தமிழகத்தின் இன்றைய முற்போக்கு அரசியல் -4

PM
6 min readJun 12, 2021

தலித் அரசியலின் நிலையும், அதன் போதாமைகளும்

  • வர்க்கம் மற்றும் சாதி

வர்க்க அரசியலை பேசுவது தலித் அரசியலுக்கு மிக மிக முக்கியமானது எனும்பொழுது தலித் என்ற அடையாளத்தை மட்டுமே பெரும்பாலும் முன்னிறுத்துவது நாம் பரவலாக காணக்கூடியது. வர்க்கம் பற்றியான விவாதம் என்பது எப்பொழுதாவது பஞ்சமி நிலம் போன்றவற்றை பற்றி தமது அடையாள அரசியல் பார்வையின் வாயிலாகவே முன்வைப்பதுடன் பெரும்பாலும் நின்றுவிடுகிறது. இத்தகைய அரசியலே ரஞ்சித் போன்றவர்களை கூட ‘வர்க்கத்தை ஒரு நொடியில் கடந்து விடலாம், சாதியை சாகும்வரை கடக்கமுடியாது’ என்பதான மேலோட்டமான அரசியலை பேசவைக்கின்றது.
தர்மராஜ் போன்றவர்களை “இன்றைக்குக் கற்பனையான பொடியன்குளம் கிராமத்தினர் கனவு காண்பது போல, நகரங்களுக்குச் சென்று படித்து, உத்தியோகம் பார்த்து கொஞ்சம் சம்பாதித்து வீடு, வாசல், தோட்டம் , தொரவு என்று மாறிவிட்டாலும் கெளரவத்தை மீட்டெடுக்க முடியாது என்பதற்கு கொடியன்குளக் கொடூரமே சாட்சி” இவ்வாறான கருத்துக்களை எழுதவைக்கின்றது. இதில் கொடியன்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் தர்மராஜ் மற்றும் பிறர் எழுப்பும் பிம்பத்தை போல ‘மிக செழிப்பாக’ இருந்தவர்கள் அல்ல. வர்க்க படிநிலையில் மிகவும் விளிம்புநிலையில் இல்லாதவர்கள் அவ்வளவே. அதிலும் போலீஸ் அவர்களது அந்த சற்றே பரவாயில்லாத ‘வர்க்கநிலையையே’ தாக்கியதை பத்திரிக்கை பதிவுகளில் நாம் வாசிக்கலாம். பொதுவுடைமை பற்றி பேசுபவர்களும் அதை வெறும் வாய்வார்த்தைகளாகவே பயன்படுத்துவதையும், தமது மைய அரசியலாக மட்டுமின்றி பக்கவாத்திய அரசியலாகக் கூட கொண்டிருக்காததை பார்க்கமுடிகின்றது. சில உதாரணங்களை கடைசி பகுதியில் தருகின்றேன்.

சாதியம் வர்க்கப்படிநிலைகளில் மேலிருக்கும் தலித்துகளையும் பாதிக்கின்றது என்பது உண்மையானாலும், வர்க்க அடிப்படையில் விளிம்புநிலையில் இருப்பவர்களின்மீதான சாதியத்தின் தாக்கம் எண்ணிப்பார்க்கமுடியாதது. இருந்தும் தலித் அரசியல் முழுவதும் நாம் கேட்கக்கூடிய குரல்கள் எல்லாம் வர்க்கப்படிநிலைகளில் மேலிருக்கக்கூடியவர்களை பிரதானப்படுத்தும் ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது. வர்க்கத்தை நொடியில் மாற்றிவிடலாம் என்பது தமக்கு கைகூடியதால் ஒரு பெருந்திரள் மக்களுக்கும் பொருந்தும் என்பதான கருத்தை முன்வைப்பதையும், அதேபோல வர்க்கத்தில் ‘சிறிதளவு’ முன்னேறியபின்னும் தலித் மக்கள் சந்திக்கும் வன்முறையை முன்வைத்து வர்க்கத்தில் எந்த நிலையில் இருந்தாலும் தலித் மக்களது ‘கௌரவம்’ என்பது ஒரே மாதிரியாக பாதிப்பிற்குள்ளாவதை போன்ற தொனியில் எழுதுவதையும் மேட்டிமை என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. விமர்சிக்கப்படுகின்றவர்கள் எப்படி விளிம்புநிலை மக்களுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் அல்லது மற்ற இடங்களில் பேசியிருக்கிறார்கள் என்பதான எதிர்வினை அர்த்தமற்றது. களப்பணி செய்வதாலேயே ஒருவரது அரசியல் மற்றும் அரசியல் புரிதல் சரியென்று ஆகிவிடாது. இதை புரிந்துகொள்வது கடினமாக இருக்கும் பட்சத்தில் தாம் விமர்சிக்கும், விளிம்புநிலை மக்களை பிரதானமாக (தன் அரசியலிலும் சரி, களப்பணியிலும் சரி) கருதிய காந்தியின் அரசியலை நினைவுகூர்ந்து யோசித்துப்பார்க்கலாம்.

