தமிழகத்தின் இன்றைய ‘முற்போக்கு’ அரசியல் -2

PM
6 min readMay 9, 2021

இலவசங்களை பற்றிய எலீட்டுகளின் பரப்புரை

தமிழக சூழலில் நாம் காணும் எலீட்டுகளுக்கு எதிரானதென்று கட்டமைக்கப்படும் எலீட்டுகளின் பரப்புரையை அடுத்து பார்க்கலாம். தமிழக அரசுகளின் இலவசங்களை பற்றிய பரப்புரை இது. ஜெயரஞ்சன் போன்ற ஆய்வாளர்களில் இருந்து கவிதா முரளிதரன் போன்ற பத்திரிக்கையாளர்கள் வரையிலானோர் தொடர்ந்து ஈடுபடும் பரப்புரை இது. இலவசங்கள் எப்படி மக்களுக்கு உதவியிருக்கின்றன என்பதை சில தரவுகளை/’ஆய்வுகளை’ வைத்து இட ஒதுக்கீடு பற்றியான பரப்புரையை போலவே செய்து வருகின்றார்கள். இட ஒதுக்கீட்டை போல இங்கும் அடிப்படையான கேள்வி ஏன் அடிப்படை பொருளாதார கட்டமைப்பு மாற்றப்படாமல் இலவசங்களால் ஏற்பட்ட ‘மாற்றங்களை’ அலசி சிலாகித்து முட்டுக்கொடுக்க வேண்டும் என்பது. (இவர்களைவிட) வலதுசாரிகளின் மேட்டிமைத்தனமான விமர்சனங்களை கைகாட்டி இப்படி குறுகிய தரவுகளை வைத்து முட்டுக்கொடுக்கும் ‘முற்போக்காளர்கள்’ இடதுசாரி விமர்சனங்களை சீண்டுவதில்லை. அடிப்படை பொருளாதார கட்டமைப்பை பற்றியான கேள்விகளை எழுப்புவதில்லை. இலவசம் என்பதில் கூட இவர்கள் ஆளும் வர்க்கத்தின் அரசியலை எந்தவிதத்திலும் பாதிக்காத இலவசங்களை மட்டுமே பேசுவதை நாம் காணலாம். லேப்டாப்பினால்,
சைக்கிளினால் ஏற்பட்ட மாற்றங்களை சிலாகிக்கும் இவர்களுக்கு அரசுப்பள்ளிகளை வைத்திருக்கும் நிலையோ, கல்வியின் நிலையோ, தனியார் கல்வியின் இருப்பினால் ஏற்படும் பாதிப்புகளோ, அதை ஆளும் வர்க்கம் மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்களே நடத்துவதோ கண்ணில் படுவதில்லை. அதை பற்றி எந்த விவாதத்தையும் எழுப்புவதில்லை. உயிர் பயத்தினாலோ, வேறு பயத்தினாலோ அமைதியாக இருப்பதை ஒருவர் புரிந்துகொள்ளலாம், கேவலமான முட்டுக்கொடுப்பு மற்றும் பொய் பரப்புரைகளை அல்ல. இவர்களது இந்த விமர்சனமற்ற அரசியல்பார்வை வலதுசாரி பார்வை, எலீட்தனமுடைய பார்வை என்று சொன்னால் அது மிகையாகாது.

இதே கேள்விகளை சத்துணவு என்பதிலிருந்து முட்டை அரசியல் வரையிலான ‘சாதனைகளுக்கு’ கேட்டுப்பார்க்கலாம். இவை இல்லாவிட்டால் மற்றும் இருந்தும் குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாடு எந்த அடிப்படை விடயத்தை நமக்கு சொல்கின்றது, அதற்கான தீர்வு என்ன, அதை பேசுவதை தவிர்த்து முட்டை வழங்கியதை ‘சாதனை’ என்பதை மேட்டிமை என்று சொல்வதில் என்ன தவறு என்று கேட்டுக்கொள்ளலாம். ஒரு முட்டையில் கூட இரண்டாயிரம் கோடி ஊழல் செய்யும் நேர்மையாளர்கள் நமது ஆட்சியாளர்கள் என்பது வேறு இருக்கின்றது.

