மாமன்னன்

PM
3 min readJul 19, 2023

படம் ஆரம்பமாகி சற்று நேரத்திலேயே வரும் flashback பகுதி மாஞ்சோலை படுகொலையை நினைவில் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவே தோன்றியது. கரையேறி பின் அடிபட்டே மூழ்கி இறந்தது, உயிரை கையில் பிடித்து ஓடிச்சென்றது என்று மாஞ்சோலையும் அதைப்பற்றிய அவரது பதிவும் இந்தக்காட்சியில் இருப்பதாகவே தோன்றுகின்றது (நினைவில் இருப்பதை வைத்து எழுதுகின்றேன்; திரும்பத் தேடியெல்லாம் படிக்கவில்லை). இதை வைத்தோ அல்லது இப்படத்தில் வரும் கட்சியின் பெயர் மற்றும் அரசியலை வைத்தோ இந்த படம் திமுக மீது விமர்சனம் வைக்கின்றது என்று புரிந்துகொண்டால் அது முட்டாள்தனம். சோசியல் மீடியாவில் பெருந்தலைகளின் கீச்சுப் பரிமாற்றங்களும், பலதரப்பிலிருந்து வரும் பல்வேறு வகையான பார்வைகளும், ‘விவாதங்களும்’ அப்படியான மாயையை தரக்கூடும். படத்தில் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லாததோடு உதயாநிதியின் அரசியலுக்கு ஏதுவாக எப்படி ஒரு படத்தை எடுக்கலாம் என்று ரொம்ப ‘மெனக்கெட்டு’ எடுத்ததாகவே தெரிகின்றது.

எழுத ஆரம்பித்தபிறகு படத்தைப் பற்றி யோசிக்கும்பொழுது முகத்தில் பளீரென அறையும் ஒரு விடயம் உட்காருவதில்/உட்காரவைப்பதில் இருக்கும் அரசியல். இங்கு சாதியையே மையப்படுத்தியிருந்தாலும் இது சாதியத்தைத் தாண்டி நமது சமூகத்தில் (மற்ற இடங்களிலும் கூட உண்டு) எங்கும் புரையோடிக்கிடக்கும் ஒன்று, தப்பென்றே தோன்றாதவாறு அன்றாட வாழ்க்கையில் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட பழக்கம். எங்கெல்லாம் படிநிலை (hierarchy) இருக்கின்றதோ அங்கெல்லாம் காணக்கூடிய ஒன்று; உதாரணத்திற்கு துப்புரவாளரை வீட்டிலும் சரி மற்ற இடங்களிலும் சரி நடத்தும் விதம். இந்தப் படம் இப்படி ஒரு வாசிப்பை பரவலாகக் கொடுக்குமானால், உன்முக நோக்கை சாதியம் என்பதைத் தாண்டி பரவலாக ஏற்படுத்துமானால் நல்ல விடயம்தான். மற்றபடி பஹத் பாசில் மற்றும் வடிவேலுவின் நடிப்பு தவிர வேறு எதுவுமில்லை. (இங்கு இலக்கிய/கலை ஆர்வலர்கள் கவனிக்கக்கூடிய விடயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை).

இந்த ‘அரசியல்’ படத்தை உதயாநிதி கேட்டு வாங்கியிருந்தால் கூட பரவாயில்லை, எந்தவித சமரசமும் இல்லாமல் தாமே தம் அரசியல் மற்றும் உதயாநிதி அரசியல் இணையும் புள்ளி எங்கே என்ற ‘புரிதலோடு’ எடுத்திருந்தால்தான் இன்னும் கேவலம். கட்சிக்குள் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து MLA வாக இருந்தால்கூட ஒருவர் சந்திக்கும் சாதியத்தை பதிவு செய்ததை விட அதிக கவனம் செலுத்தப்பட்டிருப்பது அது தனிநபரின் சாதியம் என்றும், கட்சிக்கும் அதற்கும் சம்பந்தமில்லாததோடு அப்படியான ஆட்களுக்கு கட்சியில் இடமே இல்லை என்று சொல்லும் தலைமையை உடைய, கொள்கைகளைக் கொண்ட கட்சியாக அந்த கட்சியை பதிவு செய்வதில். குறைந்தபட்சம் உதயாநிதியின் பாத்திரத்தை நேர்மையாக படத்திற்குள் இருக்கும் ஒரு பாத்திரமாக மட்டும் வைத்திருக்கலாம், உதயாநிதியையும் ‘சமூக நீதி’ அரசியலையும் நினைவுபடுத்துவதாகவே படம் இருக்கின்றது. கம்யூனிஸ்ட் ‘லீலா’ விற்கும் உதயாநிதிக்கும் இருக்கும் இருக்கும் வசனங்கள் ஒரு உதாரணம். cringe லெவல் உதாரணம் என்றால் இவ்வளவு நாள் உன்னைப்பற்றி தெரிந்தும் சேராமல் இருந்ததற்கு வருத்தம் என்றும், தவறாக புரிந்துகொண்டு எல்லாம் தெரிந்த நினைப்பில் தள்ளி இருந்ததற்கு வருத்தம் என்று வருத்தத்தை பகிர்ந்துகொள்ளும் காட்சி. பல்வேறான வாசிப்புகள் சாத்தியம், அப்படியே லிட்டரலாக எடுத்துக்கொண்டால் கம்யூனிஸ்ட் vs திராவிட அரசியல், குறியீடு என்று போனால் தலித் vs திராவிட அரசியல், மாரி vs உதயாநிதி,.. ‘கலைஞன்’தான் பல்வேறு வாசிப்புகள் கலையில் சாத்தியம் அதுவே கலையின் உன்னதம் என்றும் முடித்துவிடலாமே. நிர்பந்தத்தினாலோ எதனாலோ வந்த இந்த நேர்மையின்மையால் மாமன்னனை மீட்டெடுக்கும், ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்கும், தலைமை பண்பு கொண்ட இக்கதாபாத்திரத்தை அதிவீரனாக மட்டுமே பார்ப்பது முடியாத காரியமாகின்றது. அதுதான் படத்தின்/உதயாநிதியின்/மாரியின் நோக்கமும் ஆனால் இங்கும் கலைஞன் தப்பித்துக்கொள்வான் அது உன் வாசிப்பு என்று, தமது நோக்கம் மிகத் தெளிவாக வெளிப்படும் சில cringe உதாரணங்கள் தவிர. பரியேறும் பெருமாளில் வெளிப்பட்ட நேர்மையற்ற சின்ன சமரசம் இன்று இவ்வளவு பெரிதாக வளர்ந்து உதயாநிதியில் முடிந்திருக்கின்றது; அல்லது இன்னும் பெரிதாக தொடரலாம். இப்படியான நூதன பிரச்சாரப் படத்தில் ‘லீலா’ என்று பெயர் வைத்தது (அது லீலாவதியை குறிக்குமேயானால்) மரியாதையாகவோ நினைவுகூறலாகவோ தோன்றவில்லை, அயோக்கியத்தனமாகவே தோன்றுகின்றது. மூன்று பொலிடிகல் நிறங்கள்/மூன்று ஆளுமைகளின் படங்களை சேர்ந்து பயோ வைத்திருப்பவர்களின், காலாவில் மூவண்ணம் கண்டு புளங்காகிதம் அடைந்தவர்களின் அரசியல் தெளிவுதான் இப்படத்திலும் இருக்கின்றது.

