தமிழகத்தின் இன்றைய முற்போக்கு அரசியல் -3

PM
5 min readJun 6, 2021
  • போலி சாதியெதிர்ப்பு

சாதிய மற்றும் வர்க்க படிநிலைகளுக்கு இருக்கும் தொடர்பாடு என்பது நன்கு நிறுவப்பட்டுவிட்ட ஒன்று. ஆனால் சாதி பற்றி ஓயாது விவாதம் நடக்கும் தமிழ்சூழலில் இது பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே வரும் விடயம். வர்க்க படிநிலைகளை பற்றிய எந்தவித விவாதமும் இல்லாத எந்த சாதியெதிர்ப்பு அரசியலும் முழுமையான சாதியெதிர்ப்பு அரசியலாக இருக்கமுடியாது. அப்படியிருந்தும் இது திராவிட அரசியலில் மட்டுமின்றி பொதுவாக தலித் அரசியலிலும் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு அல்லது மிக அரிதாக மிக குறுகிய ரீதியில் அணுகப்பட்டு வரும் ஒரு விடயம். இதை பிறகு விரிவாக பார்க்கலாம்.

இப்பொழுது இப்படியான அரைகுறை சாதியெதிர்ப்பு அரசியலின் வர்க்கத்திற்கும், சாதிக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை போன்ற பாவனையை அப்படியே ஏற்றுக்கொண்டு பார்த்தாலும் கூட, எப்படி இந்த அரசியல் முற்றிலும் போலியாக இருக்கின்றது என்பதை பார்க்கலாம். தமிழகத்தில் எப்படி சாதியை பெயருடன் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இல்லை என்பதை பற்றியான சிலாகிப்பை நாம் கேட்டிருப்போம். அதே தமிழகத்தில் சாதி சங்கங்கள் மற்றும் அமைப்புகளில் மக்கள் எந்தவித கூச்சமும் இல்லாமல் பங்கெடுப்பதையோ, தொன்னூறு விழுக்காடுகளுக்கும் மேலாக சாதிக்குள்ளாகவே தேடிப்பிடித்து திருமணம் செய்துகொள்ளும் அளவு மக்களிடம் இருக்கும் சாதிப்பற்றைப் பற்றியோ பெரிதாக எந்தவித அழுத்தங்களும் தொடர்ந்து ஏற்படுத்தப்படாததை நாம் காண்கின்றோம். சாதியின் முக்கிய அம்சமாக காணப்படும் தூய்மை பற்றிய கருத்தாக்கம் என்பது அதன் ஒரு பகுதி மட்டுமே. சாதியின் மிக முக்கியமான கூறுகள், அதன் இருப்பிற்கு இன்றியமையாதது என்பவை இரு விடயங்கள்- 1. வர்க்கபேதங்கள் 2. அகமனமுறை. இந்த இரண்டு விடயங்களுமே புறக்கணிக்கப்படும் சாதி எதிர்ப்பு போலியானதாக மட்டுமே இருக்கமுடியும். ஆணவப்படுகொலைகளுக்கு மட்டும் எதிராக அவ்வப்பொழுது கொதிப்பது அகமனமுறைக்கான எதிர்ப்பாக எடுத்துக்கொள்ளமுடியாது என்பதும் குறிப்பிடப்படவேண்டியது. இப்படியான ஆணவக்கொலைகளின் மீதான வசதியான கவனக்குவிப்பை விமர்சிக்கக்கூடிய புனிதப்பாண்டியன் போன்றவர்களிடம் இருக்கும் பிரச்சனை அவர்களது ‘இந்துமதத்தின் தூய்மை பற்றியான கருத்தாக்கமே சாதியின் ஒரே கூறு’ என்ற வசதியான, வெற்று ஒற்றைப்பார்வை.
Notions of purity தான் முக்கியமாக எதிர்க்கப்படவேண்டியது என்று எடுத்துக்கொண்டாலும் அதை எப்படி எதிர்க்கவேண்டும், அதை வலியுறுத்துபவர்கள் செய்யவேண்டியது என்ன? சாதிப்படிநிலைகளை விமர்சிப்பது, அவை இல்லாமல் போகுமாறு எல்லோரிடமும் இருக்கும் சாதிய மனநிலையை விமர்சிப்பது, மாற்றிக்கொள்ள அழுத்தம் தருவது. ஆனால் இவர்கள் முன்வைக்கும் தீர்வோ மிகவும் வசதியான இந்துமத எதிர்ப்பும், இந்துமதத்தை விட்டு வெளியேறவேண்டிய அவசியத்தையும், அது எப்படியோ சாதிய படிநிலைகளை மாயமாக ஒழித்துவிடும் சக்தியை பெற்றது என்பது போன்ற பாவனையும். தலித் பௌத்தத்தை பற்றியான விமர்சனப்பதிவுகளில் இதை பற்றி சற்று விரிவாக எழுதியிருக்கின்றேன். இப்படியாக மக்கள் உண்மையில் சாதியத்தை கடக்கும்பொழுது அகமனமுறை என்பதற்கு இடமே இருக்காது என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. ஆக அவர்கள் சட்டகத்திற்குள்ளாகவே பார்த்தாலும் கூட நமது முற்போக்காளர்களது சாதி எதிர்ப்பு அரசியல் என்பது மேலோட்டமானதாகவோ அல்லது போலியாகவோதான் இருக்கின்றது.

