Haunted by fire: Essays on Caste, Class, Exploitation and Emancipation — Mythili Sivaraman-பகுதி ஒன்று

PM
9 min readApr 29, 2021

மைதிலி சிவராமன் அவர்களின் பல கட்டுரைகளின் தொகுப்பே Haunted by fire என்ற புத்தகம். இந்த புத்தகத்தின் முன்னுரையை வ. கீதா அவர்களும், மைதிலி அவர்களின் புதல்வியும் எழுதியுள்ளார்கள். முன்னுரையை படிக்காமல் நேரே கட்டுரைகளுக்கு சென்று இடதுசாரியான மைதிலியை நேராகவே வாசிக்கலாம் என்பது எனது கருத்து. புத்தகம் நீதிக்கட்சி, பெரியார், திராவிட அரசியல், திராவிடக் கட்சிகள் மற்றும் அவற்றின் கொள்கைகள், சோசலிசம் என்பதற்கும் திராவிட கட்சிகளுக்கும் உள்ள சம்பந்தம், தலித்துகள் மற்றும் உழைக்கும் வர்க்கம் மீதான திராவிடக்கட்சிகளின் வன்முறை, கடைசியில் ஆசிரியரின் பார்வையில் இடதுசாரி அரசியல் போன்றவற்றைப் பேசுகின்றது. இவை ஆரம்பகால திராவிட அரசுகளின் போது எழுதப்பட்ட கட்டுரைகள். புத்தகம் அலசியதில் சிலவற்றை கீழே சுருக்கமாக எழுதியிருக்கின்றேன்.

பெரியார்
பெரியாரை (அன்றைய?) இடதுசாரிகள் புறக்கணிக்கும் போக்கை விமர்சித்து, அவர் புறக்கணிக்க முடியாத ஒரு ஆளுமை என்றும் இந்த ஆளுமை உருவாவதற்கான மற்றும் திராவிட அரசியல் உருவாவதற்கான வரலாற்று + அன்றைய சமூக பொருளாதார காரணிகளை அலசவேண்டியது மிக முக்கியம் என்றும் ஆசிரியர் ஆரம்பிக்கின்றார். அவர் சொல்வதில் உண்மை இருந்தாலும் தமிழகத்தில் முற்போக்கு பிராமணர்களுக்கே இருக்கக்கூடிய வியாதி அல்லது நிர்பந்தம் இவரையும் விட்டுவைக்கவில்லையோ என்ற ஏமாற்றத்துடன் மேலே வாசித்த எனக்கு வியப்பே. காரணம் அவரது கறாரான விமர்சனங்கள்.

ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தால் அது ஒருநாள் உண்மையாகிவிடுகின்றது என்பது என்றுமே ஒரு அபத்தமான ஒரு கூற்றாக எனக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால் இந்த கூற்று எத்தனை ஆளமானது என்பதற்கு நீதிக்கட்சி தொடங்கி இன்றுவரை நிகழும் திராவிட அரசியலின் பரப்புரை ஒரு சிறந்த உதாரணம். அத்தகைய பரப்புரைக்கு மத்தியில் உண்மையை கண்டுகொண்டவர்கள் என்றுமே இருந்துவருகின்றனர்.

பிராமணர்களின் அன்றைய ஆதிக்கத்தை விளக்கும் ஆசிரியர், அதே நேரத்தில் இருந்த மற்ற ஒடுக்கும் சாதிகளிடம் இருந்த ஆதிக்கத்தை சுட்டிக்காட்டும் துணிவை இழந்துவிடவில்லை. இப்படியாக சில துறைகளில் மேலோங்கியிருந்த பிராமணர்களின் ஆதிக்கத்தை குறைக்க, அதில் தமக்கு பங்கை உறுதிசெய்ய மற்ற சில ஒடுக்கும் சாதிகளை சேர்ந்த எலீட்டுகள் முன்னெடுத்த இயக்கமே நீதிக்கட்சி என்பதையும் தெளிவாக முன்வைக்கின்றார். பிற்பாடு பெரியார் தலைமையேற்ற பின் நீதிக்கட்சி தீவிரமாக சாதியை எதிர்க்கும் ஒரு இயக்கமாக மாறியதாக எழுதுகின்றார். இதை புரிந்துகொள்ள நாம் மைதிலியையோ, ராஜ் கௌதமனையோ வாசிக்கவோ அல்லது அன்றைய வரலாறு மொத்தத்தையும் கரைத்துகுடிக்கவேண்டிய அவசியமோ இல்லை. நீதிக்கட்சியின் பிரதான அரசியலாக இட ஒதுக்கீடு ஏன் இருந்தது என்ற கேள்விக்கு பதிலை
யோசித்தாலே போதும். அதே கேள்வியை இன்றும் கேட்பதுடன், இன்றுவரை அடிப்படை பொருளாதார கட்டமைப்பு ஏன் (சில எலும்புத் துண்டுகளை போடுவதைத் தாண்டி) எந்தவிதத்திலும் மாற்றியமைக்கப்படவில்லை என்ற கேள்வியையும் சேர்த்துக் கேட்டால் மொத்த திராவிட அரசியலை பற்றிய புரிதல் கிட்டும்.

