உயர்கல்வி, இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி

PM
7 min readAug 28, 2020

இட ஒதுக்கீடு, கல்வி போன்றவற்றை அலசுவதற்கு தமிழகம் சிறந்த மாநிலம் என்பதால் இந்த பதிவிலும் பெரும்பாலும் தமிழகத்தை பற்றியே பார்க்கப்போகின்றோம், இந்தியா மொத்தத்திற்குமான தரவுகளும் தரப்பட்டாலும்.

பள்ளிக்கல்வி

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கிட்டத்தட்ட 65 % அரசுப் பள்ளிகள், 15% அரசு உதவி பெறும் பள்ளிகள், 20% தனியார் பள்ளிகள்¹ ². பெரும்பாலான இந்த அரசுப் பள்ளிகள் தொடக்கக் கல்வி மற்றும் உயர் தொடக்க கல்வி அளிக்கும் பள்ளிகள் ஆகும். இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வி அளவில் அரசு பள்ளிகள் கிட்டத்தட்ட 44%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 18%, தனியார் பள்ளிகளின் விகிதம் 38% ஆக உள்ளது. இதில் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளை கணக்கில் சேர்க்கவில்லை.

எல்லா நிலைகளையும் கணக்கில் கொண்டால் சுமார் 43 % மாணவர்கள் அரசுப்பள்ளிகளிலும், 24% அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 33 % தனியார் பள்ளிகளிலும் படிக்கின்றார்கள்¹ ². மேல்நிலை கல்வியை மட்டும் கணக்கில் கொண்டால் சுமார் 36.5–45% அரசுப்பள்ளிகளிலும், 25–27% அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 27–38% தனியார் பள்ளிகளிலும் படிக்கின்றார்கள் என்று கொள்ளலாம்² ³(கீழே அளித்திருக்கும் தரவுகள் அல்லாமல் மற்ற ஆண்டுகளில்/தரவுகளில் இந்த விகிதங்கள் இன்னும் வேறாக இருக்க வாய்ப்பிருக்கின்றது).

அரசு உதவி பெறும் பள்ளிகள், இதற்கான நிதி, இந்த பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களின் சம்பளம் என்று எல்லாமே அரசிடம் இருந்து வருவதால் கிட்டத்தட்ட அரசுப்பள்ளிகள் தான் என்பது பொதுவான கருத்தாக இருக்கின்றது; சில பள்ளிகள் தனியார் வகுப்புகளும் நடத்துவதாகவும், அப்படியான பள்ளிகளில் எல்லா மாணவர்களிடமும் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது⁴. இது தவிர இந்த பள்ளிகள் தனியார் பள்ளிகள் போல பெரும் கட்டணம் வசூலிப்பதாக புகார்களும் உள்ளன. உதாரணங்கள் இங்கு, இங்கு மற்றும் இங்கு. இதை பற்றிய தீவிர விசாரணை மற்றும் (பத்திரிக்கை) ஆய்வுகள் இல்லாத நிலையில், எத்தனை சதவிகிதம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உண்மையில் அரசுப் பள்ளிகள் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளமுடியும் என்பதில் தெளிவில்லை (இது தவிர அரசுப் பள்ளிகளிலேயே சில நேரம் ஆசிரியர்கள் கட்டணம் வசூலிப்பதாக புகார்களும் உள்ளன).

மொத்தத்தில் விளிம்புநிலை மக்கள் பெரும்பாலும் அரசுப்பள்ளிகளிலும், நேர்மையாக இயங்கக்கூடிய (எத்தனை சதவிகிதம் என்று நாம் அறியாத) அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கின்றார்கள் என்று நாம் கொள்ளலாம். தலித்துகளின் விகிதம் அரசுப்பள்ளிகளில் அதிகமாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறைவாகவும், அதைவிட தனியார் பள்ளிகளில் குறைவாக இருப்பதாகவும் தரவுகள் சொல்கின்றன. இந்த பள்ளிகளில் கூட பாகுபாடு/வேறுபாடு (discrimination) காரணமாக படிக்க முடியாமல் போகும் விளிம்புநிலை மக்கள் சிலரும் உள்ளனர்.