‘மக்களிடம் புரையோடிக்கிடக்கும் சாதியம் என்பதற்கு நடுவில்/அதையும் மீறி திராவிட அரசியல் சாதித்தவை’ என்பதான போலி பரப்புரையை, அதன் பொய்மையை போன பகுதியிலும், எப்படி திராவிட அரசியல் சாதியை உபயோகம் செய்துகொள்கின்றது மற்றும் அதை வளர்க்கின்றது என்பதையும் மற்ற ஏற்கனவே சுட்டி தந்த பதிவுகளில் பார்த்தாகிவிட்டது. எண்ணிக்கையில் அதிகமான, ஓட்டரசியலுக்கு முக்கியமான சாதிகளுக்கு இணக்கமாக நடந்துகொள்வதோ அல்லது அப்படியான முட்டாளாக்கும் மேலோட்டமான பாவனை முயற்சிகளில் ஈடுபடுவதோ நாம் தொடர்ந்து காணும் விடயம். அதேநேரம் எண்ணிக்கை அடிப்படை இல்லாத பிற்படுத்தப்பட்ட சாதிகளை கண்டுகொள்ளாமல் விடும் போக்கையும் நாம் காணமுடியும். இதை பற்றியான விவாதத்தை தமக்கு தேவையானபொழுது அவ்வப்பொழுது முன்னெடுக்கும் ‘முற்போக்காளர்கள்’ மிக சுவாரசியமானவர்கள். இவர்கள் புறக்கணிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளை பற்றி அடிக்கடி பேசுவார்கள், வெகு சிலநேரங்களில் இவர்களிடம் நிலம் மற்றும் எந்தவித வளங்களும் இல்லாததை பற்றியும், இட ஒதுக்கீடு கூட எப்படி இந்த சிறிய பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு சென்றடையவில்லை என்பதையும் பேசுவார்கள். இந்திய அளவில் இதை பேசும் தேஜஸ் ஹரத் போன்றவர்களின் அரசியலுக்கும் பிந்தைய கேள்விகள் பொருந்தும் என்றாலும், தமிழில் இதை பேசுபவர்கள் விசித்திரமானவர்கள். மேலே செல்வதற்கு முன் இங்கு குறிப்பிடப்படவேண்டியது இப்படியான பிற்படுத்தப்பட்ட சாதிகளை பற்றியான விவாதம் மிக மிக முக்கியமானது என்பது, ஆனால் இந்த முற்போக்காளர்கள் முன்னெடுப்பதை போன்று அல்ல. தமிழில் இதை உருப்படியாக பேசக்கூடியவர்கள் திராவிட அரசியலின் மீதும், அதன் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதியின் மீதும் விமர்சனம் வைப்பவர்களாகவே இருக்கமுடியும், ஆனால் இந்த முற்போக்காளர்கள் அதன் அபிமானிகள். ஒரு விடயத்தை பேசும்பொழுது அதன் காரணிகள் மட்டுமின்றி தீர்வுகளை பேசுவது உருப்படியாக அரசியல்பார்வைகளை முன்வைப்பவர்கள் செய்யக்கூடிய விடயம். எதையோ ஒன்றை முன்வைத்தால் அதை நாம் விவாதிக்கவாவது ஏதுவாக இருக்கும். ஆனால் நமது இந்த ‘புறக்கணிக்கப்பட்ட இடைநிலை சாதிகள்’ பற்றி பேசும் தமிழக முற்போக்காளர்கள் விடயத்தில் இதற்கு காரணிகளும் கிடையாது, தீர்வுகளும் கிடையாது. அதனாலேயே காரணிகளில் ஒன்றான திராவிட அரசியலுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டே தேவைப்பட்ட இடங்களில் எந்தவித அரசியல் பிரஞ்ஞையும் இல்லாமல் இதை பேசமுடிகின்றது. இதை தலித் எதிர்ப்பு வாதங்களுக்கு உபயோகம் செய்வதும், இந்த பிரச்சனையை திராவிட ஓபிசி அரசியலுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டே பேசுவதும் நமக்கு சொல்லும் விடயம் இவர்களுக்கு இருக்கும்ஓபிசி அரசியலின் மீதான கெட்டியான பிடிப்பு. இல்லையெனில் உண்மையில் ஓபிசி அரசியல் என்பது காணாமல் போகச்செய்யும் சிக்கலான விவாதங்களையும், உண்மையான சாதியெதிர்ப்பு/ஒழிப்பு அரசியல் எப்படி இருக்கவேண்டும், அதை நோக்கி பயணிக்க செய்யவேண்டியதென்ன என்பதை பேசும் அரசியலாக இவர்களுடையது இருந்திருக்கும்.