சமூக நீதி பேசும் ‘முற்போக்காளர்கள்’ கோரும் விசுவாசம்
இந்த கும்பலை போலி முற்போக்காளர்கள் என்றுகூட கருத முடியாது தான் ஆனால் இவர்கள்தான் தமிழ் சூழலில் அதிகம் என்பதாலும், சுபவீ போன்ற ‘அறிவுஜீவிகளும்’ நாசூக்காக பலநேரம் சொல்வதும் இதைத்தான் என்பதனாலும் இதை பார்த்துவிடலாம். அதாவது மேற்கூறிய ‘சாதனைகள்’ மற்றும் பிறவற்றை காரணமாகக் காட்டி எப்படி தமிழகம் அண்ணா, கருணாநிதிக்கு கடமைப்பட்டிருக்கின்றது என்ற ‘கருத்தை’ முன்வைப்பது. இதன் மிகக்கோர முகம் வெளிப்படுவது தலித்துகள் படிப்பதற்கும், செருப்பு போடுவதற்கும், ஆடை அணிவதற்கும், கேமராவை தொடுவதற்கும், ஏன் கக்கூஸ் போவதற்கும் கூட எப்படி இந்தத் தலைவர்கள் காரணம் என்றும், ‘நன்றி’ மறக்கக்கூடாது என்றும் சொல்வது.

பெல்ஜியம் மன்னனான லியோபோல்ட் என்பவன் இன்றைய காங்கோவை தனது தனி சொத்தாக வைத்திருந்தான். ரப்பர் தோட்டங்களில் தொடர் அடிமை வேலையில் ஈடுபட்டு உடலில் சக்தி இல்லாததால் துவண்டவர்களைக்கூட உடலின் பாகங்களை வெட்டி, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து என்று பலவகை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி தொடர்ந்து அடிமைவேலையை செய்யவைத்தனர். காலனியாதிக்கத்தின் கோரத்தை இதை வாசித்தால் புரிந்துகொள்ளலாம். இது காங்கோவில் மட்டும் நிகழ்ந்த ஒன்றில்லை. இன்று இதே மக்களை முன்னேற்றுவதற்கு மேலை நாடுகள் பலவிதத்தில் உதவி செய்வதான அரசியல் பற்றிய பரப்புரை ஒன்று பல தசாப்தங்களாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மேலை நாடுகளுக்கு ஆப்பிரிக்க மக்கள் கடமைப்பட்டிருக்கின்றார்கள் என்று சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனமோ அதை விட சற்றும் குறைந்ததல்ல இந்த ‘முற்போக்காளர்களின்’ அயோக்கியத்தனம். தலித் மக்களை அண்ணாவும், கருணாநிதியுமா சுரண்டினார்கள் என்ற அறிவுகெட்ட, நேர்மையற்ற கேள்வி எழும் என்பதால், அது தவறான கேள்வி என்று சொல்வதை விட வாய்ப்பளித்தமைக்கு நன்றி என்று கூறி அதற்கான பதிலையும் அளித்துவிடலாம். பொதுவாக அண்ணாவின் ஆட்சியில் இப்படியெல்லாம் நடந்திராது என்றும், கருணாநிதியின் ஆட்சியில்தான் சிலபல தவறுகள் நிகழ்ந்துவிட்டதாகும் சிலர் சொல்வதுண்டு. மைதிலி சிவராமன் அவர்களின் Haunted by fire என்ற புத்தகத்தில் இதற்கான எதிர்வினை உள்ளது. அதோடு தலித் மக்கள் (அவர்கள் மட்டுமல்ல) எப்படியெல்லாம் திராவிட ஆட்சிகளின் காலத்தில் உற்பத்தியும் வளர்ச்சியும் வேண்டுமென்று முதலீட்டியத்தால் உறிஞ்சப்பட்டார்கள் என்பதை பற்றியான பல தரவுகளும் இருக்கின்றன. ஆக நேர்மையற்ற கேள்விக்கு ஆம் என்று தாராளமாக பதில் அளித்து நகரலாம். விளிம்புநிலை மக்களுடைய உழைப்பில் வளர்ந்த தமிழகமும், சுரண்டியதில் பெரும்பங்கை அனுபவித்த ஆளும் வர்க்கமும், அதன் ஜால்ராக்களும் வேண்டுமானால் ‘நன்றி’யுடன் இருக்கவேண்டுமே அன்றி விளிம்புநிலை மக்கள் அல்ல.