இப்படியான நூதன அரசியல் படத்தில் ஒரு கம்யூனிஸ்டை ஊறுகாய் போல பயன்படுத்தவேண்டிய அவசியம் என்ன என்பதற்கு சில பதில்கள் இருக்கின்றன. என் வாசிப்பில் மேற்கூறிய இன்றைய போலி/மேம்போக்கு முற்போக்குவாத பிம்பத்திற்கு, கம்யூனிஸ்டுகளால் ஒன்றும் கிழிக்கமுடியவில்லை என்பதான மறைமுக வசனத்திற்கு, கம்யூனிஸ்டுகளுக்கு சாதியை பற்றிய அறிவு ஊட்டப்படவேண்டியிருப்பதாக காண்பிப்பதற்கு. எனக்கு மிகப்பிடித்த பதில் X உடையது, தமிழக கம்யூனிஸ்டுகளை பற்றிய மிகச்சிறந்த portrayal இந்தப்படத்தில் உள்ளது என்பது. இப்படத்தில் வலம்வரும் கதாப்பாத்திரத்தை போல எதற்கு இருக்கின்றோம் என்று தெரியாமல் இருக்கும் தற்போதைய கம்யூனிஸ்டுகளை கணக்கில் கொண்டு பார்த்தால் சரியான பதில்தான். பிரதிநிதித்துவத்தின் போதாமையை வெளிச்சம்போட்டு காட்டுவதாக தோற்றமளிக்கும் படம் பிரதிநிதித்துவதையே உச்சமாகவும் தீர்வாகவும் காண்பிப்பதை கவனிக்கவேண்டும்.

மிக முக்கியமான, யாரும் பேசாத விடயத்துடன் முடிக்கின்றேன், இங்கும் கலைஞன் தப்பித்துக்கொள்வான் என்றாலும். தனியார் கல்வி நிறுவனத்தை உதயாநிதி தகர்த்தெறியும் அந்த காட்சியும், அதை யோசித்த மற்றும் படமாக்கிய கலைஞனின் நேர்மையின்மையும் தான் மாமன்னன். நிஜ வாழ்க்கையில் இருக்கும் நிஜத்தை ஒருமுறை கவனித்துவிட்டு படத்தை கவனித்தால் குமட்டல் வரவேண்டும். அதற்கு உதயாநிதியின்/கட்சியின் கொள்ளை, திடீர் அமைச்சரான வெட்கம்கெட்டத்தனம் போன்றவையே போதுமானது. இதையெல்லாம் விட முக்கியமான இலவச கல்வி, தனியார் கல்வி மற்றும் யார் அதை நடத்துவது, யாருக்கு அதில் லாபம் என்ற கேள்வி யாருக்கும் எழுந்ததாகவே தெரியவில்லை; சாதியத்தை பற்றி பேசுவது முற்போக்கு விடயத்திலிருந்து பண்டமாக, வர்த்தகமாக மாறி, மேம்போக்கு மற்றும் போலி முற்போக்குத்தன முகமூடியாக மாறி பல நாளாகிவிட்டது. மற்ற பேசுபொருள்களை எல்லாம் இல்லாமல் ஆக்கும் செல்வாக்கை அது அடைந்திருப்பது, அதுவும் அடித்தள மக்களின் வாழ்க்கையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை எந்தவிதத்திலும் சரி செய்யாமல், இந்த செல்வாக்கை அடைந்திருப்பது ஏன், எப்படி, எதற்காக என்று யோசிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.

--

--