தமிழகத்தின் இன்றைய முற்போக்கு அரசியல் -5

PM
4 min readJun 27, 2021

முற்போக்காளர்கள்-சில பிரபல உதாரணங்களுடன் விமர்சனங்கள்

தலித் அரசியலை கடைசி பகுதியில் பார்த்திருப்பதால் அதில் சில உதாரணங்களை பார்ப்பதில் இருந்து தொடங்கலாம்.

பொருட்படுத்தக்கூடிய முதல் உதாரணம் விசிக. விசிகவின் ஐந்து முழக்கங்களில் பெயரளவிலும், மேடை பேச்சுக்களில் ஓரிரு வரிகளிலும் ‘வர்க்க முரண்பாடை ஒழித்தல்’, ‘பாட்டாளி மக்களின் அரசியல்’ என்பது இருந்தாலும், விசிகவின் அரசியல் என்பது பிராந்தியம் மற்றும் தமிழ்த்தேசியம், ‘சமூக நீதி’ அரசியல் மற்றும் சனாதன எதிர்ப்பு என்பதாக பொதுவாக இருப்பதும், உண்மையான சாதி ஒழிப்பு, பெண்ணியம் மற்றும் பொதுவுடைமை என்பன இறங்குவரிசையில் வெறும் சொல்லாடல்களாக இருப்பதும், எந்தவித ஆழமான உரையாடல்களையும் சுயவிமர்சனத்தையும் முன்னெடுக்காமல் இருப்பதும்தான் நிதர்சனம்.

இதுதவிர தலைமை என்ற பதத்தை எந்தவித தீவிர விமர்சனத்திற்கும் உரையாடலுக்கும் உட்படுத்தாமல் தமது கட்சியை பற்றிய பெருமையை, துதிபாடுதலை திருமாவளவன் அவர்களின் பல உரைகளிலும், மற்றவர்களது உரைகளில் திருமாவளவனை/தலைமையை பற்றிய துதிபாடுதலையும் நாம் கேட்கமுடியும். உருப்படியான தலைமை என்பது முதலில் இத்தகைய ‘தலைமை’ எனும் பதத்தை தீவிரமாக விமர்சிப்பதாக இருக்கும் (ticking all the boxes யுக்தி அடிப்படையில் எங்கோ ஒரு மூலையில் தலைமை என்பதன் மீது விமர்சனம் வைப்பதை சொல்லவில்லை, மோடி கூட அதை செய்திருப்பதாக நிறுவமுடியும்). பொதுவாக எந்த முற்போக்கு தரப்பினருக்கும் உறுத்தாத இந்த விடயம் கண்டிப்பாக விமர்சனத்திற்குட்படுத்தப்படவேண்டியது. மற்றபடி விசிகவை பற்றி நிறைய முக்கிய விமர்சனங்கள், அது எப்படி சாதியெதிர்ப்பை கூட ஒழுங்காக செய்வதில்லை என்பதிலிருந்து, கட்சிக்காரர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எப்படி சாதியத்தை பேணுகின்றனர், பெண்ணியம் என்பது விசிக அரசியலில் நடைமுறையில் எப்படி வெளிப்படவே இல்லை என்பதுவரை பகைமுரண் மட்டுமல்லாது நட்புமுரணின் அடிப்படையிலேயே ஏற்கனவே விமர்சனங்கள் சில இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. (Hugo gorringe இன் இடதுசாரி பார்வையே இல்லாத ஆனால் முக்கியமான ஆரம்பகால கட்டுரைகள் மற்றும் ஆதவன் தீட்சண்யாவின் சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள், வினவு தளத்தின் கட்டுரைகள் உதாரணங்கள்).