  • வெற்று அடையாள அரசியல்

மேலே குறிப்பிட்ட பலவற்றின் அடிப்படை வெற்று அடையாள அரசியல் என்பது தெளிவே. ஆனால் சில அப்பட்ட நேர்மையற்ற வெற்று அடையாள அரசியல் உதாரணங்களை கீழே காணலாம். நமது புதிய நிதி அமைச்சர் மூச்சுக்கு முன்னூறு முறை தமது பாரம்பரியத்தை பற்றியும், அது 130 ஆண்டுகளாக விளிம்புநிலை மக்களுக்கு ‘தமது சொத்தை’ ‘தியாகம்’ செய்து வரும் அரிய பணிகளை எண்ணி எண்ணி வெளிப்படையாகவே பூரிப்பில் ஈடுபட்டுக்கொள்ளும் ஒருவர். 130 வருடங்கள் ‘சேவை’ செய்தும் அழியாத சொத்து மீதான பிரமிப்பு நமக்கு எழுவது நிச்சயம். பாரம்பரிய சொத்து பற்றிய அடிப்படை விமர்சனமோ, அல்லது முதலீட்டியத்தை கணக்கில் கொண்ட பில் கேட்ஸின் ‘சேவை’க்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம் என்ற சாதாரண கேள்வியோ நமது முற்போக்காளர்களுக்கு எழுவதில்லை. இதையே ஒரு பிராமணர் செய்திருந்தால் பொங்கியெழும் முற்போக்காளர்களிடம் தெரிவது அறம் அல்ல, வெற்று அடையாள அரசியல் மற்றும் அதனடிப்படையிலான பற்று மற்றும் வெறுப்பு. மிக விசித்திரமான விதமாக இடதுசாரி அமைப்புகளின் தலைவர்களாக உலவும், ஆனால் சுரண்டும் பழக்கத்தை கொண்டிருக்காத, பிராமணர்களை (முக்கியமான விமர்சனம் என்பது இங்கு முக்கியமில்லை), அவர்களது savior மற்றும் மேட்டிமைத்தனத்தை தொடர்ந்து கேள்விகேட்கும் முற்போக்காளர்களுக்கு PTR போன்ற பலரும், ‘ஆதிக்க சாதியை சாராத’ ஆனால் ஆளும் வர்க்கமான கருணாநிதி போன்றவர்களின் குடும்ப அரசியலும் கண்களுக்குத் தெரிவதில்லை.