பெரியாரின் சாதியொழிப்பு, பெண்ணியம் மற்றும் சோசலிசம்
பொதுவாக பெரியாரை அலசும்பொழுது அது இடதுசாரிகளாக இருந்தாலும் சரி தலித்துகளாக இருந்தாலும் சரி ஒருவித நேர்மையற்ற போக்கையே நாம் காணக்கூடிய சூழலில் இந்த ஆசிரியரின் பார்வை வேறாக இருக்கின்றது. பெரியாரின் சாதியொழிப்பில் உள்ள பிரச்சனை அவர் சாதியை புரிந்துகொண்ட விதம். பிராமணர்கள், இந்துமதம் இவ்விரண்டையும் எதிர்த்தால் சாதி ஒழிந்துவிடும் என்பது சிறுபிள்ளைத்தனமான புரிதல் என்று சொன்னால் அது மிகையாகாது. இதற்கான ஆதாரங்கள் அவர் வாழ்ந்த காலத்திலேயே இருந்தன. இந்த அடிப்படையான விமர்சனத்தை பெரியாரின் பங்களிப்பை புறக்கணிக்காமல் முன்வைப்பது மிக மிக முக்கியமானது என்றவகையில் அதை அந்த காலத்திலேயே செய்திருக்கும் இந்த ஆசிரியர் முக்கியமானவர்.

ஒரு ஆளுமையின் ஓரிரு வாக்கியங்களையும், கூற்றுக்களையும் எடுத்துக்கொண்டு அதைவைத்து தாம் விரும்பும் அரசியலை பேசுவதோ, ஆளுமையின் அரசியலையே மாற்றி தமக்கு வேண்டிய மாதிரி எழுதுவதோ இங்கு புதிதில்லை. சற்றும் நேர்மையில்லாத இதை இடதுசாரிகளும் செய்வதுண்டு. பெரியாரை சோசலிஸ்ட் என்றும் ஏன் அரசின்மைவாதி என்றும்கூட சொல்வதை கேட்டிருக்கின்றேன், ஒரு புனைவை அல்லது கலைப்படைப்பை வாசிப்பதுபோல. இங்கும் இந்த ஆசிரியர் மிக கறாராக, நேர்மையாக பெரியாரின் அரசியலில் தமக்கு வேண்டியவற்றை புகுத்தாமல் உள்ளதை உள்ளபடி அணுகி தம் பார்வையை முன்வைக்கின்றார். கடவுள் மற்றும் மதம் பற்றி பெரியார் சொன்ன ஒரு விடயத்தை நமக்கு வாசிக்கத்தந்து, இடதுசாரி பார்வை போல தோன்றும் அது எப்படி, ஏன் இடதுசாரி பார்வையில்லை என்பதை விளக்குகின்றார். இதற்காக மக்களின் மூடநம்பிக்கையை ஒழிக்க பெரியார் எடுத்த முயற்சிகளையோ, அவரது நாத்திகத்தையோ எங்கும் புறக்கணிக்கவில்லை.

பெரியார் சோவியத் பயணத்தின் போது அதன் நாத்திகத்தின் மீது ஈடுபாடு கொண்டதாக சொல்கின்றார். அங்கிருந்து திரும்பி வந்த பெரியார் ஜமீன்தாரி ஒழிப்பு கருத்தரங்கு/மாநாடுகளை முன்னெடுத்திருக்கின்றார். அதற்காக sedition வழக்கில் ஜெயிலுக்கு சென்றுவந்த பிறகு அவர் சோசலிஸ்ட் முயற்சி எதையும் முன்னெடுக்கவில்லை என்பதை குறிப்பிடுகின்றார். இதுதவிர ஆசிரியர் வைக்கும் ஒரு குற்றச்சாட்டை/விமர்சனத்தை என்னால் சரிபார்க்கமுடியாததால் இங்கு தவிர்க்கின்றேன். ஆக பெரியாருக்கு சோசியலிசத்தில் ஈர்ப்பு குறுகிய காலத்திற்கோ அல்லது அவர்மட்டுமே அறியும் வகையில் அவருக்குள்ளாக நீண்ட காலத்திற்கோ இருந்தது மட்டுமே போதுமெனும் பட்சத்தில் அவரை சோசலிஸ்ட் எனலாம். மற்றபடி அவரது அரசியலுக்கும் சோசியலிசத்திற்கும் சம்பந்தம் இல்லை. பெரியார் scientific சோசலிசம் பேசவில்லை என்பதன் அடிப்படையில் அல்லாமல், அவரது அரசியலுக்கும் சோசியலிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இருந்திருக்கவில்லை என்ற அடிப்படையிலேயே எனது பார்வை அமைகின்றது.

