Haunted by fire-பகுதி இரண்டு

PM
5 min readMay 1, 2021

பொதுவாக CPM இல் இருக்கும் பெரும்பாலானோர் சரியான புரிதல் இல்லாமலும், சுய விமர்சனம் இல்லாமலும் இருப்பவர்கள், குறிப்பாக தலைமைகள் என்ற கருத்தை கொண்டிருப்பதால் பொதுவாக அவர்களைத் தேடி எடுத்து வாசிப்பதில்லை. யூனியன்களை மையமாகக் கொண்ட இடதுசாரி அரசியல் மீது பெரும் விமர்சனங்கள் இருந்தாலும், அந்த அரசியல்கூட தமிழகத்தில் என்னென்ன அடக்குமுறைகளை சந்தித்தது என்பதை தெரிந்துகொள்வதற்காகவே மைதிலி சிவராமன் எழுதிய Haunted by fire: Essays on Caste, Class, Exploitation and Emancipation என்ற நூலை தேடி வாங்கி படித்தேன். நமது இடதுசாரிகளுக்கே உரிய பிரச்சனையும், கட்சிக்கு விஸ்வாசம் என்ற பிரச்சனையும் மைதிலியிடம் இருந்தாலும், தீர்க்கமான பல பார்வைகளை அவர் பல கட்டுரைகளில் முன்வைத்திருக்கின்றார். ஆனால் அவரது ஆகச்சிறந்த கட்டுரைகள் என்று நான் நினைப்பது அடக்குமுறைகளை, அதை சந்தித்தவர்களது மற்றும் அவரது வார்த்தைகளில், அப்படியே பதிவு செய்த கட்டுரைகள்.

சிலவற்றில் சில மோசமான பார்வைகளையும் வைத்திருக்கின்றார். எல்லா இடங்களிலும் காண்பதை போல இவருக்கும் தமது சில பார்வைகளில் இருக்கும் முரண்கள் கண்ணில் படாமல் போவதை பார்க்கமுடிகின்றது. அவ்வப்பொழுது வெகு சில முக்கியமான விமர்சனங்களை அவர் கட்சியின் மீது வைத்தாலும் கட்சிக்கு விசுவாசமுள்ள ஒருவராக சில இடங்களில் அவர் வெளிப்படுகின்றார் . CPI மீதான விமர்சனங்களில் சில விளக்கமாக எழுதப்பட்டிருந்தாலும் சில இடங்களில் வெறும் கட்சிமோதலால் ஏற்பட்ட காழ்ப்புணர்வாகவே தோன்றுகின்றது.

மைதிலியின் பார்வைகளில் முக்கியமானதாக மற்றும் அவர்மீதான முக்கியமான விமர்சனங்களாக எனக்குத் தோன்றுவதை இந்த பதிவில் சுருக்கமாக எழுதியிருக்கின்றேன்.

தலைமை மற்றும் கட்சி

முந்தைய பகுதியில் பார்த்த பல அடக்குமுறைகளையும், திராவிட அரசியலின் அடிப்படையையும், முக்கியமாக திராவிட கட்சிகளின் நவதாராளமயத்தையும் விரிவாக எழுதும் மைதிலி ஒரு இடத்தில், ‘scientific socialism’ என்ற ஒற்றைப்பார்வையை கொண்டிருப்பதன் விளைவாக, பின்வரும் பார்வையை முன்வைக்கின்றார். ‘மனிதத்தை போற்றும்’ அண்ணா எப்படி இதையெல்லாம் செய்திருக்கமுடியும் என்ற (கற்பனை) எதிர்வினைக்கு பதிலளிக்கும் அவர், ஒரு கட்சி அல்லது நிறுவனத்தின் தன்மை என்பது ஒருசில தலைமைகளின் விருப்பிற்கு ஏற்றவாறு அமைவது அல்ல என்கின்றார். நேருவை போல காங்கிரஸ் என்றால் காங்கிரஸை முற்போக்கு எனலாம், அண்ணா போல திமுக என்றால் திமுகவை முதலாளித்துவத்திற்கு எதிரான கட்சி எனலாம், ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை என்றும், ஆதிக்க வர்க்க அரசியலே இந்த கட்சிகளின், அரசின் போக்கை தீர்மானிக்கின்றது என்றும் முடிக்கின்றார். இங்கு இயல்பாக நமக்கு எழும் கேள்வி எப்படி இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் விதிவிலக்காக இருக்கமுடியும் என்பது; அதாவது ஆதிக்க அரசியல் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலை மட்டும் தீர்மானிக்காதா என்ற கேள்வி. அதை எதிர்பார்த்தார் போல அவர் சொல்லும் மற்றொரு விடயம் உழைக்கும் வர்க்கங்களின் போராட்டங்களில் இருக்கும் அனுபவம் மற்றும் பொதுவுடைமையின் மீதான உண்மையான ஈடுபாடு இத்தகைய போக்கிலிருந்து ஒரு கட்சியை காக்கும் என்பது. கடைசியாக அவர் சொல்வதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், அதை தர்க்கரீதியில் சரி என்று அனுமானம் செய்துகொண்டால் அதன் நீட்சியாக திமுக பொதுவுடைமையை அரசியலாகக் கொள்ளாத கட்சி என்ற முடிவிற்கே வரமுடியும்.