உருப்படியான தலித் அரசியல் பார்வை என்பது உண்மையான சாதியொழிப்பை வலியுறுத்துவதாக, சாதி, வர்க்க மற்றும் பல வேறுபாடுகளை தீவிரமாக விமர்சிக்கும், இந்த வேறுபாடுகளற்ற உலகை கோரும் இடதுசாரி அரசியலை மக்களிடம் பேசுவதாக, கொண்டுசேர்ப்பதாக இருக்கும். இங்கோ தலித் என்ற அடையாளத்தை கூட கொஞ்சமேனும் அர்த்தமுள்ளதாக முன்வைப்பதற்கு மிக அத்தியாவசியமான, இந்த அடையாளத்திற்குள்ளாக இருக்கும் சாதிய, வர்க்க மற்றும் பாலின வேறுபாடுகளை விவாதத்திற்குள்ளாக்குவதற்கான மற்றும் நீக்குவதற்கான எந்தவித தீவிர விவாதங்களும், முயற்சிகளும் எடுக்கப்படாமலேயே தலித் என்ற அடையாளம் பெரிதும் முன்வைக்கப்படுகின்றது.

இதுதவிர சமூக நீதி அரசியல் என்ற அரைகுறை அரசியலின் மீதான முழு கவன குவிப்பு என்பது தலித் அரசியலுக்கும் பொருந்தும் ஒன்று. முதல் பகுதியில் அலசியிருக்கும் இட ஒதுக்கீடு என்பதிலிருந்து மூன்றாவது பகுதி வரை அலசியிருக்கும் பல விடயங்களுக்கும் இவை பொருந்தும்.

  • வெற்று தலித் அரசியல்

தமிழகத்தில் விசிக போன்ற பிரதான தலித் அரசியல் பேசும் கட்சியின் தலைவரான திருமாவளவன் பலமுறை வெற்று அடையாள அரசியலை (அது நிலையான விமர்சனமாக இல்லாவிட்டாலும் கூட, அரசியலில் அது பெரிதாக வெளிப்படாவிட்டாலும் கூட) பேச்சளவிலாவது விமர்சித்து வரும் பொழுது இந்த தலைப்பு தமிழக தலித் அரசியலை பொறுத்தவரை தேவையற்றதாக கருதப்படலாம். இதுவே எப்படி தவறென்பதை கடைசி பகுதியில் பார்க்கலாம். ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது இன்று சமூக ஊடக தளத்தில் வளர்ந்து வரும் முற்றிலும் வெற்று மற்றும் ஆபத்தான, பேச்சளவில் கூட எந்தவித ஆழமான கருத்துக்களும் இல்லாத போக்கை பற்றி. இது தலித் அரசியலை தலித் மட்டுமே பேசவேண்டும் என்று வெளிப்படையாகவே முன்வைக்கும் போக்கு; மிக வசதியாக இந்த லாஜிக்கை தலித் என்ற அடையாளத்திற்குள் இருக்கும் வேறுபாடுகளுக்கு சற்றும் பொருத்திப்பார்க்காமல் கடந்து செல்லும் நேர்மையற்ற போக்கையும் இதில் காணமுடியும் (தாம் பெண்ணாகவோ, அல்லது திருநராகவோ இருந்தால் அந்த தமக்கு வசதியான வேறுபாடை மட்டும் கோடிட்டு காட்டுவதற்கு இவர்கள் எப்படியோ மறப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது). இதன் பிரதான பேசுபொருள் தமது வாழ்வனுபவம் மற்றும் ‘தாம்’ என்பது; எந்தவித அடிப்படை விவாதங்களும் இல்லாத இந்த போக்கு தனிமனித மற்றும் மேட்டிமை அரசியலை தாண்டியது என்ற போலி பிம்பத்தை ஏற்படுத்துவதற்கு/நிலைநாட்டிக்கொள்வதற்கு பயன்படுவது ஓயாமல் ‘தலித்’ என்ற கூட்டு வார்த்தை பிரயோகமும், ஒடுக்குமுறைகளை பற்றிய தொடர் ‘அறச்சீற்றங்களும்’. இங்கு இவர்களில் அல்லது இவர்கள் சார்ந்த/ஆதரவளிக்கும் அமைப்புகள் செய்யும் களப்பணிகளும் இந்த போலி பிம்பத்தை முன்னிறுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது முன்பே நாம் களப்பணி மற்றும் அரசியல் குறித்து முன்வைத்த கருத்திற்கு வலுசேர்க்கும் விடயம்.