ஆசிரியருடன் நான் சற்று வேறுபடும் இடம் பெரியாரின் பெண்ணியத்தின் மீது அவர் வைக்கும் விமர்சனத்தில். பெண்களின் நிலைக்கு சமூக பொருளாதார கட்டமைப்பையும், சுரண்டலையும் சரியாக இனம்கண்டு கொள்ளாமல் ‘ஆண்மை’ என்பதை காரணமாக முன்வைக்கின்றார் என்பது ஆசிரியரின் விமர்சனம். சமூக பொருளாதார சுரண்டலை நேரடியாக ஆழமாக பேசவில்லை என்றாலும் பெரியாரின் பெண்ணியத்தின் விளைவென்பது பெண்களின் மீதான சமூக பொருளாதார சுரண்டலை நீர்த்துபோகச்செய்வது என்ற பார்வை எனக்கு இருப்பதால் இந்த விமர்சனத்தில் சிறு வேறுபாடு உண்டு.

பிற்பாடு தமது அரசியலில் தெளிவில்லாததால் பெரியார் எவ்வாறு பற்பல முரண்களை உள்ளடக்கியவராக இருந்திருக்கின்றார் என்பதற்கு சில உதாரணங்களை ஆசிரியர் தருகின்றார். ஆனால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சுய மரியாதையும், அதற்கு ஒரு அடையாளமும் அவசியமென்பதையும், இதற்கு சமூக/கலாச்சாரத் தளத்தில் செயல்பட வேண்டிய முக்கியத்துவத்தையும் மார்க்சிஸ்டுகள் உணரத்தவறியது பெரும் தவறு என்று சொல்கின்றார். பெரியார் இப்படியான சுயமரியாதை தரும் அடையாளத்தை தந்தது மிக முக்கியமானது என்கின்றார், அதை தங்களது கேவல அரசியலுக்கு உபயோகம் செய்துகொண்ட திமுகவை சாடினாலும். இந்த சமூக/கலாச்சார தளம் என்பது பொருளாதாரத்திலிருந்து தனியான தளம் என்றும் அதை கைப்பற்ற வேறு தனி வழிமுறைகள் வேண்டும் என்றும் பல ஏமாற்று வேலைகளை இனம்கண்டுகொண்ட இந்த ஆசிரியர் போன்றவர்களைக் கூட நம்பவைத்ததே திராவிடத்தின் வெற்றி. ஆசிரியரது இந்த பார்வையில் இருந்து நான் முற்றிலும் வேறுபடுகின்றேன், சுயமரியாதைக்கென்று பெரியாரோ, அயோத்திதாசரோ உருவாக்கின அடையாளங்கள் தேவையில்லை, இடதுசாரி அரசியலின் மூலமாகவே சுயமரியாதையை அளித்திருக்க/அளிக்கமுடியும். இதைப் பற்றி நான் பிறதொரு சமயம் விரிவாக எழுதுகிறேன்.

திமுக
திமுக சோசலிஸ்ட் கட்சி என்ற பரப்புரை அன்றிலிருந்தே சொல்லப்பட்டு வருகின்றது போல. இதை அலசுவதற்கென்று மட்டுமே ஆசிரியர் ஓரிரு தனி கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்.

50 களின் ஆரம்பத்தில் காங்கிரஸின் கம்யூனிஸ்டுகளின் மீதான தீவிர அடக்குமுறை மற்றும் கம்யூனிஸ்டுகளின் திருத்தல்வாத (revisionist) மாற்றத்தின் மீதான விமர்சனத்துடன் தொடங்குகின்றார். இதனால் ஒரு மாற்று சக்தியாக கம்யூனிஸ்டுகளால் வரமுடியாமல் போனதாக சொல்கின்றார். சமூகத்தில் அன்று இருந்த சமத்துவமின்மையை தொடர்ந்து தீவிரமாக விமர்சித்ததின் மூலமாக பலதரப்பட்ட எளிய மக்களின் ஆதரவை திமுக பெற்றது. இதுதவிர தமிழ் மறுமலர்ச்சி முன்னெடுப்புகளும் பெரிய காரணம். மேற்கூறியவற்றிற்கு எந்தளவு திமுக உண்மையாக இருந்தது என்பதை பார்க்கலாம்.

இந்தியா பிராந்தியங்களின் மீது செலுத்திய ஆதிக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் தமிழ் மக்களிடையே காங்கிரஸ்/இந்திய அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதுதவிர மொழித்திணிப்பும் எதிர்ப்பலையை உருவாக்கியிருந்தது. சந்தையில் வட இந்திய ஆதிக்கத்தை விரும்பாத தமிழ் பூர்ஜ்வாக்களுக்கு இந்த எதிர்ப்பலை சாதகமாகவே இருந்தது. திமுகவின் அரசியல் இதில் யாருக்குரியதாக இருந்தது என்ற கேள்வி முக்கியமானது.

அண்ணாவின் ‘சோசலிசம்’

அண்ணா திமுகவை இடதுசாரி கட்சி என்றும், தமது அரசியலை இடதுசாரி அரசியல் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது எந்தளவு உண்மை என்பதை ஆசிரியர் பின்வருமாறு அலசுகின்றார்.

