தமிழகத்தின் இன்றைய ‘முற்போக்கு’ அரசியல் -1

PM
5 min readMay 2, 2021

தமிழக அறிவு சூழல், மீடியா மற்றும் பல்வேறு முற்போக்காளர்கள் என்று எல்லா தரப்பினரின் அரசியலும் எப்படி ஆளும் வர்க்கத்தின் அரசியலுக்கு முட்டுக்கொடுப்பதாக இருக்கின்றது என்பதை அவதானித்து வருவதால் இந்த ‘முற்போக்கு’ அரசியல்களை கருத்தியல்ரீதியாக விமர்சித்து எழுதுவதற்கே இந்த பதிவு.

இந்த ஆளும்வர்க்க அரசியல்களை நோக்கி புறக்கணிக்கமுடியாத கேள்விகளை வைக்கும் தலித் அரசியலும் எப்படி குறுகிய அரசியலாக முடிந்துவிடுகிறது என்பதை பற்றியும், இடதுசாரி அரசியல் கட்சிகள் எப்படி தமது கடந்த காலத்தைய இடதுசாரி அரசியலைக்கூட பேசுவதில்லை என்பதை பற்றியான விமர்சனங்களும் இனி
வரும் பகுதிகளில் இருக்கின்றன.

திமுக

திராவிட அரசியல் என்பதே எப்படி சாதியிலிருந்து, பொருளாதாரம் வரை குறுகிய பார்வையை கொண்ட ஒன்று என்பதை முந்தைய பதிவுகளிலும், சமீபத்தில் எழுதிய மைதிலியின் Haunted by fire என்ற புத்தகத்தை பற்றிய பதிவிலும் வாசிக்கலாம்.

  • ஏன் திமுக?

முதலில் ஏன் திமுக (மட்டும்) என்று திரும்பத்திரும்ப வைக்கப்படும் கேள்வியை பார்த்துவிடலாம்.
1. தமிழகத்தின் அரசியல் மற்றும் அதை பல தசாப்தங்களாக ஆண்டுகொண்டிருக்கும் அரசியல் திராவிட அரசியல். திமுக அதிமுக இவற்றில் கொள்கை இல்லாத கட்சி அதிமுக எனவும், திமுக தீவிர கொள்கை அடிப்படையில் அமைந்த கட்சி என்பதும் கிட்டத்தட்ட அறிவு சூழலில் ஒருமித்த குரலில் சொல்லப்படும் கருத்து. அதிமுகவின் ஆட்சியிலும் தாம் சிலாகிக்கும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்று எழுதுபவர்கள் கூட, அதுவும் திமுக என்ற ஒரு கட்சியினால் நிகழ்ந்ததே என்றும் சொல்வதை கேட்டிருக்கமுடியும். இது உண்மையா இல்லையா என்று அலசுவதும், விரிவாக எழுதுவதும் அதிமுகவின் ‘அறிவுஜீவிகளுக்கு’ மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுமானால் முக்கியமானதாகப் படலாம், இடதுசாரி அரசியலை பேசுபவர்களுக்கு அல்ல. திமுகவின் அரசியலை விமர்சித்தால் அது அதிமுகவையும் சேர்த்து விமர்சிப்பதற்கு சமம் எனும்பொழுது ‘ஏன் திமுக’ என்று கேட்பதே அபத்தம்.
2. அதிமுகவின் வீச்சு என்பது பெரும்பாலும் வெற்று கவர்ச்சி மற்றும் சிந்தனை என்பதன் சாயலே இல்லாத விஜய்-அஜித் ரசிகர்களுக்கு இருக்கும் ஈர்ப்பை போன்றது. அதிமுகவின் சில முன்னெடுப்புகளால் மக்களில் சிலர் ஓட்டுபோடுகின்றார்கள் என்பதும் உண்மை என்றாலும், அடையாள/சாதிரீதியிலான காரணிகள் இருந்தாலும் இவை அதிமுகவிற்கு மட்டும் காரணிகள் அல்ல. திமுகவின் வீச்சு பொதுவாக கிட்டத்தட்ட விஜய்-அஜித் ரசிகர்களின் தன்மையிலிருந்து வேறுபடாத தன்மை என்பதாக இருந்தாலும், மக்களிடையே பிரச்சாரம், அறிவுத்தளம் மற்றும் அதைவிட மிக முக்கியமாக (அம்பேத்கர் யாரிடம் நம்பிக்கை வைத்து பிறகு ஏமாந்தாரோ அந்த) ‘படித்த’, வாழ்வில் கொஞ்சம் ‘உயரத்தை’ பார்த்துவிட்ட மக்களிடையே ‘சிந்தனை’ என்ற மாயையின் அடிப்படையில் இருக்கின்றது. சமூக நீதி, சாதியொழிப்பு, மிகவும் வேடிக்கையாக சோசலிசம் இவையெல்லாம் திமுகவின் அரசியல் என்று ‘சிந்தனை’ செய்து அறிவுத்தளத்திலும், ‘படித்தவர்களாலும்’ பத்திரிகையாளர்கள் உட்பட பரப்புரை செய்யப்படுகின்றது. இதை எதிர்த்து எழுதாவிட்டால்தான் ஒருவர் இடதுசாரியா என்ற சந்தேகம் எழ வேண்டும்.