இத்தகைய வெற்று தலித் அரசியல் போக்கு என்பது படித்த, ஆங்கிலம் பேசும் தமது அரசியலின் மேட்டிமைத்தன்மையை சற்றும் உணராத தலித்துகளிடையே மிக அப்பட்டமாக இருக்கும் ஒரு விடயம் என்றாலும் இதன் கூறுகள் இப்படியான அரசியலை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் நமது தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிந்தனையாளர்களிடமும் கூட காணக்கிடைக்கும் ஒன்றே, எந்தளவு என்பதில் மாபெரும் வித்தியாசங்கள் இருந்தாலும். பல்வேறு சாதி ரீதியிலான தலித் அமைப்புகள் உருவாவதற்கு காரணம் என்ன, அதை போக்க என்ன அரசியல் இங்கு நிகழ்ந்திருக்கிறது என்ற கேள்வியில் இருந்து ஒருவர் மையநீரோட்ட தலித் அரசியலை பற்றியான கேள்வியை ஆரம்பிக்கலாம். அடையாள அரசியல் என்பதை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் திருமாவளவன் போன்றவர்கள், அடையாள ரீதியில் ஒடுக்கப்படுபவர்கள் அடையாள ரீதியில் ஒன்றுதிரளாமல் வேறு எப்படி திரள முடியும் என்பதான கேள்விகளை முன்வைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள், அதற்கு அருந்ததியர்களை உதாரணமாகவும் குறிப்பிடுகின்றார்கள். அருந்ததியர்கள் சாதியாக ஒன்றுதிரள வேண்டிய அவசியத்தை இல்லாமல் செய்திருக்கவேண்டிய ஆனால் தவறிய அரசியலை பற்றிய எந்த விமர்சனமும் இல்லாமல், மற்றும் இன்று செய்யவேண்டிய வேலைகளை பற்றியும் எந்தவித விவாதத்தையும் ஏற்படுத்தாமல் எளிதாக தாம் ஒருநேரத்தில் எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் அடையாள அரசியலை அதே நேரத்தில் தூக்கிப்பிடிக்கும் வேலையையும் செய்யமுடிகின்றது. எதார்த்தத்தில் சில அடையாள திரட்சிகளை புரிந்துகொள்ள வேண்டிய அரசியல் தேவையிருக்கிறது என்ற நியாயமான பார்வை சிக்கலான கேள்விகளை முன்வைக்கவோ, முகத்திலறையும் பதில்களை எதிர்கொள்ளவோ தயங்காது, ஆனால் வெற்று சொல்லாடல்கள் பிரதானமாக இருக்கும் அரசியல்கள் அத்தகைய எந்த முயற்சியையும் மேற்கொள்ளாது. இதில் இன்றைய எதார்த்தத்தில் புரிந்துகொள்ளக்கூடிய அருந்ததியர் திரட்சி என்பதிலே கூட சாதிய கூறுகள் இருக்கின்றன என்பதும் அவற்றை விமர்சிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது என்பதும் வேறு.