திமுகவின் ‘சோசலிசம்’ என்ற பதத்தில் பொருளாதார கட்டமைப்பு பற்றிய புரிதலே இல்லை. பிராமணர் என்பவர் மட்டுமே இங்கு எதிரி. அப்படியாக பிராமணர்கள் எதிரியாக கட்டமைக்கப்படும் திமுகவின் ‘சோசியலிசத்தில்’ பொருளாதார காரணங்களுக்கு இடம் கிடையாது, பிராமணர் என்ற அடையாளத்திற்கே பெரும் பங்கு உண்டு. ஒரு ஆதிக்க சக்தியாக இருப்பதற்கும் பொருளாதாரத்திற்கும் இருக்கும் சம்பந்தத்தை பேசுவதற்கு கூட இந்த சோசியலிசத்தில் இடம் கிடையாது.

அண்ணாவின் சோசியலிசத்தில் மூன்று வகுப்பினர் உள்ளனர்: 1. முதலாளிகள் 2. தொழிலாளிகள் 3. நுகர்வோர். இப்படியாக திமுக முதலாளி பக்கமும் அல்லாமல் தொழிலாளி பக்கமும் இல்லாமல் நுகர்வோராகிய மக்கள் பக்கம் என்பதான குதர்க்க அரசியலையும் செய்யமுடிந்தது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபொழுது அது சோசலிசம் என்பதை ஒரு ஆயுதமாக கையிலெடுத்திருக்கின்றது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி இல்லை என்பதே திமுகவின் பிரதான விமர்சனமாக இருந்திருக்கின்றது. காங்கிரஸின் பெருமுதலாளிகளுக்கு துணைபோன கலப்பு பொருளாதாரத்தை (mixed economy) தீவிரமாக விமர்சித்த அண்ணா கோரியது ‘கலப்படமில்லாத சோசலிஸ்ட் பொருளாதாரம்’, அதாவது ஆட்சியில் இல்லாதபொழுது.

பொதுவுடைமையிலிருந்து நவதாராளமயம் வரை

  • தேர்தல் அறிக்கையில் தேய்ந்த பொதுவுடைமை

தேசியமயமாக்கல் என்பது மட்டும் சோசலிசம் இல்லையென்றாலும் அதை ஒரு தோராயமான குறிகாட்டியாக எடுத்துக்கொண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களை அலசுகின்றார்.

- கட்சித் திட்ட/தேர்தல் அறிக்கை 1957: தனியாரின் இருப்பு என்பது மக்கள்நலத்திற்கு பெரும்தடை என்பதால் தொழிற்துறை தேசியமயமாக்கப்பட வேண்டும்.
- அறிக்கை 1962: தனியார்துறையில் பெரும் லாபம் ஈட்டும் தொழிலகங்கள் உரிய இழப்பீடுகளை தந்த பிறகு பொதுத்துறைக்கு கொண்டுவரப்படும். வங்கிகள், பெரும் வணிக சங்கிலிகள், திரையரங்குகள் மற்றும் போக்குவரத்து தேசியமயமாக்கப்பட வேண்டும். தொடர்ந்து தனியாரின் பங்கை குறைத்து ‘social ownership of all means of production and distribution’ அதாவது பொதுவுடைமை என்ற இலக்கை நோக்கி செல்வோம்.
- அறிக்கை 1967: வங்கிகள், போக்குவரத்துத்துறை மற்றும் திரையரங்குகள் தேசியமயமாக்கப்படும். தேவையற்ற, உபயோகமற்ற கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதி சீட்டு (permit) வழங்கும் முறை தொழிற்துறையில் இல்லாமல் செய்யப்படும்!

தேர்தல் அறிக்கையில் பேச்சுக்கு இருக்கக்கூடிய சோசலிசம் என்ற வார்த்தைக்கே இந்த நிலைமை.

மொழிப்போராட்டங்களை முன்னெடுத்த திமுக சொல்லிக்கொள்ளும் அளவு தொழிலாளர் போராட்டத்தையோ விவசாயிகள் போராட்டத்தையோ முன்னெடுத்ததில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றார். திமுக அவ்வப்பொழுது மேற்கொள்ளும் சில போராட்டங்களிலும் அடிப்படை காரணங்கள் எதையுமே அலசாமல் பாதிக்கப்பட்டவர்களை பற்றி உணர்வுபூர்வமாக பேசி அனுதாபத்தை கோருவதையே யுக்தியாக வைத்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றார். இந்த யுக்தி இன்றுவரை தொடரும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது; இன்று அதை ‘இடதுசாரிகளும்’ சேர்ந்து செய்கின்றார்கள் என்பது வேறு விடயம்.

  • திமுக ஆட்சி

அண்ணாவின் ஆட்சியை ஆசிரியர் அலசுகிறார். தொழிலாளர் நலனை பாதுகாக்கும் வண்ணம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததோடு மட்டுமல்லாமல், நெசவுத்துறையில் ஏற்பட்ட நெருக்கடியின் போது முதலாளிகளை பகைத்துக்கொள்ள விரும்பாமல் அவர்களுக்கு சலுகைகளையும் வழங்கிய அரசு, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறித்தது என்பதை குறிப்பிடுகின்றார்.