தமிழகத்தில் இது ஆளும் வர்க்கத்தின் அரசியல் என்பதாலும், அதை எதிர்த்து மாற்றை பேசவேண்டும் என்பதாலும் திமுகவிற்கு அதிக நேரம் ஒதுக்குவது முக்கியமாகின்றது.

எதிர்காலத்தில் மதவாத சனாதன சக்திகளை தமிழகத்தில் வராமல் தடுப்பதற்கும் முக்கியமாக செய்யவேண்டியது அடிப்படை விடயங்களை பேசுவது, புரிதலை ஏற்படுத்துவது. ஒவ்வொருநாளும் கூச்சல் போடுவது அல்ல. ஆக ஒரு அரசியலை விமர்சித்து பேசும்பொழுது வசதியாக அடிப்படை விடயங்களை, கொள்கைகளை பேசாமல் விட்டுச்செல்லும் வேலையை செய்யாமல் அணுகினால் அது மதவாத சனாதன அரசியலுக்குத்தான் முதல் எதிரி என்பதையும், வெற்று கூச்சல்களை விட சிறந்த எதிர்ப்பு அது என்பதையும் தனியாக சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

திமுகவின் ‘முற்போக்கு’ அரசியல்

  • சமூக நீதி

இதைப் பற்றி பல்வேறு பதிவுகளை எழுதியாகிவிட்டது. அதனால் சுருக்கமாக எழுதி சில சுட்டிகளைத் தருகின்றேன்.

இட ஒதுக்கீடு என்பது திராவிட அரசியலின் தாரக மந்திரம். இட ஒதுக்கீடு என்பது எந்த சமூகங்களுக்கான தவிர்க்கப்படமுடியாத தற்காலிக செயற்திட்டம் என்ற டெல்தும்டேவின் அலசலிலிருந்து சமூக நீதியில் இட ஒதுக்கீட்டின் இடம், உள் ஒதுக்கீடு போன்றவைகளை இந்தப்பதிவிலும், சாதி ஒழிப்பில் இட ஒதுக்கீட்டின் பங்கு பற்றி இந்தப்பதிவிலும், பொதுவாக இட ஒதுக்கீடு என்னென்ன மாயையெல்லாம் செய்திருக்கின்றது எவ்வளவு பெரும்பான்மையினருக்கு கல்வி தந்து வாழ்க்கை தரத்தை உயர்த்தியிருக்கிறது என்ற பொய் பரப்புரையை பற்றி இங்கும் எழுதியிருக்கின்றேன். இட ஒதுக்கீடு அதை பற்றியான பரப்புரை எல்லாமே மெரிட் என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டதே என்பதையும் மற்றும் பல முக்கியமான கருத்துகளையும் முன்வைக்கும் paviraksha வின் இந்த கட்டுரையும் மிக முக்கியமானது.