தலைமைகளை அலசுவதை விட கட்சியின்/அமைப்பின் அரசியலை அலசுவதே முக்கியம் என்பது உண்மையென்றாலும் பொதுவாக வலதுசாரி முதல் இடதுசாரிகள் வரை, தலைமை என்ற பதத்தை புறக்கணிப்பதாகவும் எதிர்ப்பதாகவும் சொல்லிக்கொள்ளும் இடதுசாரிகள்/அரசின்மைவாதிகள் உட்பட, தலைமை என்ற பதத்தில் பொதுவாக சுயவிமர்சனமின்றி திளைத்திருப்பதால் நிதர்சனம் என்பது தலைமைகள்/ஆளுமைகள் மையநீரோட்ட அரசியல் மட்டுமல்லாது மாற்று/இயக்க அரசியலிலும் கூட மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றார்கள் என்பது. அதனால் திமுகவின் அரசியலில் தலைமைகளுக்கு பங்கு எவ்வளவு என்று அலசுவதில் தவறில்லை. தமிழகம் போன்ற இடத்தில் தலைமைகளை கட்சியிலிருந்து விலக்கிப்பார்த்து தலைமைகளுக்கு வேறு தன்மையை வழங்குவது வேடிக்கையான விடயம். ஆனால் இது தமிழகம் என்பதை சற்று மறந்துவிட்டு, இந்த கேள்வியை அணுகினோமானால் உண்மையில் கிட்டக்கூடிய பதில் ஒரு தலைமையின் தன்மையால் நிர்ணயிக்கப்படக்கூடியது அல்ல ஒரு அமைப்பின் மொத்த அரசியல் மற்றும் போக்கு என்பதே உண்மை. அதோடு எனது பார்வையில் இப்படியாக தலைமைகளைத் தாண்டிய பல விடயங்கள் ஒரு அமைப்பின் போக்கை/தன்மையை தீர்மானிப்பதால் தலைமை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக ஆகிவிடுவதில்லை என்பது. தலைமையின் வீச்சு ஒரு அமைப்பின் மீது எவ்வளவு தூரம் இருக்கின்றது என்பது எல்லா அமைப்பிற்கும் ஒன்றாக இருப்பதில்லை. ‘இரும்புப் பெண்மணியான’ ஜெயலலிதாவை சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

தலைமையின் செயற்பாட்டை, தலைமை தமது கட்சியின் மீது வைத்த விமர்சனங்களை, தலைமை செய்ய/எதிர்க்க முற்பட்ட விடயங்களை, தலைமைக்கு அமைப்பின் மீது இருந்த வீச்சை, அந்த வீச்சு பல்வேறு காரணங்களால் தம்மை மீறி கட்டமைக்கப்பட்ட தமது அமைப்பின் ஆதிக்க அரசியலுக்கு எதிராக தவிர்க்கமுடியாமல் கொண்டுவரப்பட்ட வீச்சா அல்லது தமது ஆதிக்க அரசியலை திணிக்க இருந்த வீச்சா போன்ற பலவற்றை கணக்கில் கொண்டு ஒரு தலைமையின் அரசியலை நம்மால் அலசமுடியும். இப்படியான அலசலில் நாம் ஈடுபட்டோமானால் மைதிலி அவர்கள் தந்த தரவுகளை மட்டும் கொண்டே ஒருவர் எளிதில் அண்ணாவின் அரசியலுக்கும் அவரது திமுகவின் அரசியலிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்ற முடிவிற்கே வரமுடியும். தலைமைகள் முக்கியமில்லை என்று சொல்வது, அது எல்லா இடங்களிலும் முரண்களே இல்லாமல் பின்பற்றப்படும் பட்சத்தில், மரியாதைக்குரிய பார்வை (முன்பே சொன்னது போல எங்கும்/எந்த அரசியலிலும் இதை காணமுடியாது). ஆனால் எந்தவித அலசலும் இல்லாமல் தலைமைகளை அணுகுவது தீவிர விமர்சனத்திற்குட்படுத்தப் படவேண்டியது. மைதிலியின் பார்வையும் இங்கு அப்படியான ஒன்றுதான், ஆபத்தானதும் பொய்யும் கூட.