நவதாராளமய திராவிட அரசியல்

திமுக எப்படி நிலப்பிரத்துவ மற்றும் நவதாராளமய கட்சி என்பதை இந்த பதிவில் வாசிக்கலாம். சர்வதேசிய அரசியல், இந்திய அரசியல் என்று எந்தவித காரணங்களையும் காட்டமுடியாத அப்பற்ற நிலப்பிரபுத்துவ மற்றும் நவதாராளமய அரசியல் திமுகவினுடையது.

இந்த லட்சணத்தில் சோசலிஸ்ட் அரசியல் திமுகவுடையது என்று ‘முற்போக்காளர்கள்’ பரப்புரை செய்துகொண்டிருக்கிறார்கள். திராவிட அரசியல், இடதுசாரி அரசியல் இரண்டின் அபிமானி நான் என்று சுற்றிக்கொண்டிருப்பவர்களின் அரசியலின் அறியாமையை அல்லது பொய்மையை புரிந்துகொள்ளவும் அந்த பதிவு உதவும்.

‘முற்போக்கு’ ஊழல் மற்றும் குடும்ப அரசியல்

அடுத்ததாக ஊழல் என்பதை ஒரு பிரச்சனையாகவே கருதாத முற்போக்காளர்களே இங்கு பெரும்பான்மையாக இருக்க, ஜெயரஞ்சன் போன்ற சிலர் அதை சனாதன சக்திகள்/எலீட்டுகள் செய்யும் விமர்சனம் என்கின்றனர். எது ஊழல் என்ற தீர்க்கமான கேள்வியை கேட்டு அரசுப்பணியிடங்களில் வேலை செய்பவர்கள் செய்வதெல்லாம் ஊழலா, முதலீட்டிய முதலாளிகள் விழுங்குவது ஊழலா என்ற கேள்வியின் மூலமாக சோசலிஸ்ட் வேறு ஆகிவிடுகின்றார்கள். பாவம் தாமஸ் சங்காரா போன்றவர்களும், மற்ற இடதுசாரிகளும் இத்தகைய ஆழமான சிந்தனையை ஜெயரஞ்சன் போன்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது.

இங்கு கவனிக்கவேண்டியது ஆட்சியாளர்களின், ஆளும் வர்க்கத்தின் ஊழலை பற்றிய (இடதுசாரிகளும் வைக்கும்) விமர்சனங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, நடுத்தர மற்றும் விளிம்புநிலை மக்களின் ஊழலை பற்றிய விமர்சனமாக மட்டும் இதை வசதியாக சுருக்கி பதிலளிக்கும் அயோக்கியத்தனத்தை. நேரடியான கேள்வியை அணுகுவது தவிர்க்கமுடியாத சூழலில் ‘எந்த அரசும் ஊழலின்றி இங்கு இல்லை’ என்று அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ரீதியிலான பதிலும், ‘கோர்ட்டே ஊழலில்லை என்று தீர்ப்பளித்துவிட்டது’, ‘ஊழல் நிரூபிக்கப்பட்டுவிட்டதா’ என்ற ரீதியிலான பதில்(கேள்வி)களும் கிட்டும். இப்படியான பதில்களை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளும் ‘முற்போக்காளர்கள்’ எப்படி இன்னொரு சமயத்தில் சனாதன நீதிமன்றங்கள் என்று மற்ற தீர்ப்புகளை ‘அறச்சீற்றத்துடன்’ எதிர்க்கும் தார்மீகத்தை தாம் கொண்டிருப்பதாக நம்புகின்றார்கள் என்பது புரியவில்லை.

அரசு மட்டுமல்லாமல் எந்த அரசியல் அமைப்பும் ஊழலில்லாமல் இருப்பது அவசியம், ஊழல் எந்த கொள்கையையும் சுரண்டவல்லது என்ற ஆத்திச்சூடி விடயத்தை தவிர்த்து, திராவிட கட்சிகளின் ஊழல் என்பது ‘எல்லா அரசிலும் சகஜமப்பா’ என்பதை விட பல்லாயிரம் மடங்கு இருப்பதே நிதர்சனம். இதுதவிர (அரசு இயந்திரத்தில்) எந்த தளத்தில் சுரண்டல் புரையோடிக்கிடந்தாலும் அது பிரச்சனையே. அங்கு பாதிப்பிற்குள்ளாவதும், சுரண்டப்படுவதும் கூட விளிம்புநிலை மக்களே. கொரோனா சமயத்திலும் நிகழும் வண்ணம் நம்மிடம் எல்லாத்தளங்களிலும் புரையோடிக்கிடக்கும் அறமற்ற இந்த சுரண்டல் வேட்கை/பழக்கத்திற்கு முட்டுக்கொடுப்பதை குறைந்தபட்சம் அறிவிருக்கும் எவரும் செய்யமாட்டார்கள் (அதனால்தான் அறிவுஜீவிகள் செய்கின்றார்கள் என்பது வேறு).