  • சிந்தனையாளர்களின் அடையாள அரசியல்

அடுத்து சிந்தனையாளர்கள். அடையாள அரசியலை பிரதானமாக கொண்டிருக்கும் தலித் சிந்தனையாளர்களே அதிகம் என்பது ஒருபுறமிருக்க, அதை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் சிலரும் கூட அந்த அரசியலுக்குள் தஞ்சமடைவதையோ அல்லது அதை தழுவதையோ தான் நாம் பெரும்பாலும் பார்க்கமுடிகின்றது. தீவிரமான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரும்பொழுதுதோ அல்லது சும்மாவாகவோ ராஜ் கௌதமனை போல நேரடியாக ‘தலித் அல்லாதோர் விசனப்படவேண்டாம்’ என்றோ, அல்லது ஸ்டாலின் ராஜாங்கம் போல மறைமுகமாக “இதை உளப்பூர்வமாகவே மாற்ற விரும்பும் அரசியல் குழுக்களும் இருக்கின்றன. அவர்கள் இந்த சொற்கள் தரும் சமமின்மை என்னும் அர்த்தத்தை ஏற்பதில்லையே தவிர சொற்களை மறுப்பதில்லை. சொற்களில் எதுவுமில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட மக்கள் குழுவோ பெயர்களை மாற்ற விரும்புகின்றன. பெயர் மாற்றத்துடன் தொடர்புடையதே அர்த்தம் மாறுதலும் என்று கருதுகின்றன. இந்த முடிவை அவர்கள் அப்பண்பாட்டில் புழங்குவதாலும், அர்த்தத்தின் விளைவை எதிர்கொள்வதாலும் எடுக்கிறார்கள். அவர்களின் முடிவு அரசியல் நிலைபாட்டால் அல்லாமல் பண்பாட்டின் அழுத்தம் காரணமாக எழுகிறது. இங்குஅரசியல் குழுவினர் அரசியல் நிலைபாட்டால் வழிநடத்தப்படுகிறார்கள். களஅளவில் தாங்கள் செய்யும் செயல்களுக்கு எதிராக சமூக உளவியலில் அர்த்தங்களை உருவாக்கும் பெயர்களே கூட எதிராக உள்ளன என்பதை உணர்வதில்லை” என்றோ தலித் அடையாள அரசியலை தழுவுவதை நாம் பார்க்கமுடியும். தீர்க்கமாக கருத்தியல் வழியாகவே சில விடயங்களை, அடையாளத்தின் முக்கியத்துவம் உட்பட, வலியுறுத்தும் வாய்ப்பிருந்தும் ராஜ் கௌதமன் எடுத்துக்கொண்ட ஆயுதம் தாம் எதிர்ப்பதாக சொல்லிக்கொண்ட வெற்று அடையாள அரசியல்.

இங்கு அயோத்திதாசரை பற்றி பார்ப்பதும் முக்கியமாகின்றது. பெரிதும் தலித் அறிவுத்தளத்தில் பேசப்படும் இவரது அரசியலை, ராஜ் கௌதமன் சரியாக நேர்மையாக எழுதியிருக்கும் பட்சத்தில் இவர் அடிப்படை வளங்களை பொறுத்தமட்டில் இருக்கும் ஏற்றத்தாழ்வு, அதில் வெளிப்படும் சாதியம் மற்றும் அதை சரிசெய்யவேண்டிய அவசியம் போன்றவற்றையும் பேசியிருக்கிறார். ஆனால் ஓயாமல் நாம் கேட்கும் தலித் அரசியலின் இவரை பற்றியான கூச்சலில் நாம் கேட்பதெல்லாம் இவரது மொழி ஆளுமை, எப்படி phule போல இவரும் புனைவைக்கொண்டு ஆதிக்க கதையாடலை திருப்பிப்போட்டார், முதன்முதலில் திராவிடர் என்பதை கண்டுபிடித்தார், எப்படி பெரியாருக்கு இவர் முன்னோடி போன்றவற்றை பற்றி மட்டுமே, அதாவது மொழி, கலாச்சார தளத்தை பற்றி மட்டுமே. பூலே மற்றும் அயோத்திதாசரின் புனைவு அல்லது மாற்று வரலாற்றை எழுதும் முயற்சிகளை அன்றைய சூழலை கணக்கில் கொண்டு அலசுவது வேறு, அதையே சாதியெதிர்ப்பாக பரப்புரை செய்து சற்றும் சிந்திக்காமல் நூறாண்டு பின்தங்கிய சிந்தனையில் திளைப்பது வேறு. இதனால் என்ன பயன் என்பதை விளக்கினால் அறிவிலிகள் நாம் புரிந்துகொள்ளவாவது ஏதுவாக இருக்கும். இதன் மொத்த பொருளும் என்ன என்பதை கடைசி பகுதியில் உதாரணத்துடன் காணலாம். இங்கு ஸ்டாலின் ராஜாங்கம் தேர்ந்தெடுக்கும் சில பேசுபொருள்களை மட்டும் குறிப்பிடுகின்றேன். 1. தாளமுத்து- நடராசன் என்பது எப்படி நடராஜன்-தாளமுத்து என்றிருக்க வேண்டும், அவ்வாறு வரிசை மாற்றப்பட்டதன் பின்னான சாதியம், 2. திராவிட அரசியலுக்கு முன்னோடி சிந்தனையாளரான அயோத்திதாசர் மறைக்கப்பட்டது நமக்கு சொல்வதென்ன, 3. தாழ்த்தப்பட்ட என்ற சொல்லாடல் பண்பாட்டுரீதியிலான பாதிப்புகளை எப்படி ஏற்படுத்துகின்றது போன்றவை. திராவிட அரசியல் தலித்துகளை நடத்திய, நடத்தும் விதம் என்ற ரீதியில் பார்த்தாலும் கூட இவை பேசவேண்டிய பிரதான விடயங்களா, இதை பேசும் கட்டுரைகளிலும் மீண்டும் மீண்டும் முன்வைக்க வேண்டிய விடயங்கள் என்ன என்பதை உங்களது யோசனைக்கே விடுகின்றேன். இவற்றை பிரதான கேள்விகளாகவும் விமர்சனமாகவும் முன்வைக்கும் மேலோட்ட அரசியலின் விளைவையும் கடைசி பகுதியில் நாம் பார்க்கலாம். பரப்புரையை நம்பாத, அதில் சிக்காத எந்தவொரு விளிம்புநிலை தலித்தும் மேற்கூறிய அரசியல்களின்/ நிலைப்பாடுகளின் போதாமையை நொடியில் கண்டுகொள்வார்கள். அப்படியானவர்கள் மிக சொற்பமாக இருப்பது சிந்தனையாளர்களுக்கு வசதி. தமது பரப்புரை மூலம் அப்படியானவர்கள் பெருகிவிடாமல் பார்த்துக்கொள்வது அரசியல்வாதிகளுக்கு வசதி.