கல்வி அமைப்பின் பாகுபாடு

பொதுவாக கல்வி எவ்வாறு இருக்கவேண்டும், எவ்வாறு இருக்கின்றது என்பதை பற்றியே பெரும் விவாதம் தேவைப்படுகின்றது. அதை இந்த பதிவில் விரிவாக பார்க்கப்போவதில்லை. தற்போதைய அமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. எந்தவித சாதகமும், சிறப்பும் இல்லையெனில் தனியார் பள்ளிகள் என்ற ஒன்று இருக்கவே இருக்காது. ஆக, நமது கல்வி அமைப்பு பணம் படைத்தவர்களுக்கு சாதகமானது.

பொதுவாக சொல்லும் சால்ஜாப்புகளில் ஒன்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்களும் விளிம்புநிலை மக்களே என்பது. சரி, அரசுப்பள்ளி மாணவர்களை பற்றி பேசினால் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை பற்றி பேசும் மனநிலை என்ன? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மெதுவாக ‘சமூக நீதி’ வந்து சேரும் என்பதா? அல்லது இவர்களும் கிட்டத்தட்ட அரசுப்பள்ளி மாணவர்கள்தான் என்பதுதான் சொல்லவருவதா? அப்படியெனில் 1. ஏன் இந்த பள்ளிகள் தனி பிரிவாக இருக்கவேண்டும், 2. எத்தனை பள்ளிகள் கட்டணம் வசூலிக்கின்றன அல்லது உதவி பெற்றுக்கொண்டே தனியார் பள்ளியாகவும் நடைமுறையில் இருக்கின்றன, 3. ஏன் நாம் சொல்வது சரியென்றால் அரசுப்பள்ளி மாணவர்கள் உதவி பெறும் பள்ளி மாணவர்களை விட நமது அமைப்பில் பின்தங்கியிருக்கின்றார்கள் போன்ற கேள்விகள் முக்கியம்தானே? அவை ஏனோ எழுவதே இல்லை.

இன்னொரு சால்ஜாப்பு எப்படி விளிம்புநிலை மக்கள் கூட தனியார் கல்வியை பெறும் வண்ணம் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பது. இது உண்மையென்று நாம் ஏற்றுக்கொண்டாலும் கூட, முன்பே சொன்னதுபோல இன்றைய அரசுப்பள்ளி மாணவர்கள் இது அவர்களுக்கும் நடக்கும் வரை காத்திருக்கவேண்டுமா என்பது புரியவில்லை. இந்த கூற்றுக்கள் அனைத்தும் முதலீட்டியம் எப்படி வளர்ச்சியை தந்து மக்களை முன்னேற்றியிருக்கின்றது என்ற முதலீட்டிய பரப்புரை போன்றவை. மிக முக்கியமாக, அப்படியே தனியார் கல்வியை பெறும் வண்ணம் வளர்ச்சி அடைந்த விளிம்புநிலை மக்கள் சிலர் இருந்தாலும் இது சுரண்டல் இல்லாமல் எப்படி சமூக நீதி ஆயிற்று என்ற சிந்தனையும் எழுவதில்லை.

இப்படியான பரப்புரையை கேட்டுக்கேட்டு அதேபோலவே சிந்திப்பதால் தான் தனியார் பள்ளிகளில் விளிம்பு நிலை மக்களுக்கு 25% இட ஒதுக்கீடு என்பது போலான மேலோட்டமான விடயங்களை சிலாகிக்க முடிகின்றது (இந்த ஒதுக்கீட்டிலும் குளறுபடி நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன). ஏன் இத்தனை பணத்தை அரசு இப்படியாக தனியாருக்கு விதம்விதமாக வாரி இறைக்கவேண்டும், ஏன் அரசுப்பள்ளிகளை இப்பணத்தை வைத்து மேம்படுத்தக்கூடாது, எல்லா மாணவர்களும் பயன்பெறுவார்களே போன்ற கேள்விகளும் எழுவதில்லை. பல அரசியல் பிரமுகர்கள் தனியார் பள்ளி வைத்து நடத்துவதே சேவை செய்யத்தான் என்ற பரப்புரை மட்டுமே இன்னும் நிகழவில்லை.