தொழிலாளர்கள் மீது சிறிது கரிசனம் கொண்ட ‘நுகர்வோரின்’ அரசிலிருந்து தொழிலாளர்களின் எதிரியாக திமுக அரசு மாறியதை அடுத்து விவரிக்கின்றார். ஆட்சியில் இல்லாத பொழுது முதலாளிகள் எப்படி அடியாட்களை கொண்டு வேலை நிறுத்தத்தின்போது தொழிலாளர்களையும் அவர்களது போராட்டத்தையும் உடைக்கின்றார்கள் என்று உணர்வுபூர்வமாக பேசிய அதே அண்ணா, தாம் ஆட்சியில் இருக்கும் பொழுது சங்கங்களில் வன்முறை அதிகமாகிவிட்டது என்றும், வேலைக்கு செல்லவிரும்புபவர்கள் (blacklegs) தொழிற்சங்கத் தலைவர்களால் மிரட்டப்படுகின்றார்கள் என்றும், நிர்வாகங்களை நோக்கி வசவுச்சொற்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றார். எனக்கு தொழிலாளர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்கின்றதா, முதலாளிகளின் பதில்களில் லாஜிக் இருக்கின்றதா என்பதெல்லாம் முக்கியமில்லை, உற்பத்திதான் முக்கியம் என்கிறார். கருணாநிதி ஒருபடி மேலே போய் மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது இந்தியாவில் தொழிலாளர் உரிமைகள் நன்றாக இருப்பதாகவும், ஆதலால் வன்முறையோ போராட்டமோ செய்வதற்கு அவசியமே இல்லை என்பதுபோலவும் பேசியிருக்கின்றார்.

தொழிற்சங்கங்களில் பிளவுண்டாக்கும் யுக்தி மற்றும் தொழிலாளர்கள் மீதான அரசின் வன்முறை
திமுக தொழிற்சங்கத்தின் மூலமாக தமக்கு உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்க பல யுக்திகளை கையாண்டிருக்கின்றது. அதில் ஒன்று திமுகவின் தொழிற்சங்கங்களை எல்லா இடத்திலும் உண்டாக்கியது. தொழிற்சங்கங்களை உருவாக்குவதில் என்ன தவறு என்ற கேள்விக்கு இந்த சங்கங்கள் எப்படியான வேலைகளை செய்தன என்று பார்க்கவேண்டும். தொழிலாளர்களை பிரிப்பது, நிர்வாகங்களுடன் முதல் ஆளாக சமாதானம் செய்துகொள்வது, குறைந்த தொழிலாளர்களையே கொண்ட சங்கமாக இருந்தாலும், மற்ற எண்ணிக்கை அடிப்படையில் அதிகபட்ச தொழிலாளர்களைக் கொண்ட சங்கங்கள் அனைத்தும் எதிர்த்தாலும் கூட திமுக சங்கம் போட்டுக்கொண்ட ஒப்பந்தந்தை அரசு இயந்திரமும் அங்கீகரிப்பது, இந்த பல சங்கங்கள் பிரச்சனையை தீர்க்க எந்த சங்கம் தலைமை சங்கம் என்பதற்கு ஒரு வரையறையை நிறுவ முன்வராமல் திமுக சங்கத்தையே முடிந்தவரை குறுக்குவழியில் முன்னிறுத்தியது, இதுபோன்ற குயுக்திகளால் குறுகிய அரசியலான தொழிற்சங்க அரசியலைக் கூட முடிந்தவரை ஒன்றுமில்லாமல் ஆக்கியது இவைதான் திமுக செய்த வேலை.

இதுதவிர கூட்டங்களையும், ஊர்வலங்களையும் தடை செய்தது, உம்மெனும் முன்னே தொழிற்சாலை வளாகங்களுக்கு போலீசை அனுப்பிவைப்பது, லத்தியடி முதல் துப்பாக்கிச்சூடு வரையான வன்முறைகளோடு போலீஸ் வண்டியிலேயே நிர்வாகத்தின் அடியாட்களையும் வளாகத்திற்கு கொண்டுவருவது, இத்தகைய அத்துமீறல்களின் மீது நீதித்துறை விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிப்பது என்ற திமுகவின் யுக்திகளை ஆசிரியர் விவரிக்கின்றார். இதில் ஒன்றிரண்டை விரிவாக பார்க்கலாம்.