நக்சல்பாரிகள் மீதான மையநீரோட்ட இடதுசாரிகளின் பார்வை

நக்சல்பாரிகள் பற்றி மைதிலி எழுதியிருக்கும் ஒரு கட்டுரையும் ஆச்சர்யம் தந்தது. பொதுவாக நக்சல்பாரிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்பது மட்டுமே பொதுவாக மையநீரோட்ட இடதுசாரிகளிடமிருந்து கேட்கமுடியும்பொழுது இவர் நக்சலின் இருப்பிற்கான காரணங்களையும், மையநீரோட்ட இடதுசாரி அரசியல் என்ன செய்யவேண்டும் என்பதையும் பேசுகின்றார். தேர்தல் அரசியலில் சமரசம் சகஜம் என்று எல்லாவித அயோக்கிய சமரசங்களுக்கும் பலரும் முட்டுக்கொடுக்கும் சூழலில் கொள்கைரீதியான, செய்யவேண்டிய அடிப்படை வேலைகளிலிருந்து விலகும் மையநீரோட்ட இடதுசாரி அரசியல் சமரசங்களை ஒருவர் விமர்சித்து எழுதியிருப்பது முக்கியம். ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்றை பலரும் கருத்தாக கொண்டிருப்பதை போல, இங்கு ஒன்றை எழுதிவிட்டு பொதுவாக கருத்தியல் ரீதியான முரண்பாடுகளை மைதிலி கொண்டிருந்திருக்கமாட்டார் என்று நம்புகின்றேன்.

அடிப்படை கேள்விகளின் முக்கியத்துவம்

வன்முறையை பற்றி அற்புதமான ஒரு பார்வையை முன்வைக்கின்றார். வன்முறை என்று நாம் புரிந்துகொள்வதற்கு மாறாக தினம்தோறும் பெரும்பாலான மக்கள் உள்ளாகும் கண்ணுக்கு புலப்படாத வன்முறைதான் அதிகம் என்கின்றார். உதாரணத்திற்கு பல்லாயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவினால் இறப்பது என்பது கூட்டு சிசுக்கொலையின் வன்முறையிலிருந்து எந்தவகையில் வேறுபட்டது என்ற கேள்வியை எழுப்புகின்றார். இதையே தவிர்க்கப்படக் கூடிய இறப்புகளை, ஊட்டச்சத்து குறைபாடை மற்றும் பிறவற்றை பற்றிய கேள்விகளாக நம்மையே கேட்டுக்கொள்ளலாம். அதேபோல படைப்பாற்றலையும், பலவித சாதனைகளையும் புரியக்கூடிய திறனைக் கொண்ட பெரும்பாலான குழந்தைகள் ‘முட்டாள்களாக’, ‘மந்தமாக’ ஆக்கப்படுவது வன்முறை இல்லையா, வாழ்வாதாரத்தை பற்றிய பயத்துடன் பெரும்பாலான மனிதர்களை வைத்திருப்பது வன்முறை இல்லையா போன்ற கேள்விகளை எழுப்புகின்றார். இதில் சில வேறுபாடுகள் எனக்கு இருந்தாலும், இட ஒதுக்கீட்டை சமூக நீதி என்று 24 மணிநேரமும் பரப்புரை செய்வதன், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த ‘ஜீனியஸ்’ கொண்டாட்டத்தை, பிதற்றலை ‘முற்போக்கு’ என்று எண்ணிக்கொள்ளும் அவலத்தின் பின்னான தீவிர வன்முறையை இந்தக் கேள்விகள் வெளிச்சத்திற்கு கொண்டுவருகின்றன. எப்படி என்பதை ஏற்கனவே விளக்கி மற்ற பதிவுகளில் எழுதியாகிவிட்டது. சாதிய கொலை சம்பவங்களை வன்முறைகளாக பார்த்து அவ்வப்பொழுது கண்டித்து செல்லும் ஆனால் திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சிகளின் சாதிய வேறுபாடுகளை மற்றும் வன்முறைகளை பேசாத ‘முற்போக்காளர்களை’ நோக்கி இந்த மைதிலியின் ‘எது வன்முறை’ என்பதான கேள்வியை வைக்கலாம். இப்படி நாம் கேட்டுக்கொண்டே போகலாம். அடிப்படை கேள்விகளை எழுப்பாமல், கொள்கை அடிப்படையிலாக அல்லாமல் எழும் வெற்று பேச்சுக்களும், நிலைப்பாடுகளும் என்றைக்கும் மிகக்குறுகியவை, முற்போக்காகத் தோன்றினாலும் அவை தீவிரமாக விமர்சிக்கப்படவேண்டியவை என்பதே நேர்மையாக இதை அணுகினால் நாம் வந்தடையக்கூடிய பதில்.

