்த காட்சிக்கான அவசியமும், முக்கியத்துவமும் இன்றுவரை எனக்கு புரிபடவில்லை.

commercial விடயங்களை பெரும் குறையாக நான் பார்க்கவில்லை. எப்படி படம் எடுத்தாலும் ஒரேமாதிரி வரவேற்பு இருக்கும் என்ற நிலைக்கு வந்தபின் அந்த விவாதத்தை வைத்துக்கொள்ளலாம். இதுபோல சிலபல குறைகளைத் தாண்டி தமிழில் வந்த முக்கியமான படங்களில் ஒன்றாக மெட்ராஸை நான் பார்க்கின்றேன். மெட்ராஸ் ஒன்றுமே இல்லை என்றவிதத்தில் ரஞ்சித்தால் அழகியலிலும் குறைவில்லாமல் தலைசிறந்த படங்களை தரமுடியும் என்று 2014 இல் நினைத்ததிற்கு மாறாக அவரது அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களும் சரி (இன்றும் நேர்மையானதாகவே இருக்கின்றது என்பதை சொல்லியாக வேண்டும்), படங்களும் சரி ஏமாற்றத்தையே தந்திருப்பது வருத்தம்.

பின்குறிப்பு: ஏற்கனவே பகிர்ந்திருப்பதாக பதிவில் சொல்லியிருக்கும் பதிவுகள் கீழே.

http://www.twitlonger.com/show/n_1scbm2t

http://suneelwrites.blogspot.com/2014/09/blog-post_29.html

--

--