அடுத்த உதாரணம் தலித் அரசியலில் இடதுசாரி அரசியலை முக்கியமாக பார்ப்பதாக புரிந்துகொள்ளப்படும் ராஜ் கௌதமன். இவரது எழுத்துக்களின் மீதான முறையான விமர்சனத்திற்கு இவரை, காலவரிசையையும் கணக்கில்கொண்டு, முழுமையாக வாசித்தபின் எழுதவேண்டும் என்பதால் நான் இவரை முழுதாக வாசித்ததில்லை என்பதை முதலில் பதிவு செய்துவிடுகின்றேன். ஒவ்வொரு இடத்தில் பேசும் அல்லது எதிர்வினையாற்றும் விடயத்திற்கேற்ப பிரதானமாக நாம் பேச தேர்ந்தெடுக்கும் பேசுபொருள்கள் சிறிது மாறுபடுவது இயல்பே. ஆனால் ஒருவரது பிரதான அரசியல் என்பது ஒவ்வொரு இடத்திற்கும் மாறுமானால் அப்படியான நேர்மையின்மை அல்லது தெளிவில்லாத அரசியல்பார்வை பொருட்படுத்தக்கூடிய ஒன்று அல்ல; விமர்சிக்கப்படவேண்டியது. ராஜ் கௌதமன் எனது குறுகிய வாசிப்பில் ஒரு நல்ல சிந்தனையாளர் ஆதலால் தெளிவின்மை என்பது இவரை பொருத்தமட்டில் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம் என்ற புத்தகத்தில் பிரதிநித்துவத்தை இடதுசாரி பார்வையில் விமர்சிக்கின்றார் அதை பிரதானப்படுத்திய நீதிக்கட்சி மற்றும் திராவிட அரசியலை விமர்சிக்கின்றார். அயோத்திதாசரை பற்றிய மற்றொரு புத்தகத்தில் இருக்கும் கூட்டத்தில் விதிவிலக்காக அயோத்திதாசரை சிறிதளவேனும் இடதுசாரி பார்வையில் அணுகியிருப்பார். எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம் எழுதி சில ஆண்டுகளுக்கு பிறகு தொகுக்கப்பட்டு வெளிவந்த பொய் + அபத்தம் = உண்மை என்ற புத்தகத்தில் முழுக்க முழுக்க வெற்று தலித்திய அடையாள அரசியல் பார்வையை வலியுறுத்தியிருப்பார், ஆங்காங்கு அதை தாண்டி செல்வதான பாவனைகள் இருந்தாலும். உதாரணம் அவர் ஒவ்வொரு இலக்கியமாக அலசும் விதமும், தலித் இலக்கியத்திற்கான விமர்சனமில்லா முழு ஆதரவும்; திராவிட இலக்கியத்தின் கலாச்சார/பண்பாட்டு ‘கலக’ இலக்கியத்தை ஆதரிப்பதும், அதே போலான தலித் இலக்கியத்திற்கான எந்தவித விமர்சனப்பார்வையுமற்ற ஆதரவும், இடதுசாரிகளின் இலக்கியம் சாதியை பொருட்படுத்தாததை சாடும் அதேநேரம், ஒரு தலித்தின் படைப்பில் தலித்தியம் தூக்கலாக இல்லாமல் இடதுசாரி அரசியல் தூக்கலாக இருந்தால் அவர் முதல் நூலுக்குப்பிறகு வேறெதையும் படைக்கவில்லை என்று தீர்ப்பளிப்பதும், தலித்துகளுக்குள் இருக்கும் சாதியத்தை பேசுவதை சதிக்கோட்பாடு என்ற ஒற்றைப் பார்வையை கொண்டுபார்ப்பதும், அது உண்மையாகவே இருக்கும்பட்சத்தில் கூட அந்த ஆசிரியரையும், படைப்பையும் தீவிரமாக விமர்சித்தபின் இந்த உள்முரண்களை தலித்துகள் பேசுபொருளாக்கவேண்டும் என்பதை வலியுறுத்தாததும் என்று நமக்கு இந்த புத்தகமெங்கும் காணக்கிடைப்பது அறிவுஜீவித்தளத்தில் ஒருவர் எப்படி மிக நூதனமாக வெற்று தலித்தியத்தை பிரதான அரசியலாக இடதுசாரி போர்வையில் வேண்டியபொழுது ஒளிந்துகொண்டு முன்வைக்கமுடியும் என்பது. ஆழமான வாசிப்பை உடைய, சில ஆழமான வாசிப்புகளை நிகழ்த்திய இவர் கூட ஏன் இப்படியாக அடையாள அரசியலை தஞ்சமடைகின்றார் அதற்கு இல்லாத ‘அறிவுஜீவி’ காரணங்களை, தர்க்கங்களை அடுக்க முனைகின்றார், தமது எழுத்துக்களில் இருக்கும் முரண்களை சட்டை செய்யாமல் செல்கின்றார் என்று யோசிப்பது சுயவிமர்சனத்தை விரும்புபவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு செயலாக இருக்கும்.

அடுத்ததாக மற்றும் கடைசியாக நாம் கீழே காணப்போகும் முற்போக்காளர்களின் பிரதிகள்தான் நாம் எங்கும் காணக்கூடியவர்கள்.