பெண்ணியம்

பெண்ணடிமைத்தனம் எப்போது உருவானது, பெண்ணியம் மற்றும் சோசலிசம் என்பது பற்றியான மைதிலியின் கட்டுரை மிக சுவாரசியமான ஒரு தொகுப்பு. அதில் தொகுக்கப்பட்டிருக்கும் எந்த ஒருவரின் கருத்தோடும் முழு உடன்பாடு இல்லை என்பதை சொல்லியாக வேண்டும். காத்லீன் கவ் இதை பற்றி எழுதியிருப்பதை இனிதான் வாசிக்கவேண்டும். கட்டுரையிலிருந்து ஒரு பத்தி கீழே. பொதுவாக குடும்பம் என்பது ஒழிக்கவேண்டும் என்று பேசுபவர்கள் எப்படியான உலகை கற்பனை செய்கின்றார்கள் என்பதையோ, அப்படியான உலகில் எழக்கூடிய பிரச்சனைகளை நேர்மையாக பேசுவதையோ இன்னும் பிற முக்கிய விடயங்களை அலசுவதையோ செய்வதே இல்லை. இந்த கட்டுரையிலும் அப்படி எதுவும் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் எதிர்காலத்தை பற்றிய இவர்களது பார்வையையாவது ஒழுங்காக வைத்திருக்கின்றார்கள். நல்ல கட்டுரை என்று நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே சீனா, ரஷ்யா, கியூபா பற்றிய சற்றும் சுயவிமர்சனமில்லா பார்வைகள் ஆரம்பித்துவிடுகின்றன. அதுவரையிலான அலசலை செய்துவிட்டு இது எப்படி சாத்தியம் என்று மனித மூளை சிந்தனை செய்யும் விதத்தை பற்றி வியக்க மட்டுமே முடிகின்றது.

சுயவிமர்சனத்தின் முக்கியம்

  • கியூபா மற்றும் சீனா கம்யூனிச நாடுகளா?