  • MRF தொழிலாளர்கள் போராட்டம் மற்றும் வால்பாறை போராட்டம்

MRF தொழிலாளர்களுக்கு கூலி/சம்பள விவகாரத்தில் நிர்வாகத்துடன் பிரச்சனை ஏற்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபொழுது அரசு மேலே சொன்ன பெரும்பாலான யுக்திகளை பயன்படுத்தியிருக்கின்றது. இனிமேல் தொழிற்சாலை மூடியிருந்தால் நிர்வாகத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்ற சூழலில் வேலை நிறுத்ததிற்கு தடை விதித்திருக்கின்றது. யூனியன் தலைவரையும், போராடிய தொழிலாளர்களையும் கைது செய்திருக்கின்றது. தமது ஆட்களை வளாகத்திற்கு அனுப்பி தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பிவிட்டதான மாயையை அரசு உருவாக்க, அதை செவ்வனே பத்திரிக்கைகளும் பிரசுரம் செய்திருக்கின்றன. இதுதவிர மலையாளிகள் மற்றும் தமிழர்கள் என்று தனித்தனியாக இருந்த யூனியன்கள் பிறகு ஒரே யூனியனில் இணைந்து (திமுக யூனியனை சேர்ந்தவர்களும் இணைந்து போராடியதாக சொல்லப்படுகின்றது) போராடிய தொழிலாளர்களை மொழி உணர்வைத் தூண்டி பிரிக்க திமுக முயற்சித்திருக்கின்றது. இதற்கு எதிராக தொழிலாளர்கள் எழுப்பிய கோஷம் தமிழர்களை மலையாளிக்கு எதிராக நிறுத்தும் முதலமைச்சர் மலையாளி முதலாளியுடன் இணைந்துகொண்டதை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக இருந்தது. இதற்கெல்லாம் காரணம் நக்சலைட்டுகள் என்பதாகவும் ஒரு பரப்புரை செய்யப்பட்டு கொஞ்சம் வர்க்க உணர்வோடு போராடும் எல்லா தொழிலாளர்களுக்கும் நக்சலைட் முத்திரை குத்தும் வேலையும் நடந்தது. பெண்களை வீடு சென்று மிரட்டியிருக்கின்றது. இன்றைக்கு போராடுவதற்குத் தடையா, நாதகவின் பாசிசம், அரச வன்முறை, நக்சலைட் முத்திரை/அரசியல், இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை அடக்குதல் என்று எல்லாவற்றிற்கும் பொங்கும், என்றும் அடிப்படை விடயங்களை பேசாத ‘முற்போக்காளர்கள்’ கிட்டத்தட்ட இவையெல்லாமே பயன்படுத்தப்பட்ட திமுகவின் அடக்குமுறை வரலாறை படித்து சிந்திக்க முயற்சி செய்வது முக்கியம். இவ்வளவையும் தாண்டி இந்த போராட்டம் வெற்றி பெற்றபோது (75 ருபாய் சம்பள உயர்வுதான் இங்கு வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது), அதையும் தமது சாதனை பட்டியலில் இணைத்துக்கொள்ளவோ என்னவோ அரசு முன்னிலையில் கையெழுத்திடவேண்டும் என்று அரசு வலியுறுத்தியதை தொழிலாளர்கள் கிட்டத்தட்ட ஒருமித்த குரலில் புறக்கணித்ததில் தெரிகின்றது அண்ணாவின் ஆட்சி எப்படியான சோசலிஸ்ட் ஆட்சியாக இருந்திருக்கின்றது என்று.

மலைத்தோட்டங்களில் விளையாடிய முதலாளித்துவத்தை பற்றியும் பல மாதங்களுக்கு எந்தவித சம்பளமும் இல்லாமல் அடிமைகளாக மக்கள் நடத்தப்பட்டதை இவரது இன்னொரு கட்டுரையில் வாசிக்கலாம். காலனியாதிக்க காலகட்டத்தில் தொடங்கிய இந்த சுரண்டல் விடுதலைக்கு பிறகும் தொடர்ந்தது, முதலீட்டிய அரசுகளின் தயவில். ஒருவரை ஒருவர் மிதிக்காமல், பானைகளை மற்றும் மற்ற பொருட்களை உடைக்காமல் தூங்கமுடியாது என்றவகையில் மிகக்குறுகிய போதிய சுகாதார, தண்ணீர் வசதி கூட இல்லாத இடங்களில் பல குடும்பங்களை ஒன்றாக தங்கவைத்தன நிர்வாகங்கள். தற்காலிகமாக பணியிலமர்த்தி எதற்கும் குரல்கொடுக்கமுடியாதவாறு, கொடுத்தால் வாழ்வாதாராமே போய்விடும் என்ற பயத்தை உருவாக்கி வைத்திருப்பது அன்றிலிருந்தே நிகழ்ந்துகொண்டுதான் வருகின்றது. இதில் பெரும்பாலும் பணியமர்த்தப்பட்ட பெண்கள் தவிர சிறார்களும் இருந்தனர் என்பது முக்கியம்.

இத்தகைய பின்னணியில் இந்த மக்கள் 1972 இல் போராடியபொழுது திமுக அரசு போலீஸ் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. லத்தியடி, கண்ணீர் புகை குண்டு, சித்திரவதை செய்வது முதல் பாலியல் பலாத்காரம் வரை. இதுதவிர NLC போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு முதல் CPI(M)ஐ சேர்ந்த சிந்தன் மீதான ஆளும்கட்சியை சேர்ந்த ரௌடிகளின் கொலைவெறி தாக்குதல் என்று பல்வேறு அடக்குமுறைகள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இந்த ட்விட்டர் திரியில் வாசிக்கலாம். இன்று நாம் இங்கும் மற்ற இடங்களிலும் சுட்டிக்காட்டும் ஏன் அடிப்படை சுதந்திரத்தை பற்றியான விழிப்புணர்வை, புரிதலை இடதுசாரிகள் பெருமளவில் முன்னெடுக்கவில்லை என்ற கேள்வியை மைதிலி சரியாக எழுப்புகின்றார்.