குடும்ப அரசியலை பற்றிய விமர்சனத்திற்கு எதிர்வினையாக ராஜன்குறை மாய்ந்து மாய்ந்து பல தத்துவ நூல்களை கரைத்துக்குடித்து எழுதியிருந்த பதிவை தமிழ் அறிவுசூழலின் மூளைகள் வேலை செய்யும் விசித்திர விதத்தை புரிந்துகொள்ள அனைவரும் ஒருமுறையாவது வாசிக்கவேண்டும். மார்க்ஸை படித்துவிட்டு எழிலனின் அரசியலை மெச்சும் தெளிவை பெற்ற ‘முற்போக்காளர்கள்’ நிரம்பியிருக்கும் சூழலில் அவர்களுக்கு ஏற்ற ‘அறிவுஜீவிதான்’. மற்ற சிலர் ‘உதயநிதி கொஞ்சம் உழைத்துவிட்டு ஒரு தேர்தலை விட்டு அடுத்த தேர்தலில் போட்டியிட்டிருக்கலாம் என்பது எனது கருத்து, ஆனாலும் இந்தத் தேர்தலிலேயே நன்கு மக்களுடன் கம்யூனிகேட் செய்கின்றார்’ என்பர் (newsminute பேட்டியில் உதயநிதி பற்றி கவிதா முரளிதரன் சொன்னது).

அமைப்பரசியலை அதில் தவிர்க்கப்பட முடியாத படிநிலைகளை இவற்றை பற்றியான விவாதங்கள் அன்றிலிருந்து அரசின்மைவாதிகள் மற்றும் மற்ற இடதுசாரிகளுக்கு நடுவிலும், அரசின்மைவாதிகளுக்கு உள்ளாகவும் நிகழ்ந்து வந்துகொண்டிருக்கும் நிலையில், அப்பட்டமான மேலிருந்து கீழ் படிநிலையை கொண்ட கட்சிகளையும், அமைப்புகளையும் அவற்றை அப்படியே தக்கவைத்தும் கொண்ட தலைமைகளை சிலாகித்து எழுதும் ‘முற்போக்கு’ அறிவுஜீவிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நிரம்பிய அறிவுசூழல் நம்முடையது. படிநிலைகள் அர்த்தமற்றுப்போகும் விதத்தில் ஒரு அமைப்பை நினைத்தவுடன் நிறுவமுடியாதென்பதுதான் இன்றைய உலக சூழல், ஏனெனில் அதை செய்யக்கூடிய மக்கள் அரசியல் இருந்தால் நாம் இதையெல்லாம் பேசவே அவசியம் இராது, மக்கள் அரசியல் நிகழ்ந்திருக்கும். இப்படியான இக்கட்டான சூழலில் அதை சாத்தியப்படுத்துவற்கான வேலைகளில், உண்மையான பரந்துபட்ட அரசியல் கல்வியை நிதர்சனமாக்குவதில் அவசியமாகும் அமைப்பரசியலை அதன் படிநிலைகள் பாதித்துவிடாமல் அந்த படிநிலைகளை எப்படி நீர்த்துப்போகுமாறு நாம் கீழிலிருந்து மக்கள் அரசியலை ஒரு அமைப்பிலேயே உருவாக்கமுடியும் என்பது நமக்கு இன்றியமையாதது. நமது ‘முற்போக்காளர்களோ’ குறைந்தபட்ச ‘ஜனநாயகம்’ கூட இல்லாத கட்சியமைப்பைக் கூட சிலாகிக்கும் ஜால்ராக்களாக இருக்கின்றார்கள்.