சுருக்கமாக எந்த இட ஒதுக்கீடும் அதன் தேவை இல்லாமல் போகுமாறு செய்யும்வரை பல்வேறு வேறுபாடுகளுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும் செயற்திட்டமாக மட்டுமே இருக்கமுடியும் சூழலில், அதையே சமூக நீதி என்று பரப்புரை செய்துவருவது அயோக்கிய அரசியல். இதை விரிவாக மேலே சுட்டி தந்துள்ள பதிவுகளில் பார்க்கலாம். இந்த அயோக்கியத்தனத்தின் மொத்த வீச்சை புரிந்துகொள்வதற்கு ‘சமூக நீதி’ பரப்புரையில் இடம்பெறும் இரு உதாரணங்களைத் தருகின்றேன்.
1. அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு. இது கருணாநிதியின் கருணையில் கிட்டியதென்ற பரப்புரைக்கு மாறாக தொடர் போராட்டங்களுக்கு பிறகு அரசியல் கணக்குகள் போடப்பட்டு கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒருவேளை கருணாநிதியே இதை செய்ததான திரிக்கப்பட்ட வரலாற்றை நாம் உண்மையெனக் கொண்டாலும், அது சமூக நீதியா? ஆம் என்று சொல்பவர்கள் (அருந்ததியர்கள் மட்டுமே இந்தத் துறையில் இல்லை எனினும்) தமிழகத்தில் manual scavenging என்பதை போக்க திராவிட ஆட்சி காலத்தில் என்ன செய்யப்பட்டது என்பதையும், இதில் செப்டிக் டாங்கில் இறங்கும் அவலத்திற்கு மக்களை தள்ளி அதில் பல தசாப்தங்களாக உயிர்துறந்தவர்களை எப்படியாக அரசுகள் நடத்தியிருக்கின்றன என்பதையும் தேடி வாசிக்கலாம். படித்தும் இந்தத் துறைக்கே போகவேண்டியிருக்கின்றது என்று அருந்ததியர்கள் மத்தியிலிருந்து தொடர்ந்து எழும் குற்றச்சாட்டிற்கு என்ன தீர்வை தந்திருக்கின்றது என்பதையும் யோசிக்கலாம். இந்த அருந்ததியர்களும், இந்தத் துறையில் அல்லாத மற்ற விளிம்புநிலை அருந்ததியர்களும் அருந்ததியர்கள் இல்லையா? இட ஒதுக்கீட்டில் மேலே வரும் சொற்பமான அருந்ததியர்களை காட்டி ‘சமூக நீதி’ என்று சிலாகிப்பதற்கு எத்தனை நேர்மையின்மையும், அயோக்கியத்தனமும் இருக்கவேண்டும்?
2. அதேபோல பரப்புரையில் நாம் காண்பது ‘திருநங்கை, நம்பி, திருநர்கள்’ என்று மரியாதையை அளித்து, அவர்களுக்கான நல வாரியத்தை அமைத்து, இட ஒதுக்கீட்டிற்கான ஆதரவை அளித்து அவர்களது வாழ்க்கையையே மாற்றியமைத்தவர் கருணாநிதி என்பது. கொஞ்சம் வசதி படைத்த திருநர்களும், கொஞ்சம் social mobility யை பார்த்துவிட்ட திருநர்களும் இதை உருப்போட்டால் அவர்களும் அயோக்கியர்களே. இன்னமும் மாற்றங்கள் தேவைப்படும் காரணத்தால், அதற்கு அரசுகளின் தயவு தேவையிருப்பதால் இந்த பரப்புரையை தாமும் செய்யும் நிர்பந்தத்திற்கு வேண்டாவெறுப்பாக ஆளாகும் திருநர்களை இங்கு குறிப்பிடவில்லை. பெரும்பாலான திருநர்களின் நிலை என்ன என்பதை சற்று யோசித்தால், அதற்கென தமிழக அரசுகள் என்ன செய்திருக்கின்றன என்பதை யோசித்தால் செய்தது ஒன்றுமே இல்லை என்பது புரியும்.
ஆக, பொதுவாகவும் சரி மேலே குறிப்பிட்ட உதாரணங்களிலும் சரி இட ஒதுக்கீடு என்பதன் தேவையை போக்கும் எந்த வேலைகளையும் முன்னெடுக்காமல் இருப்பதற்காக அதையே சமூக நீதி என்று விற்பதே திராவிட அரசியல் செய்துவரும் ஒன்று. இதை திராவிட ‘இயக்க அரசியல்’, தலித் அரசியல் (ரஞ்சித்துடையது உட்பட), இன்றைய இடதுசாரி அரசியல் என்று எந்தவித முற்போக்கு அரசியலும் கேள்வி கேட்காமல் உருப்போடுவது இங்கு கவனிக்கவேண்டியது.