இட ஒதுக்கீடும் சமூக நீதியும்

இந்த பின்னணியிலேயே நாம் இட ஒதுக்கீட்டை பார்க்கவேண்டும். அப்படி பார்ப்பதற்கு முன் சொல்லவேண்டிய முக்கியமான விடயம்: நமது இட ஒதுக்கீடு என்பது நாம் எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் தகுதி முறையை (meritocracy) அடிப்படையாகக் கொண்டதே ஆகும். இல்லை என்று மறுப்பவர்கள் போன பதிவில் பார்த்த Teltumbde அவர்களின் பரிந்துரையை பரப்புரை செய்யலாம், நடைமுறைக்கு கொண்டுவர வழி செய்யலாம். அதுவே நிகழ்ந்தாலும்கூட இட ஒதுக்கீடு அதன் இயல்பிலேயே சமத்துவமற்ற ஒரு அமைப்பின் சாட்சியாகவும், சிலருக்கு மட்டுமானதாகவும் தான் இருக்கமுடியும்.

உயர் கல்வி பெற்றால் சமூக முன்னேற்றம் அடையலாம் என்பதான ஒரு கட்டமைப்பையும், பல துறைகளுக்கு நடுவிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் கட்டமைப்பையும் தான் நாம் வைத்துக்கொண்டிருக்கின்றோம். எல்லோருக்கும் உயர்கல்வியும், அதற்கேற்ற வேலையும் சாத்தியப்படப்போவதில்லை எனும்பொழுது இப்படியான கட்டமைப்பே சமத்துவத்திற்கு நேரெதிரான விடயம் தான் (வேறு கட்டமைப்பிற்கு சாத்தியம் உள்ளது; அது சோசலிசம்).

  • தெரிந்தெடுத்த அறச்சீற்றங்கள்

இந்த கட்டமைப்பில் பெரும் போட்டி நிலவும், ‘சமூக நீதி’ விவாதம் அடிக்கடி அடிபடும் ஒரு இடம் மருத்துவத் துறை. நீட் சம்பந்தமான பல விவாதங்களை நாம் கேட்டிருப்போம். நீட் எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மத்திய அரசின் அதிகாரத்தை எதிர்ப்பதை தவிர்த்து, நீட்டை எந்தெந்த அடிப்படைகளில் எதிர்க்கின்றோமோ, அதே எதிர்ப்பை நீட்டிற்கு முன்பாகவும் நமது கல்வி அமைப்பின் மீதும், கல்வியில் தனியார்மயத்தின் மீதும் வைக்கவேண்டிய அவசியம் இருந்திருக்கின்றது என்பதே உண்மை. நமக்கு நமது ஆளும் வர்க்கம் அதற்கு தேவையான ‘சமூக நீதி’ விவாதங்களை எடுத்தாளும்போது கூட சேர்ந்து கத்துவது மட்டுமே வழக்கமாகிவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை. உதாரணத்திற்கு 2% அரசுப்பள்ளி மாணவர்கள்கூட பல ஆண்டுகளாக மருத்துவத் துறைக்குள் செல்லவில்லை என்பது இந்த கட்டமைப்பில் என்னவிதமான ‘சமூக நீதி’?⁵ இது பேசுபொருள் ஆகியிருக்கின்றதா?