கியூபா மற்றும் சீனாவை பற்றி இந்த நூலில் சிறிது எழுதியிருக்கும் இவர் அந்த நாடுகளின் மீது எந்தவித விமர்சனப்பார்வையையும் வைக்கவில்லை. கியூபாவில் உடலுழைப்பு மற்றும் அறிவுத்தளம் என்று நாம் பிரித்துவைத்திருக்கும் இரண்டிற்கான இடைவெளியை குறைக்கும்படியான வேலைகள் நிகழ்ந்திருந்தால் அது பாராட்டிற்குரியதே. எனக்கு இதை பற்றி (intellectual vs manual labor) தமிழுலகத்தில் ஓரளவேனும் மைதிலி போன்ற சிலர் பேசியிருக்கின்றனர் என்பதே மகிழ்ச்சியை தரும் ஒன்றாக இருக்கின்றது. ஆனால் உடலுழைப்பை எவ்வளவு துச்சமாக பார்க்கின்றோம் என்பதை சுட்டிக்காட்டுவதையும் மற்றும் அறிவுத்தளத்தில் இருப்பவர்களிடத்தில் உடலுழைப்பை மையமாகக் கொண்ட வேலைகள் மீது மரியாதையை உண்டாக்கவேண்டும் அல்லது சிறிது தொடர்பு ஏற்படுத்தவேண்டும் என்பதுடன் இந்தப்பார்வைகள் நின்றுவிடுகின்றன. இந்தப்பார்வையை விட இப்படியான கட்டமைப்பையே கேள்வி கேட்கும்விதமான விமர்சனங்கள், இப்படியான கட்டமைப்பு இன்றைய உலகில் தவிர்க்கப்படக் கூடியதா, அப்படி இனி தவிர்க்கப்படவே முடியாது என்பதை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் கியூபாவில் கண்டதாக இவர் சொல்வதுதான் கம்யூனிசமா, இல்லையெனில் சோசலிசம்/கம்யூனிசம் என்பது எத்தகைய உலகமாக இருக்கும் மற்றும் அதன் நீட்சியாக நாம் கற்றுக்கொள்ள/புரிந்துகொள்ள வேண்டியது என்னென்ன போன்றவையே முக்கியமாகப் படுகின்றன. இதில் ஒரு பகுதியை எனது மேதாவிகளை (genius) பற்றிய (பிற்காலத்தில் போஸ்ட் செய்யப்போகும் பதிவில்) கொஞ்சம் பேசியிருக்கிறேன். மற்றவற்றை கொஞ்சமேனும் வாசித்தபிறகு வரும் வருடங்களில் எழுதுவதாக உத்தேசம் இருக்கின்றது.

  • புரட்சிக்கல்வி

அதேபோல கல்வி எப்படி ஆளும் வர்க்கம் மற்றும் அரசின் நலன்களை பேணுவதற்காக, அதை தக்கவைத்துக்கொள்வதாற்கான பரப்புரையை கட்டமைப்பதிற்காக பயன்படுத்தப்படுகின்றது என்பதை சரியாக சுட்டிக்காட்டும் மைதிலி மற்ற இடதுசாரிகள் போலவே கியூபா, சீனா போன்ற நாடுகளில் நிகழ்ந்த ‘வெளிப்படையான’ புரட்சிக்கல்வியை, அதன்மீதான விமர்சனங்கள் இடதுசாரி அரசியலுக்கு மிக மிக முக்கியம் என்ற சூழல் இருக்கும்பொழுது சிலாகித்து மட்டுமே செல்கின்றார். இது மிகவும் விமர்சனத்திற்குரிய ஒற்றைப்பார்வை.

முடிவுரை

மைதிலியின் எழுத்தை இந்த புத்தகத்தில் மட்டுமே வாசித்திருப்பதால், புத்தகத்தில் வாசிக்கும்பொழுது குறிப்பெடுத்து தோன்றிய சில கருத்துக்களை இந்த இரண்டு பதிவுகளில் எழுதியிருக்கின்றேன். மூன்றாவது பதிவான ‘முற்போக்கு அரசியலை’ பற்றிய பதிவிற்கும் புத்தகத்தை பற்றியான இந்த பதிவுகளுக்கும் பெரும் சம்பந்தம் இல்லையென்பதால் அதை தனி பதிவாகவே எழுத இருக்கின்றேன். மைதிலியிடம் ஆங்காங்கு திருத்தல்வாதத்திற்கு (revisionist) எதிரான விமர்சனங்கள் வெளிப்பட்டாலும் சுய விமர்சனம் போதிய அளவு இடதுசாரி அரசியல்கள் மீது இல்லாதது வருத்தம். ரஷ்யா மற்றும் சீனாவை சோசலிஸ்ட் நாடுகள் என்றழைத்ததிலும், எந்த விதமான பெரிய விமர்சனங்களும் வைக்காததிலும், அப்படியான சுயவிமர்சனம் இல்லாதபோது மற்ற அரசியல்கள் உருப்போடுதல்களுக்கு தாம் தம்மை அறியாமல் ஒரு அங்கீகாரத்தை வழங்குகின்றோம் என்பதை உணராததிலும் ஏமாற்றம். ஆனால் இவ்வளவு குறைகளையும் தாண்டி தமிழர்களுக்கு அவர்கள் பொதுவாக வாசிக்கும் (‘அறிவுஜீவிகளும்’ எழுதும்) குப்பைகளை விட, இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள விடயங்கள் நிச்சயமாக இருக்கின்றன. முற்றும்.

--

--