‘முற்போக்காளர்களின்’ ‘தாவல்’ யுக்தி

தமிழகத்தில் இருக்கும் ‘முற்போக்காளர்களிடம்’ காணும் ஒரு விசித்திர, சுவாரசியமான போக்கு ஒன்று உள்ளது. தமிழக சூழல் (context), இந்திய சூழல் என்று தமக்குத்தோன்றும் நேரத்தில் நிமிடத்திற்கு ஒருமுறை தாவிக்கொண்டே இருப்பது. உதாரணத்திற்கு இட ஒதுக்கீடு என்ற ‘சமூக நீதி’ பாலிசியின் எல்லைவரை சென்றுவிட்ட, அதன் பிரச்சனைகளையும் பார்த்துவிட்ட மாநிலம் தமிழகம். ஒருபக்கம் இதைப்பற்றிய பரப்புரையை செய்துகொண்டே, இன்னொருபக்கம் இட ஒதுக்கீடுதான் பிரதான பிரச்சனை என்பதையும் வலியுறுத்தும் யுக்தி. EWS காரணம் என்று நினைத்தால் அது தவறு, அதற்கு முன்பிருந்தே தொடர்ந்து கையாளப்பட்டு வரும் யுக்தி இது. அதெப்படி என்றால் இருக்கவே இருக்கின்றது மத்திய அரசின் கீழ் வரும் நிறுவனங்கள். அவற்றில் பிரச்சனை இல்லாமல் இல்லை ஆனால் இடதுசாரிகள் தெளிவான காரணங்களுக்காக ஒரு மாநிலத்தை தேர்ந்தெடுத்து இட ஒதுக்கீட்டின் போதாமைகளை விளக்கினால், அறிவோ அல்லது நேர்மையோ இல்லாமல் எங்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டிருக்கின்றது என்று தமிழகத்தில் இருந்து இந்திய சூழலுக்கு தாவி பதில் சொல்வது, இந்திய சூழலை வைத்து இட ஒதுக்கீடு என்பதை ஓயாமல் பேசும் இந்த ‘முற்போக்காளர்கள்’ ஒருபோதும் தமிழக சூழலை எந்தவித விமர்சனப்பார்வையோடும் அணுகியது கிடையாது.
இது இந்த விடயத்திற்கு மட்டும் பொருந்தும் ஒன்றல்ல. தமிழக மீடியா மற்றும் திராவிட ‘அறிவுஜீவிகள்’ கடந்த ஆண்டுகளில் பேசிய பிரதான பிரச்சனைகளைகளிலும் இந்த போக்கை நாம் காணலாம். எச் ராஜா தும்மினதிலிருந்து, எஸ் வி சேகர் வாய் கொப்புளித்ததிலிருந்து, சுமந்த் ராமனின் உளறல்கள் வரை பல மிக முக்கியமான விடயங்களை ‘அறிவுஜீவிகளும்’ மற்ற முற்போக்காளர்களும் விவாதித்து தள்ளினார்கள். இதேநேரத்தில் தாமரை ஜென்மத்திற்கும் மலரமுடியாது இங்கு என்பதையும் நாம் தொடர்ந்து அதே கூட்டத்திடம் இருந்து கேட்கமுடியும். அத்தனை கொள்கைப்பிடிப்புள்ள தமிழகத்தில் ஏன் விவாதம் முழுவதும் மதவாத/சனாதன சக்திகளின் உப்புப்பெறாத உளறல்களாக இருக்கவேண்டும் என்று கேட்டுவிட்டால் இந்திய சூழலுக்கு தாவி பாசிச அரசியலை பற்றியும், மோடியை பற்றியும் பேசி பாசிச அரசியல் எதிர்ப்புதான் இன்றைய பிரதான பிரச்சனை என்பதான நேர்மையற்ற பதில் கிடைக்கும். சில இடங்களில் மதவாத/சனாதன அரசியலின் இடையூறுகள் தமிழகத்தில் இல்லாமல் இல்லை, அதை பேசுவது தவறு என்று இங்கு சொல்லவில்லை. இல்லாத பிரச்சனையை இவர்கள் முக்கியமாக அறிவுஜீவிகள் பேசுவதற்கான பின்னணி ‘கலாச்சார’ போரின்மீதான வசதியான ஒற்றைப்பார்வையில் இருக்கின்றது. பெரியாரது அரசியலில் தொடங்கி இன்றைய அரசியல் யுக்தியான திராவிட vs இந்துத்துவா என்ற மிகவும் உவப்பான, எல்லா முக்கிய விவாதங்களையும் இல்லாமல் செய்யும் வரை தொடர்கின்றது. தலித் அரசியலும் இத்தகைய கலாச்சார போரில் மட்டுமே ஈடுபாடு கொண்டிருப்பதை பற்றி பிறகு பார்க்கலாம்.