  • உயர் கல்வி

உயர் கல்வியில் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrollment Ratio) தமிழகத்தில் அதிகம் என்று நாம் கேட்டிருப்போம். சமீபத்தைய தரவுகளின் படி ஒட்டுமொத்த மக்களுக்கான சேர்க்கை விகிதம் கிட்டத்தட்ட 49%, SC க்கு 41.6% மற்றும் ST க்கு 37.8%.⁶ இந்த சேர்க்கை விகிதம் என்பது 18–23 வயது வரையிலானவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் உயர் கல்வியில் இருக்கின்றார்கள் என்ற கணக்கு. இங்கு நாம் மேல்நிலை பள்ளி சேர்க்கை விகிதத்தை முக்கியமாக ஆண்களின் விகிதத்தை (75%) கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தோமானால், எவ்வளவு பெரிய சதவிகிதம் உயர் கல்வியில் இருக்கின்றார்கள் என்பது புரியும். GER கடந்த இரு தசாப்தங்களில் தொடர்ந்து கூடிக்கொண்டே வந்திருக்கின்றது.

இப்படி கல்வியை சாமான்ய மக்கள் பலருக்கும் கிடைக்கச் செய்தது மற்றும் இட ஒதுக்கீட்டின் மூலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் சரிசமமான வாய்ப்பளித்தது திராவிட அரசியல் என்று பல பரப்புரைகளை நாம் கேட்டிருக்கின்றோம். முதலில் ‘சரிசமமான வாய்ப்பு’ (equality of opportunity) என்ற அரசியலின் அடிப்படையே பிரச்சனைக்குரியதாக இருந்தாலும், சமத்துவமில்லாத நமது அமைப்பில் அது கூட எப்படி பெரும்பாலான மாணவர்களுக்கு இல்லை என்பதை ஏற்கனவே பார்த்தாகிவிட்டது.

அடித்தளமே சமத்துவமில்லாததாக இருக்கும்பொழுது உயர் கல்வி வேறாக இருக்குமா? தமிழகத்தில் 76% சதவிகிதம் உயர் கல்வி நிறுவனங்கள் தனியார் வசம். மீதம் இருக்கும் 24% இல் 13.6% அரசு கல்லூரிகள், 10% அரசு உதவி பெறும் கல்லூரிகள்.⁷ அரசு கல்லூரிகளில் சுமார் 19% சதவிகிதம் பேர் படிக்கின்றார்கள். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 20%. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கட்டணம் அதிகமாக இருக்கும் கல்லூரிகளும் உள்ளன⁸, சுயநிதி படிப்பும் (courses) கொண்ட கல்லூரிகளும் உள்ளன. ஏற்கனவே பார்த்த சமத்துவமற்ற அமைப்பு, அதனால் வேண்டுமென்றே பின்தள்ளப்படுபவர்கள்/வஞ்சிக்கப்படுபவர்கள் தவிர, உயர் கல்வியில் பெரும்பகுதியை தனியார் வசம் வைத்திருப்பதன் மூலமாகவும் சாதி மற்றும் வர்க்க பாகுபாடு கடைபிடிக்கப்படுகின்றது.
கல்வித்துறை இதனால் பெரிய அளவில் கருப்புப்பணத்தை உருவாக்கும் இடமாகவும் இருக்கின்றது⁹.

இட ஒதுக்கீடு சொற்பமானவர்களுக்கானதா?

இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு பார்த்தால் இத்தனை பேருக்கு கிடைக்கப்பெற்ற உயர் கல்வியில் இட ஒதுக்கீடு அதன் பலன் என்று நாம் அலசும்பொழுது அது பெரிய சதவிகிதம்தானே? போன பதிவில் குறிப்பிட்டிருந்த ‘வேலைவாய்ப்பில் எவ்வளவு சொற்பமான சதவிகிதத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்’ என்பதற்கு பதிலாக ட்விட்டரில் sujays வைத்த கேள்வியும் இதுபோன்ற ஒன்றே. இங்கு எதையெல்லாம் ஒதுக்கிவிட்டு இந்த விவாதத்தை மேற்கொள்ளுகின்றோம் என்பதிலேயே அரசியல் இருக்கின்றது; அந்த அரசியல் விளிம்புநிலை மக்கள் எல்லோருக்குமானது அல்ல. இப்படியான இட ஒதுக்கீடை தாண்டி செல்லவேண்டிய அவசியத்தை பேசாமல் இருப்பது மட்டுமல்லாமல், அதை பற்றிய தொடர் பரப்புரையும், மிக சொற்பமான ‘உயர்வென’ நம் சமூகம் வைத்திருக்கும் பதவிகள் மற்றும் துறைகளில் பங்கு பற்றியான விவாதமாகவே, அதாவது சொற்பமானவர்களை பற்றிய விவாதமாகவே இட ஒதுக்கீடு பற்றிய விவாதம் தொடர்ந்து நிகழ்கின்றது. ஆனால் நிதர்சனத்தில் இட ஒதுக்கீடு இந்த விவாதங்களை தாண்டி கல்வியில் எல்லா துறைகளிலும் இருப்பதால், அதோடு பொதுவாக சேர்க்கை விகிதமும் அதிகமாக இருப்பதால் நாம் அதை நேர்மையாகத் தான் அலசவேண்டும்.