திராவிட அரசியலின் மீதான விமர்சனத்தை வைத்துவிட்டாலே சங்கி, மற்றும் தலித் என்றால் நீல சங்கி, என்று வசவுகளை எந்தவித அடிப்படையும் இல்லாமல் வைக்கும் சகிப்பின்மையும், நேர்மையின்மையுமே தமிழ்சூழலில் நிலவுவது. வேடிக்கை என்னவெனில் தமது பார்ப்பனர் என்ற அடையாளத்தை தொடர்ந்து விமர்சித்துக்கொண்டே, வெற்று மேலோட்ட சாதியெதிர்ப்பு கூச்சலில் ஈடுபட்டு திராவிட அரசியலுக்கு பரப்புரை வேலையை செய்யும் வரை ஒருவரது பார்ப்பன அடையாளம் என்பது கண்களுக்கு தெரியாதது போன்ற பாவனை நிலவும். அவரவர் ஜால்ராவின் அளவிற்கேற்ப போராளி பட்டமும் கூட சில பார்ப்பனர்களுக்கு கிட்டும். திராவிட அரசியல் மீது மறந்து கொஞ்சம் (குறுகிய) விமர்சனத்தை வைத்துவிட்டால், அவர் தொடர்ந்து திராவிட அரசியலே சிறந்த அரசியல் என்ற நிலைப்பாட்டையே கொண்ட பார்ப்பனராக இருந்தாலும் கூட, அவர் ஒரே நாளில் சங்கியாகிவிடுவார். மைதிலி சிவராமன் போன்ற இடதுசாரிகள் பார்பனராவதன் மற்றும் கவிதா முரளிதரன், கீதா போன்றவர்கள் திராவிட மற்றும் தலித் தளங்களில் முக்கியமானவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதன் பின்னணியும் இதன் அடிப்படையில்தான். விளக்கமாக சொல்வதென்றால் முந்தையவர் பிந்தையவர்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவில் தலித்துகள் மற்றும் தலித்தல்லாத உழைக்கும் மக்கள் போராட்டங்களில் தமது வாழ்க்கை முழுதும் ஈடுபட்டிருந்தாலும், இந்த அரசியல்கள் மீது தீவிரமான விமர்சனங்களை கொண்டிருந்தவர்/முன்வைத்திருப்பவர். பிந்தையர்களோ இரண்டு அரசியல்களுக்கும் மிகவும் இணக்கமானவர்கள், வைக்கும் விமர்சனங்களில் எந்தவித கூர்மையும் இல்லாதவண்ணம், அதனால் எந்தவித பாதிப்பும் இல்லாதவண்ணம் அவ்வப்பொழுது சில விமர்சனங்களை வைப்பவர்கள், அரவணைத்துக்கொள்ள எந்த பிரச்சனையும் இல்லாத மிகவும் உகந்தவர்கள்.

இங்கு விந்தை என்னவென்றால் ஒருவரது அரசியலை அவரது அடையாளத்தின் அடிப்படையில் இல்லாமல், அவர் தமது பார்வைகளாக, அரசியலாக முன்வைக்கும் விடயத்தின் அடிப்படையிலேயே தெளிவாக விமர்சித்து அதை ஓபிசி அரசியல் என்ற விமர்சனத்தை முன்வைத்தால் அதை ‘அதிரடி சாதிய பார்வை’ என்பது. ஜெயரஞ்சனின் அரசியலை ஓபிசி அரசியல் என்று விமர்சனங்களுடன் எழுதியதற்கு நேரடியாக பதில்சொல்லாமல் சாதியம் என்று ‘கொந்தளித்த’ ஒருவர் நினைவிற்கு வருகின்றார். பாவம் அதே விமர்சனம் பிறப்பில் பார்பனரான ஆனால் ஓபிசி அரசியலைக் கொண்ட ராஜன்குறைக்கும் பொருந்தும் என்ற விடயம் அவரது மூளைக்கு எட்டவில்லை. தமது அடையாள அரசியலுக்கு உவப்பான விடயங்களை பேசுபவர்களை அரவணைக்கும், கிஞ்சித்தும் விமர்சனப்பார்வைகளை, முக்கியமாக அடையாள அரசியலைத் தாண்டிய முக்கிய பார்வைகளை, சீண்டாத போக்கு எல்லா அரசியல்களிலும், தலித் அரசியல் உட்பட, காணக்கிடைப்பது. இந்த அடையாள அரசியலின் அடிப்படையிலான தொடர் அடிகளும், அதற்கு தத்துவார்த்த முட்டுக்கொடுத்த, தம்மை அதி புத்திசாலிகள் என்றெண்ணிக்கொண்ட, சில பின்நவீனத்துவ ‘அடிமுட்டாள்’களின் நேர்மையற்ற அரசியலும் இன்றைக்கு பல அரைகுறை அரசியல்களுக்கு, முக்கியமாக அரைகுறை இடதுசாரி அரசியலுக்கு வித்திட்டிருக்கின்றது. மார்க்சியம், மார்க்சியம் என்று சொல்லிக்கொண்டே திராவிடத்திற்கு முட்டுக்கொடுக்கும் cpm ஐ சார்ந்தவர்களையும், மகிழ்நன் போன்ற எண்ணற்றவர்களையும் கொண்ட முற்றிலும் போலியான அரசியல் சூழலுக்கு வித்திட்டிருக்கின்றது. இவர்களுடன் ஒப்பிடும்பொழுது ‘நல்லவேளை கம்யூனிசம் இங்கு நிகழவில்லை என்று ஸ்டாலினின் அரசியலே கம்யூனிசம் என்ற ரீதியில், கம்யூனிசத்தை விட ‘சமூக நீதி’ அரசியல் உயர்ந்தது’ என்று பினாத்தும் திராவிட அபிமானிகளுக்காவது சிறிது அடிப்படை நேர்மை இருக்கின்றது என்று சொல்லமுடியும்.