இதுவே தமிழக ‘முற்போக்காளர்’ ஒருவரை ஒற்றைப்படையாக பிராமண ஆதிக்க அரசியலே இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றது என்று கூசாமல் சொல்லவைக்கின்றது. எப்படி என்பதற்கு மேற்கூறிய ‘தாவல்’ யுக்தி தான் காரணம். பணியா முதலாளிகள் தான் இந்தியாவை ஆளுகின்றார்கள் என்று பேசும் இவர்கள் ஒருபோதும் தமிழகத்தை ஆளுவது யார் என்ற அலசலில் ஈடுபடுவதில்லை. ஆனால் இவர்கள் வைக்கும் ஒவ்வொரு கூற்றும் எந்தவித context உம் இல்லாமல் பொத்தாம்பொதுவான முழுமுதற் உண்மையாக முன்வைக்கப்படும். மிக சாமர்த்தியமான இந்தப்போக்கை இனம்கண்டுகொள்வது அவசியம். முதலீட்டியத்தை பற்றி சிறிதளவேனும் அக்கறை இருந்தால் தமிழக சூழலில் மாறன்களை பற்றி பேசாமல் செல்லமுடியாது, கட்சி-ஆட்சி அதிகாரம்-முதலீட்டியம்-தனியுரிமை என்ற தொடர்பின் ஓர் மிகச்சிறந்த உதாரணம் இவர்கள். எந்த முற்போக்காளர் பேசியிருக்கிறார்கள் தமிழக சூழலில் என்பதை கவனித்தால் முற்போக்காளர் கூட்டத்தில் 99 சதவிகிதம் காணாமல் போய்விடும்.