ஏன் கல்வி முக்கியம்? பல பதில்களும் இதற்கு இருந்தாலும், நமது கட்டமைப்பில் உயர் கல்வி கற்றால் சமூக முன்னேற்றம் அடைய முடியும் (upward mobility) என்பதாக வைத்திருக்கின்றோம். எப்படி இந்த முன்னேற்றம் சாத்தியம்? படிப்பிற்கேற்ற, நல்ல வருமானம் உள்ள வேலைகள் கிடைப்பது மூலம். இங்குதான் வேலைவாய்ப்பை பற்றி Teltumbde மற்றும் பிறர் சுட்டிக்காட்டும் தரவுகள் முக்கியமாகின்றன. நிச்சயமாக தனியார் துறையில் இட ஒதுக்கீட்டினால் நல்ல நிலையில் இருக்கக்கூடியவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். எத்தனை சதவிகிதம் பேர் என்று கணக்கிடுவது கடினம். நாம் பதிலளிக்கப் போகும் கேள்வி சொற்பமானவர்கள் என்று சொல்வது சரியா, சிலர் என்று சொல்லியிருக்கவேண்டுமோ, அல்லது 30% பேர் பயனடைந்திருப்பார்களோ, இல்லையெனில் எத்தனை சதவிகிதம் பேர் என்ற விவாதம் பற்றியது. அதாவது எல்லோருக்குமான அரசியலை பற்றிய விவாதம் அல்ல.

GER ஐ வைத்து OECD நாடுகள் அளவிற்கு தமிழகம் வளர்ந்துவிட்டதாக நடத்தப்படும் பரப்புரை. அந்த நாடுகள் மீதே விமர்சனம் இருப்பதை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும், அங்கு அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் சதவிகிதம் 80% க்கும் மேல், சில நாடுகளில் 90% க்கும் மேல். படிப்பு கூடக்கூட வேலைவாய்ப்பின்மையின் (unemployment) அளவு குறைவது பல OECD நாடுகளில் நாம் காண்பது. இந்தியாவிலும், முக்கியமாக மிக அதிகமான GER என்று பரப்புரை செய்யப்படும் தமிழகத்திலும் நிலை என்ன? வேலைவாய்ப்பின்மை படித்தவர்களிடையேதான் அதிகம் இருக்கின்றது. கிட்டத்தட்ட 40% பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதாக தரவுகள் சொல்கின்றன¹⁰ ¹¹. இது தவிர முறைசாரா வேலைகள் எப்படி பொதுப்பணித்துறையிலும் அதிகரித்து வருகின்றது என்பதையும் இங்கு வாசிக்கலாம். 2017–18 யிலும் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில் இருக்கக்கூடிய இந்தியர்கள் 41.9%. கடந்த இரு தசாப்தங்களில் மற்ற துறைகளில் நடந்த ‘வளர்ச்சி’யின் போதாமையால் வேலைவாய்ப்பு எப்படி தேய்ந்து கொண்டு போகின்றது, குறிப்பாக இதனால் பெண்கள் எப்படி முதலில் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இங்கு வாசிக்கலாம்¹². உயர் கல்வி பெற்றதில் எத்தனை சதவிகிதம் பேர் சம்பந்தமே இல்லாத வேலைகளில் சுரண்டப்படுகின்றார்கள் என்பது தெரியவில்லை. அதை பற்றிய துணுக்கு செய்திகள் நிறைய உள்ளன; அதை இங்கு, இங்கு, இங்கு மற்றும் இங்கு வாசிக்கலாம். மேற்கூறியதுடன் இதையும் வாசித்தால் தமிழகத்தில் பல ஆண்டுகளாக நாம் கண்ட இன்ஜினியரிங் பித்து, அதையொட்டி முளைத்த கல்லூரிகள், அவை அளித்த கல்வி இதெல்லாம் ‘கல்வியை ஜனநாயகப்படுத்துவது’ அல்ல பெரும் கொள்ளை என்பது புரியும். இதில் கல்விக் கடன் பெற்று அதை கட்டுவதற்காகவே உழைப்பவர்கள், வேலையில்லாமல் கட்டமுடியாமல் இருப்பவர்கள், வாழ்வை முடித்துக் கொண்டவர்கள் போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எங்கிருந்து எங்கு எதற்காக பணம் செல்கின்றது என்பதையும் யோசித்து பார்ப்பது முக்கியம்.