முதல் உதாரணம் கவிதா முரளிதரன். ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் ஆளும் வர்க்கத்திற்கு, தமக்கு பிடித்த கட்சி, அரசியல் அல்லது தலைவர்களுக்கு அதன் ஆட்சிக்காலத்தை பற்றி எழுதும்பொழுதும் சரி, ஆட்சியிலேயே இருந்தாலும் சரி எப்படி சலிக்காமல் ஜால்ரா அடிக்கவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம். கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபொழுது கூட போராட்டத்தில் ஈடுபட்ட ‘மக்கள்’ தொண்டர் நிறைந்த திமுக என்பதிலிருந்து அம்மா உணவகம் பற்றிய எந்தவித விமர்சனமுமில்லா துதிப்பாடல் வரை எழுதியிருக்கின்றார். தமிழகத்தின் தனித்துவம் மற்றும் 50 வருட திராவிட அரசியலை பற்றியான இவரது இந்த கட்டுரையில் ஒரே ஒரு இடதுசாரி பார்வை கூட இல்லாத ஒரு ‘இடதுசாரியின்’ அலசலை நாம் வாசிக்கமுடியும். ஆனால் இவரது அரசியலின் உச்சம் என்பதை இதுபோன்ற பதிவுகளில்தான் நாம் வாசிக்கமுடியும்; இங்கு அவர் கருணாநிதி என்ற புரட்சியாளரின் மகனாக பிறந்துவிட்டதால் ஸ்டாலின் பள்ளியில் சந்தித்த ஒடுக்குமுறையிலிருந்து, போராட்டங்களில் ஈடுபட்டு சந்தித்த ஒடுக்குமுறை என்று மிகவும் உருக்கமான ஒரு பதிவை ஸ்டாலின் பற்றி எழுதியிருக்கின்றார்; இந்த பதிவை சிலாகித்து பூரிப்படையும் மற்ற ‘இடதுசாரி’ முற்போக்காளர்களையும் நாம் சமூக தளங்களில் பார்க்கமுடியும் (மீனா கந்தசாமி போன்றவர்களும் இந்த வகை ‘முற்போக்காளர்’ கூட்டத்தின் கீழ் வருபவர்களே). கொத்துபரோட்டா அரசியல் என்பது நேர்மையான அரசியலே கிடையாது; அதை ஒரு ‘அறிவுஜீவி’ உதாரணத்துடன் கீழே பார்க்கலாம். (70000 ருபாய் செலவு செய்து விஜய் ரசிகர் வைத்த பேனரை பிஜேபி எப்படி கிழித்துப்போட்டது மற்றும் விஜய் எப்பொழுது அரசியலுக்கு வருவார் போன்ற பதிவுகளை வேறு எழுதியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது).

கடைசி உதாரணம் சுகுணா திவாகர். இவரின் எழுத்துக்களையும் பெரிதாக வாசித்ததில்லை. சில ‘முற்போக்காளர்களை’ தேர்ந்தெடுத்து, மிக எளிய விடயத்தை விளக்குவதற்காக அவர்களை முழுதாக வாசித்து என்னை வதைத்துக்கொள்ள விரும்பாததால் சில உதாரணங்களின் மூலம் விமர்சனங்களை வைக்கின்றேன். இவர் மிக சுவாரஸ்யமானவர், பொதுவாக பெரிதாக எந்த தளத்திலும் கண்டுகொள்ளப்படாத தீவிர இடதுசாரி இயக்கங்களை பற்றி ஆய்வு செய்து எழுதியிருப்பதாக அறிகின்றேன், நான் வாசித்ததில்லை. திராவிட அரசியலை பற்றி விமர்சனப்பார்வைகளை முன்வைத்துவிட்டு ஜால்ரா அடித்தால், கூடவே தலித் ஆதரவு நிலைப்பாடையும் தவறாமல் பதிவுசெய்துவிட்டால், ஜால்ராவின் தன்மையும், தமது அரசியல்பார்வையின் தன்மையும் முற்போக்காகிவிடும் என்பதுபோல செயல்பட்டு வரும் இன்றைய ‘முற்போக்காளர்களின்’ முன்னோடிகளில் ஒருவர். விமர்சனத்தை குறிப்பிட்டு, பிறகு சாதனை பட்டியலை அடுக்கி ஏன் திமுக முக்கியம் என்று சொன்னாலும் விமர்சனமென்று எதாவது இருக்கும் ஒரு பதிவிற்கு உதாரணம் இது. இந்த பதிவு முழுக்க திராவிட இயக்கத்தின் புகழ் பாடி, கடைசி பத்தியில் நிலவும் பிரச்சனைகளில் சிலவற்றை குறிப்பிட்டு கருஞ்சட்டைக்காரர்களுக்கு இன்னும் வேலை இருக்கின்றது என்றிருப்பார். அதாவது திராவிட அரசியலுக்கும், நிலவும் பிரச்சனைகளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை, அரசியலில் எந்தவித மாற்றமும் கூட தேவையில்லை, செய்யும் வேலையை அப்படியே தொடர்ந்தால் போதுமானது. இவர் எப்படி இடதுசாரி இயக்கங்களை, அது எப்படியான இயக்கங்களாகவே இருப்பினும், பற்றி எழுதினார் என்பது புரியவில்லை. எந்த விமர்சனங்களிலும் இடதுசாரி பார்வை என்பது தேடிப்பார்த்தாலும்கூட கிட்டவில்லை. ஒருவேளை இப்படி ஆங்காங்கு பிரச்சனைகளை வெறுமனே துதிபாடலுக்கு நடுவே பட்டியலிடுவதற்கே தலித் தரப்பினர் போன்ற விமர்சகர்களின் அழுத்தம்தான் காரணமோ என்னவோ.