மேம்போக்கு அரசியலின் ‘ticking all the right boxes’ யுக்தி
இட ஒதுக்கீட்டை பற்றியே ஓயாமல் பேசி, அதையே பிரதான அரசியலாகக் கொண்டிருக்கும் இந்த ‘அறிவுஜீவிகள்’ மற்றும் ‘முற்போக்காளர்கள்’ தங்களை சோசியலிஸ்ட்டாகவும் காட்டிக்கொள்ள பயன்படுத்தப்படும் யுக்தி ‘ticking all the right boxes’ யுக்தி. அதாவது எங்காவது ஓரிடத்தில், எப்பொழுதாவது தனியார் கல்வி, மருத்துவம், முதலீட்டியம் போன்றவற்றை பற்றி எதிர்ப்பு தெரிவித்து பாக்ஸை டிக் செய்து வைத்துக்கொள்வது. இட ஒதுக்கீட்டின் போதாமையை, அதன்மீதான ஆபத்தான, முக்கியமாக விமர்சனமே இல்லா, ஒற்றைப்பார்வையை விமர்சிக்கும் விமர்சனங்களை எதிர்கொள்ளும்பொழுது ‘இட ஒதுக்கீட்டை பேசுவது மற்ற விடயத்திற்கு எதிரானது அல்ல’ என்றும் ‘சாதியொழிப்பு பேசுபவர்கள் எல்லோரும் இலவசக் கல்வி, மருத்துவம் இதையெல்லாம் கோருபவர்கள் தான்’ என்றும் இவர்களால் நேர்மையில்லாமல் சொல்லமுடிகின்றது. சரிதான், ஏன் பிறகு உங்கள் எழுத்துக்களில், பேச்சுக்களில் பெரும்பான்மை இடத்தை இட ஒதுக்கீடு பிடிக்கின்றது, நீங்கள் மருந்துக்கு உபயோகம் செய்யும் சோசலிசம் இல்லை என்ற கேள்விக்கு எதாவது பதில் கிடைக்கக்கூடும். இங்கு முக்கியம் ஒருவர் தொடர்ந்து முன்வைக்கும் பிரதான அரசியல்/பார்வைகள் என்னவாக இருக்கின்றன என்பது, அதில் சுயவிமர்சனம் என்று எதையாவது காணமுடிகின்றதா என்பது. எல்லா முற்போக்கு வேடங்களையும் இட்டுக்கொள்வதற்காக டிக் செய்துகொள்ளும் பாக்சுகள் அல்ல ஒருவரது பிரதான அரசியல் என்பதை புரிந்துகொள்வது அவசியம். உலகத்தில் நிகழும் எல்லாவற்றையும் ஒருவர் பேசிக்கொண்டிருக்கமுடியாது என்ற எதார்த்தத்தை புறக்கணித்து, அப்படி முற்போக்காளர்களை பேசக்கோரும் பார்வை இது என்று வேண்டுமென்றே திரிக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதால், இந்தப்பார்வை அப்படியல்ல என்பதையும் சேர்த்து எழுதுவது முக்கியமாகின்றது. ஒருவர் உலகில் நிகழும் எல்லாவற்றையும் பேசவேண்டும் என்பதல்லாமல், முன்பே சொன்னதுபோல ஒருவரது பிரதான அரசியல் என்ன, அவர் முன்வைப்பதில் இடதுசாரி பார்வை என்று எதாவது இருக்கின்றதா என்ற கேள்வியை முன்வைப்பதே நோக்கம். உதாரணத்திற்கு சோசியலிஸ்டுகள் இட ஒதுக்கீடு பற்றி நிச்சயம் பேசமுடியும், ஆனால் அதைத் தாண்டிய அரசியலை பேசாமல், அதன்மீதான இடதுசாரி பார்வையை, விமர்சனங்களை புறந்தள்ளி பேசமுடியாது என்பதே நேர்மையான பதில்.

இலவசங்களை பற்றிய எலீட்டுகளின் பரப்புரை

இரண்டாம் பகுதியில் தொடரும்…

--

--