ஆக உயர் கல்வியில் சேர்க்கை விகிதமானாலும் சரி, இட ஒதுக்கீடு பற்றியான பரப்புரை ஆனாலும் சரி இவை எளிதாக சுருக்கிப்பார்க்க கூடிய விடயங்கள் இல்லை. ஒற்றைப் பார்வையோடு அணுகுவது சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பை பற்றிய மிக முக்கியமான கேள்விகளை இல்லாமல் செய்துவிடும்.

இது தவிர கல்வி, அதன் தரம் பற்றிய விவாதத்தை (பொதுவான வலதுசாரி பார்வையில் இல்லாமல்) இடதுசாரி பார்வையில் பேசுபொருளாக்குவது மிக முக்கியம். அப்படியான விவாதத்தை மேற்கொண்டால் கல்வி என்ற பெயரில் பெரும்பாலும் ஏமாற்றுவேலை தான் நடக்கின்றது என்ற முடிவிற்கே வரமுடியும். GER படியே உயர் கல்வியில் நுழையவே இல்லாமல் 50% க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேறு வாழ்கின்றனர்!

இத்தனை வாதங்களும் பரப்புரையை நம்புபவர்களுக்கும், செய்பவர்களுக்கும் போதாது என்பதால் அடிப்படை கேள்விக்கு திரும்ப செல்வோம். இட ஒதுக்கீட்டினால் சமூக முன்னேற்றம் நிகழ்ந்து பெரும் சதவிகித மக்கள் பயனடைந்திருந்தால், அவர்கள் பொருளாதார ரீதியில் மேலே வந்திருப்பார்கள். இட ஒதுக்கீடு பின்தங்கிய மக்கள் அனைவருக்குமானது அல்லது குறைந்தபட்சம் பெரும்பாலானவர்களுக்கானது என்றால் இத்தனை ஆண்டுகளில் பிரிவுகளுக்கு இடையிலான இடைவெளி நிச்சயம் கணிசமாக குறைந்திருக்க வேண்டும். பல தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடு அதை நிகழ்த்தவில்லை என்பதை தரவுகள் சொல்கின்றன¹³. இதிலும் இடைவெளி குறையத்தானே செய்கின்றது என்று சொல்லக்கூடியவர்கள் இருப்பார்கள் என்பதால் இதை குறிப்பிடுகின்றேன்: 2012 இல் கீழே இருக்கக்கூடிய 50% சதவிகித மக்கள் (bottom 50%) வெறும் 6% சொத்தை வைத்திருக்கின்றார்கள். நிலமற்றவர்களாக எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதையும் அங்கு வாசிக்கலாம் - 69%.