திராவிட அரசியலின் சாதியம்

  • தேர்தல் அரசியலில் சாதி மற்றும் பணம்

சமீபத்தில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என்று வலதுசாரி பத்திரிக்கையாளர் ஒருவர் எழுதியிருந்ததை பார்த்து சோசியல் மீடியா ‘முற்போக்காளர்கள்’ கொதித்தெழுந்தார்கள். தேர்தலுக்கு பின் சாதிவாரியாக எப்படி ஓட்டுக்கள் போட்டிருக்கின்றார்கள் என்பதை பற்றிய மற்றொரு கட்டுரையை அது தீர்க்கமான அலசலை தந்தது போல விவாதித்தார்கள். இங்கு முந்தைய விடயத்தில் கொதித்தெழும்பொழுது சொன்னது தவறான, கொச்சையான, எந்தவித தரவுகளுமோ அலசலுமோ இல்லாத பார்வை என்ற காரணம் அல்ல! இந்த சாதியை சேர்ந்த மக்கள் இப்படி ஓட்டளிப்பார்கள் என்று சொல்வதே சாதியம் என்பதுதான் காரணமாக முன்வைக்கப்பட்டது. இரண்டாவது கட்டுரை செய்ததும் கிட்டத்தட்ட அதையேதான். முந்தையதை எழுதியது வலதுசாரி பிராமணர் என்ற தரவு இந்த நேர்மையற்ற அணுகுமுறையை நமக்கு விளக்கும்.

சாதி மட்டுமே ஒருவர் ஒட்டு போடுவதை தீர்மானிப்பது இல்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான் ஆனால் அது தேர்தல் அரசியலில் ஆற்றும் பங்கை ஒருவராலும் மறுக்கமுடியாது. இடதுசாரி கட்சிகளே ஒரு இடத்தில் பெரும்பான்மை சாதியை பார்த்துத்தான் வேட்பாளரை நிறுத்துகின்றன, திராவிட கட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு இடத்தில் பெரும்பான்மையாக இருப்பவர்கள்தானே அந்த இடத்திற்கு பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்ற கேள்வி எழுமானால் அந்த கேள்வி எழுபவர்களுக்கும், சாதியொழிப்பிற்கும் காத தூரம் உள்ளது என்று சொல்லலாம்; சாதியின் மற்றும் அதன் பல்வேறு சாதிய வெளிப்பாடுகளின் இன்றைய மற்றும் நாளைய இருப்பை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களால் மட்டுமே அதை சொல்லமுடியும். முற்போக்காளர்களில் பலர் சாதிய சமூகத்தில் இதெல்லாம் தவிர்க்கக்கூடியதல்ல என்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றனர்; அப்படியெனில் இத்தனை காலம் திராவிட ஆட்சி சாதியத்தின் துணைகொண்டும்தான் வெற்றி கொண்டிருக்கின்றது, ஆட்சியையும் செய்திருக்கின்றது என்ற எளிய உண்மையை ஏன் உரக்க சொல்லமுடியவில்லை என்பது புரியவில்லை. கடந்த ஆண்டுகளில் எத்தனை சாதிரீதியான அமைப்புகள் வளர்ந்துவிட்டது என்பதை நாம் பார்க்கின்றோம். இந்த அசிங்கத்தை பற்றியான விவாதம் முற்போக்காளர்களால் மேற்கொள்ளப்படவே இல்லை. அதாவது ஓரிரண்டு அமைப்பை அவ்வப்பொழுது விமர்சிப்பதற்கு பதிலாக சாதிரீதியிலான திரட்சியையே தீவிரமாக விமர்சிப்பதென்பது நாம் காணமுடியாதது. ஒடுக்கப்பட்டோர் திரட்சியையும் விமர்சிக்க முடியுமா என்ற அபத்த கேள்வியை கேட்டால் நாம் மேலே குறிப்பிட்ட திரட்சிக்கும் ஒடுக்கப்பட்டோரின் திரட்சிக்கும் பெரும் வித்தியாசங்கள் இருந்தாலும், அது ஒரு சாதிக்கானதாக மட்டுமே நின்றுவிடும் பட்சத்தில் நிச்சயம் தீவிரமாக எந்தவொரு அமைப்பையும் விமர்சிக்கவேண்டும் என்பதே பதில். சாதியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளுக்கும் திராவிட கட்சிகளுக்கும் இருக்கும் உறவை பற்றி எந்தவித தரவுகளும் இல்லாத சில வினவு கட்டுரைகள் போன்றவற்றைத் தவிர எந்தவொரு உருப்படியான கட்டுரைகளையும் நமது ‘முற்போக்கு’ தமிழக பத்திரிக்கைகளில் காணமுடியவில்லை.