தமிழ் அறிவுசூழலில் நிலவும் அடையாள அரசியல் விளையாட்டுக்கள் சுவாரசியமானவை. ஸ்டாலின் ராஜாங்கத்திற்கு பிராமணர்களுடன் இருக்கும் தொடர்பை பற்றி விமர்சனம் வைக்கப்பட்டிருக்கின்றது. தமது அரசியல் மீதான விமர்சனங்களுக்கு தமது பதிப்பகங்களிலேயே இடம் ஏன் இல்லை என்ற கேள்வி எழுவதில்லை. ஒன்று பிரசுரிக்காதே, எங்களுக்கு வசதி, அல்லது யார் மூலமாக பிரசுரிக்கின்றாயோ அவர்களை வைத்தே உனது விமர்சனங்களை சீண்டாமல் செல்லுவோம் மற்றும் பார்ப்பன சதி என்போம் என்ற மிகவும் நேர்மையான அறிவுசூழல் நம்முடையது. எந்தவிதத்திலும் (நானறிந்தவரையில்) பார்ப்பன அரசியலுக்கு முட்டுக்கொடுக்காத ஸ்டாலின் ராஜாங்கத்தின் மீது வைக்கும் இந்த விமர்சனம் சரியென்றால், எல்லாவிதத்திலும் திராவிட அரசியலுக்கு முட்டுக்கொடுக்கும் மதிவண்ணன் மற்றும் இமையம் போன்றவர்களுக்கு இத்தகைய விமர்சனங்கள் நூறு மடங்கு அதிகமாக பொருந்தும். இங்கு ஸ்டாலின் ராஜாங்கம் மற்றும் மதிவண்ணன் இந்த இருவரை ‘முற்போக்கு’ பார்ப்பனர்கள் மற்றும் திராவிட அரசியல் அபிமானிகள் எப்படி அணுகுகிறார்கள் மற்றும் உபயோகம் செய்துகொள்கிறார்கள் என்று கவனித்தால் தமிழ் சூழலை பற்றிய புரிதல் கிட்டும். எது எப்படியாக இருந்தாலும் ஒருவரது விமர்சனங்களை கருத்தில் எடுத்துக்கொண்டு நேர்மையாக விவாதிப்பது மிகவும் முக்கியமானது. ஆனால் அது திராவிட அரசியல், இடதுசாரி மற்றும் தலித் அரசியல் என்று எதிலும் பொதுவாக நிகழ்வதில்லை.

  • நீளம் கருதி மிக முக்கிய விடயங்களான போலி பெண்ணியம், யாரும் சீண்டவே சீண்டாத ஆனால் நமது இருப்பிற்கே முக்கியமான புவிவெப்பமயமாதல் போன்றவற்றை இதில் கடந்து செல்கின்றேன்.

தலித் அரசியலின் நிலையும், அதன் போதாமைகளும்

அடுத்த பதிவில்..

--

--