கவிதா முரளிதரனின் கட்டுரைக்கு சற்றும் சளைக்காத தமிழ் கட்டுரையை இவர் இங்கு எழுதியிருக்கின்றார். இரு புகைப்படத்தின் வழியாக ஸ்டாலினை பற்றிய துதியை ஆரம்பிக்கின்றார். “முதல் புகைப்படம் அரசியல் முதிர்ச்சி, இரண்டாவது புகைப்படம் உணர்வின் நெகிழ்ச்சி” என்பது வரலாற்றில் ஒரு பத்திரிகையாளரின் தலைசிறந்த ஜால்ரா வசனமாக நிற்கும். எப்படி ‘பிற்படுத்தப்பட்ட’ வகுப்பை சார்ந்ததால் பல இன்னல்களுக்கு கருணாநிதியும், ஸ்டாலினும் ஆளாகினர் என்பதிலிருந்து விளிம்புநிலை மக்களின், அதிலும் அமைப்புசாரா தொழிலாளர்களின் தலைவராக கருணாநிதி எப்படி திகழ்ந்தார் என்ற ஒரு ‘இடதுசாரியின்’ சிலாகிப்பை மற்றும் ‘சூரிய நெருப்பில் சுட்ட தங்கமாக’ ஸ்டாலின் இருந்திருக்கின்றார்/இருக்கின்றார் என்று ஒரு கட்சி தலைமையை/ஆட்சியாளரை பற்றியான ஒரு ‘பத்திரிகையாளரின்’ ‘கருத்தைக்’ கொண்ட தலைசிறந்த கட்டுரை.

வார்த்தைகளை மாற்றுவதால் எல்லாமே மாறிவிடும் என்றே நமக்குத்தோன்றும் வகையில் பிரதான பேசுபொருள்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு எந்தவித தெளிவும் இல்லாமல் வார்த்தை அரசியலை இன்று பலரும் பிரதானமாக கையிலெடுத்திருக்கும் சூழலில் ஆட்சியாளர்களும் அவர்களது ஜால்ராக்களும் என்ன செய்வார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமும் இந்த கட்டுரையில் உள்ளது. சுற்றுச்சூழல் அபாயத்தை உணர்ந்ததை சிலபல துறைகளின் அர்த்தம்பொதிந்த பெயர்மாற்றத்தில் உணரமுடியுமாம், அது நல்ல தொடக்கமாம். இது மேற்கூறிய வெற்று semantic அரசியல் போக்கின் விளைவு என்று சொன்னால் அது மிகையாகாது. இதே போலான மற்ற ஒரு உதாரணம் ஒரு கட்டுரையில் சற்றும் வெட்கமே இல்லாமல் எழுதப்பட்டிருக்கும் திமுக எவ்வாறு பெரும்தலைவர்களுக்கு தரும் மரியாதைக்கு இணையான முக்கியத்துவத்தை அனிதாவிற்கு வழங்கி சிலைவைத்து தலித்துகளை தமது அரசியலில் பிரதானப்படுத்துகின்றது என்பது. இதையும் தீவிர அரசியல்பார்வையில்லாமல் தலித்துகளுக்கான மேலோட்டமான முக்கியத்துவத்தை கோரும், மொத்த அரசியலையும் அல்லது அதில் பெரும்பங்கை வார்த்தைகளிலும், பெயர் வரிசைகளில் தேடும் வெற்று தலித் அரசியலின் விளைவு என்று சொன்னால் அது மிகையாகாது. தீவிரமான அரசியல் விமர்சனங்களை, கேள்விகளை வைக்க மறக்கும் அல்லது தவறும் பட்சத்தில் ‘முற்போக்கு’ ஜால்ராக்களின் பதில் இவ்வாறாகத்தான் இருக்கும்; அதற்கு ஒரு காரணமாக விமர்சனம் வைப்பவரின் அரசியல்பார்வையின் போதாமையும் அமையும்.

பதிவுகள் முற்றும்.

வாசிக்கும் ஓரிருவரேனும் சுய விமர்சனம் மற்றும் தமது அரசியலை பற்றிய தெளிவை நோக்கிய பயணத்தை மேற்கொண்டால் மகிழ்ச்சி.

--

--