திமுக ஒரு நிலப்பிரபுத்துவ மற்றும் நவதாராளமய (neoliberal) கட்சி

இந்த ‘மாற்றங்களுக்கான’ காரணம் திமுக நவதாராளமய கட்சி என்பதாகும். கண்ணைத்திறந்து பார்க்கும் எவருக்கும் தெரியக்கூடிய விடயமே எனினும் தமிழ் சூழலில் பெரும்பாலானோர் கண்களை மூடிக்கொண்டிருப்பது போல பாவனை செய்வதால் மைதிலி இதை உதாரணங்களுடன்/தரவுகளுடன் நிறுவும் கட்டுரை மிக முக்கியமானதாகின்றது. நில சீர்திருத்தத்தை பற்றி இந்தப் பதிவிலும் வாசிக்கலாம். நில மறுபகிர்வு, அல்லது கூட்டு உடைமை என்பதெல்லாம் காணாமல் போய் மிக சில மேம்போக்கான மாற்றங்களுடன் நில சீர்திருத்தம் எப்படி நின்றுவிட்டது, மற்றும் கோவில்நிலங்களை எதிர்தரப்பில் இருந்தபொழுது அணுகிய விதத்திற்கும், ஆட்சிக்கு வந்தபிறகு அணுகிய விதத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை ஆசிரியர் விமர்சிக்கின்றார். நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக போலீசை இறக்கி மக்கள் போராடாதவண்ணம் பார்த்துக்கொண்டதில் இருந்து, தஞ்சையில் நிலவிய சூழலை அலசிய, 10 சதவிகித கூலி உயர்வை பரிந்துரைத்த கணபதியா கமிஷன் அறிக்கையை வெளியிடாமல் தள்ளிப்போட்டது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4000 விவசாய கூலிகளை கைது செய்தது, வெளியாட்களை கொண்டு கூலி உயர்வு போராட்டத்தை நசுக்கி ஒன்றுமில்லாமல் செய்த நிலப்பிரபுக்களின் யுக்தியை கண்டும் காணாமல் சென்றது, வர்க்கபேத மற்றும் சாதிய கொலைகளை கண்டும்காணாமல் சென்றது மற்றும் போலீஸ் வன்முறைகள் வரை அண்ணா காலத்தில் நிகழ்ந்திருக்கின்றது. திமுக சாதனை பட்டியலில் நாம் காண்பவை, பரப்புரையில் திரும்பத்திரும்ப ‘சமூக நீதி’ என்று விற்கப்படுபவை இவற்றை ‘a few crumbs have been thrown’ என்று மிகச் சரியாக விவரிக்கின்றார் மைதிலி.

The author also rightly mentions among others money power, the manipulation of bureaucracy and the police in its favor, using the state machinery to strengthen itself and last but not the least its comprehensive propaganda apparatus which also includes the cultural medium as reasons for DMK’s success.

பொதுவுடைமை பேசிவந்த திமுக எப்படி கூட்டுத்துறை என்பதை தழுவி தனியாருக்கு நிறைய வாரி வழங்கியது என்பதை தரவுகளுடன் நிறுவுகின்றார். அவர் அலசும் சில முதலாளிகள், அவர்களின் பங்கு, பொதுத்துறை மற்றும் வங்கி தந்த பணம், இதில் முதலாளிகள் அடைந்த லாபம் என்பதையெல்லாம் வாசித்தால் தலைசுற்றுவது நிச்சயம். வெளிநாட்டு முதலாளிகள், தாம் எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் ‘பணியா’ முதலாளிகள் மற்றும் உள்ளூர் ‘பரம்பரை’ மற்றும் புதிய பெருமுதலாளிகள் என்று முதலாளிகளின், முதலீட்டிய அரசாக செயல்பட்டதை உதாரணங்களுடன் நிறுவுகின்றார். உழைக்கும் வர்க்கம் வெறும் கூலி உயர்வை கேட்டுப் போராடிய நேரம் (பல) நூறு மடங்கு லாபத்தை அனுபவித்துக்கொண்டிருந்தனர் முதலாளிகள். அதைப்பற்றிய தரவுகளைத்தான் மைதிலி புத்தகத்தில் தருகின்றார். திமுக அரசு, அது அண்ணாவினுடையதோ அல்லது கருணாநிதியுடையதோ, இந்த முதலாளிகளின் பக்கம் நின்று வெறும் கூலி உயர்வு போராட்டத்திற்கு கூட ஆதரவு தராமல் போலீஸ் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. மற்ற இடங்களில் குறைந்தபட்சம் இவை பேசுபொருளாவது ஆகியிருக்கும் சூழலில் தமிழகத்தில் இந்த குறுகிய தரவுகளை வாசிப்பதற்கே பெரும் தேடலில் ஈடுபடவேண்டிய அவலநிலையை, முக்கியமாக அறிவுஜீவி மற்றும் மீடியா தளங்களின் அவலநிலையை எங்குபோய் முறையிடுவது?