  • இடதுசாரி அரசியல் மற்றும் தலித் அரசியல்

பொதுவாக ‘பிராமண’ இடதுசாரி அரசியல் என்று முத்திரை குத்திவிட்டு கடந்து செல்லும் நமது முற்போக்காளர்கள் இடதுசாரி அரசியலை பேசுவதே இல்லை. இந்தியாவில் கம்யூனிசம் பிராமணர்களிடம் சிக்கிக்கொண்டுவிட்டதை மேற்கூறிய முற்போக்காளர்களை போலவே இடித்துரைத்த அம்பேத்கர், மேற்கூறியவர்களை போலல்லாமல் தாமே இடதுசாரி அரசியல் முயற்சிகளை மேற்கொண்டார். அவர் தம்மை மார்க்சிஸ்ட் என்று அடையாளப்படுத்திக்கொண்டவர் அல்ல. அம்பேத்கரியர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களோ பொதுவாக இடதுசாரி அரசியல் என்று ஒன்றிருப்பதை தாம் அறிந்திருப்பதாகவே காட்டிக்கொள்வதில்லை. பெரியாரின் பெண்ணியம் என்பது அவரது போலி ‘சிஷ்யர்களால்’ எப்படி பேணப்படுகின்றதோ, அதேபோலவே அம்பேத்கரை தலித்துகள் மற்றும் மற்ற சாதியெதிர்ப்பாளர்கள் அணுகும் விதமும். எந்தவித சிந்தனை அல்லது அலசலின் அடிப்படையிலும் இல்லாமல் மனம்போன போக்கில் தமக்கு வசதியானதை மட்டும் தாம் அபிமானம் வைத்திருப்பதாக சொல்லும் தலைவர்களிடம் இருந்து அயோத்திதாசர் முதல் பெரியார், அம்பேத்கர் வரை எடுத்துக்கொள்வதற்கு பெயர் என்ன என்று சொல்லவேண்டியதில்லை. இத்தகைய அடையாள அரசியலை சார்ந்தவர்கள் தமது அரசியலை மூர்க்கமாக எதிர்த்த, அதைத்தாண்டிய அரசியலை முன்னெடுத்த தலித் மற்றும் தலித்தல்லாத இடதுசாரிகளுக்கு, அஞ்சலி செலுத்தும் மாபெரும் வேடிக்கையையும் நாம் காணமுடியும். அது அவர்களுக்கு தாம் செய்யும் மிகப்பெரிய அவமரியாதை என்பதை சற்றும் உணராமல் இருப்பது தான் இங்கே கொடுமை. தலித் அரசியலை தாண்டிய மிக கேலிக்குரிய சமீபத்தைய உதாரணம் என்றால் திராவிட அரசியலை கிட்டத்தட்ட கிழித்து தொங்கவிட்ட மைதிலிக்கான ஸ்டாலினின் சமீபத்தைய ‘மரியாதை’ வசனம்.