தமிழகம் ஆயிரக்கணக்கான கோடிகளை தேர்தலில் செலவிடக்கூடிய ஒரு மாநிலம். இதற்கு இதுபோன்ற பத்திரிக்கை கட்டுரைகள் மட்டுமல்லாது திராவிட கட்சிகளுடன் இணைந்துள்ள விசிக போன்ற கட்சிகளின் வாக்குமூலங்களே சில புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன (பணப்பட்டுவாடா என்பது தமிழகத்தில் நடக்கவே இல்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்பவர்களுக்காக தரவுகள் தரவேண்டியிருக்கின்றது). இயல்பாக மக்கள் அரசியலை அல்லது எந்தவொரு உருப்படியான மாற்றத்தையும் விரும்பக்கூடியவர்களுக்கு எழக்கூடிய சாதாரணமான கேள்வி தேர்தலில் ஏன் இவ்வளவு பணம் செலவிடப்படவேண்டும், முதலில் இத்தனை பணம் கட்சிகளுக்கு எப்படி எங்கிருந்து வருகின்றது, கூட்டணியில் இருக்கும் சிறு கட்சிகள் இந்த திராவிட கட்சிகளின் பணத்தை பெற்றால்தான் கொஞ்சம் இடங்களையாவது பெற முடியும் என்ற (விசிகவினரே வாக்குமூலம் தந்திருக்கும், இடதுசாரிகளும் பெற்றதாக ஒப்புக்கொண்டிருக்கும்) சூழல் எந்த அடிப்படை அவலத்தை காட்டுகின்றது. இப்படியாக ஆட்சிக்கு வருபவர்கள் கொள்ளை அடிக்காமல் என்ன செய்யப்போகின்றார்கள் என்ற கேள்விகளையெல்லாம் விடுத்தது நமது ‘முற்போக்காளர்கள்’ விவாதிப்பதோ இப்படி தேர்தலின்போது மக்களிடமே சிறிதளவு வந்து சேரும் மக்கள் பணத்தை பெறுவது தவறில்லை என்ற ‘சோசலிஸ்ட்’ கருத்தையும், அப்படி மக்கள் பணத்தை பெற்றுக்கொண்டாலும் வாங்கிய பணம் மட்டும் அவர்கள் யாருக்கு ஓட்டுப்போடுகின்றார்கள் என்பதை என்றும் தீர்மானிப்பதில்லை என்பதை நமது தேர்தல் வரலாறு சொல்கின்றது என்ற அரிய கருத்தையும்! விசிகவே தலித்துகள் மையநீரோட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட பெரிய கட்சிகளுடன் கூட்டணி தேவை என்று இட்டுக்கட்டுக்கொண்டிருக்கும் வேளையில் ‘திராவிட அபிமானி மற்றும் சோசியலிஸ்டுகளாக’ இருப்பதைப்போல ‘தலித் அரசியல் மற்றும் திராவிட அரசியல் இரண்டின் அபிமானிகளாகவும்’ பலர் உலா வருவதில் ஆச்சர்யமில்லை. ஆனால் விசிகவே ஒருசில முறை தேர்தலில் பணம் என்பது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பதை சுட்டிக்காட்டியது ஏனோ இந்த அபிமானிகளின் காதுகளுக்கு விழுந்தமாதிரியே தெரியவில்லை; அதை விவாதிப்பார் இல்லை. இதில் தேர்தல் அரசியலில் பணம் என்பதை ஒரு புதிய இடத்திற்கு நகர்த்திச் சென்றிருக்கும் பாஜகவை பற்றி இவர்களுக்கு பேச என்ன நேர்மை இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதும் புரியவில்லை. இதையே எந்தவித கொள்கையும், அறமும் இல்லாத போலி முற்போக்குவியாதிகள் என்று நான் குறிப்பிடுகின்றேன். மிகப்பெரிய முதலீட்டிய நாடான, உலகிலேயே மிக அசிங்கமான அளவில் தேர்தலில் பணம் புரளும் அமெரிக்காவிலேயே இதை பற்றிய தீவிரமான மையநீரோட்ட விவாதங்கள் உருவாகியிருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  • போலி சாதியெதிர்ப்பு

மூன்றாம் பகுதியில் தொடரும்…

--

--