சாதிய மற்றும் அரசியல் வன்முறைகள் மற்றும் படுகொலைகள்

கீழ்வெண்மணியை ஒட்டி திமுக மற்றும் பெரியாரின் மீதான விமர்சனங்கள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக நேர்மையற்ற எதிர்வினைகளும், பதில்களும் தரப்பட்டிருக்கின்றன. பொதுவாக தேர்தல் அரசியலில், அதிலும் சாதிய சமூகத்தில் இயங்கக்கூடிய ஒரு கட்சிக்கு இருக்கக்கூடிய சிக்கல்களை பற்றியும், தவிர்க்க முடியாத சமரசங்களை பற்றியுமான வியாக்கினம் இதில் இருக்கும். இதுதவிர விமர்சனம் வைப்பவர்கள் இடதுசாரி அரசியலை பேசிவிட்டால் அவர்களது அரசியலை ‘புனித’ அரசியல் என்று சொல்வதும் நடக்கும். கீழ்வெண்மணி என்பது ஒரு நாளைய நிகழ்வல்ல என்பது ஓரளவு நேர்மை உள்ள அரசியலை உடைய எவருக்கும் எளிதாக விளங்கும். அப்படியான அரசியல் புரிதல் இல்லாத நமது சூழலில் இந்த புத்தகம் அத்தனை எதிர்வினையாளர்களும் வெட்கித்தலைகுனியும் புதிய தரவுகளை அளிக்கின்றது. வெண்மணியில் இந்த படுகொலைக்கு முன் நிலவிய இறுக்கமான, பதட்டமான சூழலையும், இடதுசாரிகள் மூன்றுபேர் வெண்மணி சம்பவத்திற்கு முன் கொல்லப்பட்ட தகவலையும் அளிக்கின்றது. அதாவது, கீழ்வெண்மணி அரசு நினைத்திருந்தால் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய சம்பவம் என்ற முகத்திலறையும் உண்மையை இந்த தரவுகளின் மூலமாக நம் முன் வைக்கின்றது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதி

நீதிக்கட்சி, பெரியார், திராவிட அரசியல் என்று திராவிட வரலாற்றை பற்றிய அவரது பார்வையை தர்க்கங்களோடு மைதிலி புத்தகத்தில் தந்துள்ளார். திமுக அதிமுக எமர்ஜென்சி என்று எல்லா காலகட்டத்திலும் நிகழ்ந்த அடக்குமுறைகளை இந்த புத்தகத்தில் மைதிலி ஓரளவு எழுதியிருக்கின்றார். அடையாள அரசியல், மொழி/கலை/கலாச்சாரம் மற்றும் ‘சமூக நீதி’ என்று திமுக கட்டியெழுப்பிய அதே சட்டகத்திற்குள் உட்கார்ந்து திமுகவை சுயவிமர்சனம் செய்கின்றேன் பேர்வழி என்று நேர்மையற்ற மற்றும்/அல்லது குறுகிய விமர்சனங்களை போன மற்றும் இன்றைய தலைமுறையை சார்ந்த ‘முற்போக்காளர்கள்’ (இவர்களே விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில்தான் உள்ளனர் என்பது வேறு) செய்துகொண்டிருக்கும் அவல நிலையில் அடிப்படை விடயத்தை அணுகி சமூக நீதி என்ற மாயையை பற்றிய உண்மையை மைதிலி சில தசாப்தங்களுக்கு முன் முன்வைத்திருக்கிறார் என்பது முக்கியம். மைதிலி மட்டுமல்லாது மைதிலி சிபிஎம் இல் இணைய காரணமாயிருந்த சிந்தன் முதல் நமக்கு பெயர் தெரியாத பலருக்கும் இந்தப்புரிதல் இருந்திருக்கலாம். மையநீரோட்ட இடதுசாரி அரசியலில் இருக்கும் முரண்களை பேசி, இடதுசாரி கட்சி அரசியலில் விமர்சிக்கப்படவேண்டிய பல போக்குகளை விமர்சித்து, அடிப்படை விடயங்களில் சமரசங்களை கொள்ளாத வகையில் அதை மாற்றியமைத்து அது முடியாத பட்சத்தில் பெரும் மாற்று அமைப்பை உருவாக்கி என்று செய்யவேண்டிய எத்தனையோ இருக்கும் நேரத்தில், பழைய இடதுசாரி அரசியலைக் கூட தேடவேண்டிய நிலைக்கு தமிழக இடதுசாரி அரசியல் வந்திருப்பதுதான் நிதர்சனம்.

இந்த புத்தகத்தில் மைதிலி நிறுவும் ஒரு அடிப்படை உண்மை, இடதுசாரி அரசியல் மற்றும் திராவிட அரசியல் இவற்றிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது. நான் திராவிட அரசியல் ஆதரவாளன் மற்றும் இடதுசாரி என்று இங்கு உலவிக்கொண்டிருக்கும் ‘முற்போக்காளர்களின்’ நேர்மை என்னவென்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றார். இரண்டாம் பகுதியில் மைதிலி எழுதியதில் பிடித்தது மற்றும் அவர்மீதான விமர்சனங்களையும் மூன்றாம் பகுதியில் மேற்கூறிய ‘முற்போக்கு’ அரசியலின் அவலத்தையும் எழுதுவதாக உத்தேசம்.

--

--