சுருக்கமாக சாதிரீதியிலான ஒடுக்குமுறையை, மற்ற அடையாள ரீதியிலான ஒடுக்குமுறைகளை கண்டுகொள்ளாத எல்லாவற்றையும் வர்க்கம் என்ற ஒற்றைப்பார்வையில் பார்ப்பது தீவிர விமர்சனத்திற்குரியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் எல்லாவற்றையும் சாதியத்தில் சுருக்கி வர்க்கம் என்பதை பற்றிய எந்தவித பிரஞையும் இல்லாமல் இருப்பது மிகவும் கேவலமான அரசியல்.

  • உரையாடல் எனும் மாயை

அரசியல் மாற்றத்திற்கு மிக முக்கியமான உரையாடல் என்பது ஆழமான பகுத்தறியும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டும் அதை ஊக்குவிப்பதாக இருக்கவேண்டும். அப்படியான உரையாடல்கள் பெரும்பாலும் எங்கும் முன்னெடுக்கப்படுவதே இல்லை. Roundtable India ஒருகாலத்தில் ஒரு மாற்றான தலித் (இங்கு தலித் என்பதற்கு அர்த்தம் வேறு தலித்-பகுஜன் என்று பொருள்) இயங்குதளமாக உருவாக்கப்படுவதாக சொல்லப்பட்டது. சிலபல முக்கிய கட்டுரைகள் வெளிவந்திருந்தாலும் இந்த தளம் ஒவ்வாத மாற்றுக்கருத்துக்களை சகித்துக்கொள்ளக்கூடிய தன்மை பெற்றதல்ல. வலதுசாரி கருத்துக்கள் என்று தவறாக நினைத்துவிட வேண்டாம். இன்றைய நிலையின் கூறுகள் அன்றே இவர்களது அடையாள அரசியலில் தென்பட்டவையே. Roundtable India Anand Teltumbde வை அவரது இடதுசாரி விமர்சனங்களுக்காகவும், வெற்று அடையாள அரசியலின் மீதான விமர்சனங்களுக்காகவும் எந்தவித உருப்படியான கருத்துகளையும் முன்வைக்காமல், அவர் சொல்லவருவதையும் சற்றும் புரிந்துகொள்ளாமல் துரோகி போல சித்தரித்ததும், தாம் எந்தவித இடதுசாரி அரசியலையும் முன்னெடுக்காமல் அல்லது வலியுறுத்தாமல் ஆனால் தொடர்ந்து இடதுசாரி அரசியலை எதிரியாக மட்டுமே முன்னிறுத்திய அயோக்கியத்தனத்தை செய்ததும் சிறந்த உதாரணங்கள். ஆகவே தமிழ் சூழலில் பல சிந்தனையாளர்கள் முன்னெடுக்கும் ‘உரையாடல்களில்’ மட்டுமல்லாது, இன்று நீலம் என்ற ‘மாற்று’ முன்னெடுப்பிலும் இதற்கான அறிகுறிகள் தென்படுவதால் உரையாடல் என்பது இத்தகைய தளங்களில் வெறும் மாயை மட்டுமே என்பதை குறிப்பிடுவது மிக முக்கியமாகின்றது. இந்த சிந்தனையாளர்களும், ரஞ்சித் போன்றவர்களுக்கும் இன்றும் இதை மாற்றி உண்மையான உரையாடலுக்கும் பரந்துபட்ட விவாதத்திற்கும் வித்திடும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடக்காத பட்சத்தில் cultist அரசியலை விட்டு விலகி, திருமாவளவன், ஸ்டாலின் ராஜாங்கம், ரஞ்சித் போன்ற பெயர்களை பார்த்தாலே கைதட்டும் பழக்கமே ஏதோ சாதிய எதிர்ப்பு போல பாவிக்கும் வெற்று போக்கிலிருந்தும் விலகி, ஆழமாக சிந்தித்து உண்மையான சாதியொழிப்பை வலியுறுத்தும் இடதுசாரி அரசியலை தலித்துகள் தலித்தல்லாதவர்களோடு இணைந்து
முன்னெடுக்கவேண்டிய அவசியம் இருக்கின்றது.

--

--