அதோடு இந்திய அளவிலான தரவுகளின் படி எல்லா பிரிவுகளுக்குள்ளும் (category) சமத்துவமின்மை கூடியிருக்கின்றது¹⁴. ஆக இட ஒதுக்கீடு மீதான விமர்சனமில்லா ஒற்றைப்பார்வை/பரப்புரை வெகு சிலருக்கான அரசியல் தான் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை; அதற்கும் முதலீட்டிய ‘வறுமை குறைந்தது, வாழ்க்கைத்தரம் உயர்ந்தது,…’ பரப்புரைக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் ஒன்றும் இல்லை.

உள்- மற்றும் வெளி காரணிகள்

தனியார்மயமாக்கல் வெளியில் இருந்து திணிக்கப்படும் ஒன்று என்பதையும் நாம் அறிவோம். அதனால் நம் ஆட்சியாளர்களுக்கு அதில் பங்கில்லை என்பதல்ல. சுத்தமாக பங்கில்லை என்றால் இத்தனை தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூலமாக அவர்களே கொள்ளை அடிக்கமாட்டார்கள், நெருங்கியவர்களுக்கு ஏதுவாக தனியார்மயத்தை உபயோகிக்கமாட்டார்கள், ஊழல் செய்ய மாட்டார்கள், முக்கியமாக பொய் பரப்புரையை மேற்கொண்டு மக்களை முட்டாள் ஆக்கமாட்டார்கள், சுரண்டலையே சமூக நீதி என்று பரப்புரை செய்யமாட்டார்கள். மாறாக எங்கு செல்ல வேண்டும், எவையெல்லாம் அதற்கு தடையாக இருக்கின்றன என்பதை மக்களுக்கு தாமே சொல்பவர்களாக இருப்பார்கள். அயோக்கியர்கள் எல்லாம் தேவதூதனாக மக்களுக்கு தெரிவதால் இந்த எளிமையான விடயத்தையும் விளக்க வேண்டியிருக்கின்றது.

முன்பு சொன்ன கல்வி பற்றியான இடதுசாரி பார்வையை தனியாகத்தான் எழுத வேண்டும். மொத்த கல்வியமைப்பு, சமூக பொருளாதார கட்டமைப்பு என்று பல விடயங்களை மாற்றவேண்டிய அவசியம் இருக்கும்பொழுது தமது சட்டகத்திற்குள் கூட எல்லோருக்குமான அரசியலை பேசாத நிலையில் நாம் இருப்பது அவலம்.

  1. https://ssa.tn.nic.in/Statistics.htm
  2. https://bit.ly/2EvGNnQ
  3. https://www.brlf.in/brlf2/wp-content/uploads/2018/05/Secondary-Education-in-India_2015-16.pdf
  4. https://www.epw.in/journal/2005/22-23/special-articles/schooling-and-skilling-countrys-youth.html
  5. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/feb/18/not-even-2-percent-of-tamil-nadu-government-school-kids-study-medicine-1571885.html
  6. http://aishe.nic.in/aishe/viewDocument.action?documentId=262
  7. https://epsiindia.org/wp-content/uploads/2019/02/AISHE-2017-18.pdf
  8. https://www.thehindu.com/news/cities/Madurai/many-aided-colleges-collect-exorbitant-first-term-fees-madurai/article26925797.ece
  9. https://www.epw.in/journal/2017/17/web-exclusives/1000-page-study-unaccounted-incomes-india-which-hasnt-been-made
  10. https://cse.azimpremjiuniversity.edu.in/wp-content/uploads/2019/10/Mehrotra_Parida_India_Employment_Crisis.pdf
  11. https://thefederal.com/states/south/tamil-nadu/1-in-10-educated-urban-males-unemployed-40-of-graduates-in-tn-jobless/
  12. https://www.epw.in/journal/2020/34/notes/labour-market-changes-india-2005%E2%80%9318.html?0=ip_login_no_cache%3D614725b1bdb514786a50319b151b838e
  13. https://www.isid.ac.in/~epu/acegd2019/papers/NitinBharti.pdf
  14. https://wid.world/document/n-k-bharti-wealth-inequality-class-and-caste-in-india-1961-2012/

--

--